ஸ்பெஷல்
Published:Updated:

நலம் வாழ சில வழிகள்

சத்யராஜ்குடும்பம்

பாசிட்டிவ் எனர்ஜி தரும் எம்.ஜி.ஆர்

நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன். அவர் படத்தில் வரும் பாடல்களை எழுதினது கவிஞர்கள்தான் என்றாலும், திரையில் எம்.ஜி.ஆர் பாடுவதைப் பார்த்தாலே, எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்கும். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் ஒரு பாடலில், ‘உள்ளம் மட்டும் அள்ளிக்கொள்ளும் மனம் வேண்டும், அது சொல்லும்வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்’ என்று ஒரு வரி வரும். என் வாழ்க்கையின் தாரகமந்திரமே அதுதான். நம்மைச் சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி இருந்தால்தான், நாம் பாசிட்டிவாகச் செயல்பட முடியும். சந்தோஷமோ, துக்கமோ, என் மனநிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும், உடனே எம்.ஜி.ஆர் பாடல்களைக் கேட்பேன். பாசிட்டிவ் எனர்ஜி வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். அதுதான் நமது இலக்குகளை அடைய, நம்மை முன்னெடுத்துச் செல்லும்.

ஸ்ட்ரெஸ் நீக்கும் உடற்பயிற்சி

தினமும் ஒரு மணி நேரம் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வேன். எனக்கு இப்போ 60 வயசு. என் உடல் ஃபிட்டாகவும், தசைநார்கள் வலுவாகவும் இருக்கணும்னு உறுதியா இருப்பேன். ஹெல்த்தியான வாழ்க்கைக்கு, தினமும் ஒரு மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி உதவும். கூடவே, கொஞ்சம் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ் பயிற்சி செய்வேன். மூச்சுப்பயிற்சியும் செய்வேன். புஷ் அப் செய்வதால், உடல் வலுவாவதுடன் சுவாசப்பகுதியும் பலமாகும். ஸ்ட்ரெஸ் இருக்குன்னு டாக்டரிடம் போனால், எண்டார்பின் சுரப்பதற்காக ஒரு மாத்திரை எழுதித் தருவாங்க. ஆனால், நாம் உடற்பயிற்சி செய்யும்போது, எண்டார்பின் தானாகவே சுரக்க ஆரம்பிச்சிடும். ஒருமணி நேரம் எல்லோரும் கட்டாயம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குவது ரொம்ப நல்லது.

நலம் வாழ சில வழிகள்

தண்ணீர் அவசியம்

எது கிடைச்சாலும் அளவாகச் சாப்பிடுவேன். எந்த உணவையும் ஒதுக்க மாட்டேன். வேகவைத்த காய்கறிகள், கீரைகள் உணவில் அதிகமாக எடுத்துப்பேன். அசைவ உணவுகள்  கொஞ்சமாக எடுத்துப்பேன். அதையும் மசால், உப்பு, காரம் சேர்க்காமல், நீராவியில் வேகவைச்சுதான் சாப்பிடுறேன். ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிச்சிடுவேன். தினமும் நிறையத் தண்ணீர் குடித்தாலே, உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கிடும். தேவை இல்லாத மனப்பதற்றமும் வராது.

செல்ஃப் மெடிட்டேஷன்

ஓஷோவின் தத்துவப்படி செல்ஃப் மெடிட்டேஷன் ரெகுலரா பண்றேன். ஏதாவது ஒரு அரங்கில் பலர் மத்தியில் அமர்ந்திருக்கும்போது, தலையில் அரிப்புவந்தாலும் நாம் சொரிய மாட்டோம். இதே மாதிரி, பல விஷயத்துல அவங்க என்ன நெனைப்பாங்க, இவங்க என்ன சொல்லுவாங்கன்னு  நினைச்சிட்டே செயற்கையாக வாழ்வதால், மனசுக்கும் உடலுக்கும் விடுதலை கிடைக்கிறதே இல்லை. தினமும் அரை மணி நேரம் ரூம் கதவைச் சாத்திட்டு, திடீர்னு கத்துவேன், சத்தம் போடுவேன், டான்ஸ் ஆடுவேன், அழுவேன், என்னேன்ன தோணுதோ... எல்லாத்தையும் செய்வேன். அப்புறம் அப்படியே நெடுஞ்சாங்கிடையா விழுந்து, படுத்தபடி அரை மணி நேரம் அமைதியாயிடுவேன். இந்தப் பயிற்சி செய்தால் மனசுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

மூட நம்பிக்கை இல்லேன்னா, நோ டென்ஷன்

நான் பெரியார் தொண்டனா வாழ்றவன். எனக்கு மூட நம்பிக்கைகள் அறவே கிடையாது. நல்ல நேரத்தில் நம்பிக்கை இல்லாததால், என்ன தோணுதோ அதை எந்த நேரத்திலும் செய்வேன். எந்த இடத்துக்குப் போகணும்னாலும், முன்கூட்டியே அமைதியாக இயற்கையை ரசிச்சவாறே போயிடுவேன். லேட்டாகப் போகாம இருந்தாலே, பாதி டென்ஷன் இல்லாமல் போயிடும். எனக்கு வயசாகிடுச்சு, நான் டூயட் பாடி ஹீரோவாக நடிச்சா படம் ஓடாது என, நான் ஒரு நிமிஷமும்  யோசிச்சதே கிடையாது. எனக்கு வயசாகிடுச்சு, என்னைவிட அழகான ஹீரோக்கள் வந்துட்டாங்க, டிரெண்ட் மாறிடுச்சு, இனிமே நம்ம வயசுக்கு ஏற்ற ரோல்  செய்யணும் எனும் தெளிவு இருக்கு. இருக்கிற எதார்த்தத்தை ஏத்துக்கிட்டு, எப்பவும் பிராக்டிக்கலாக, மூட நம்பிக்கை இல்லாம இருந்தாலே, மனசு லேசாகிடும்.

மனசுக்கு வயசு 18

30 வருஷத்துக்கு முன்னாடி  ‘காக்கிசட்டை’ பட ஷூட்டிங்கில் எப்படி எல்லோரையும் கிண்டல் செய்துட்டு இருந்தேனோ, அதே மாதிரிதான் இப்பவும் இருக்கிறேன். வயசுக்கு ஏற்றப் பக்குவம் இருக்கணுமே தவிர,  நமக்கு நாமே செயற்கையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. வாரத்துல ரெண்டு நாள், என் நெருங்கிய நண்பர் கவுண்டமணி அண்ணனோட பேசிடுவேன். அவரோட பேசினாலே செம ஃப்ரெஷ் ஆகிடுவேன். எனக்கு கவுண்டமணி இருக்கிற மாதிரி, உங்களை ரிலாக்ஸ் செய்யவும் யாராவது இருப்பாங்க. அவங்களோடு தொடர்ந்து பேசுங்க, பகிர்ந்துக்கோங்க. உடம்புக்குத்தான் வயசு, மனசுக்கு இல்லவே இல்லை!

- பு.விவேக் ஆனந்த்