ஸ்பெஷல்
Published:Updated:

விடாது விக்கல்!

ஹெல்த்

விடாது விக்கல்!

- கார்த்திகேயன், குடல், இரைப்பை மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர்

 பொதுவாக, விக்கல் வரும்போது அதை நிறுத்த அருகில் போய் பயமுறுத்துவோம். உடனே விக்கலும் நின்றுவிடும். பயமுறுத்துதல்தான் விக்கலுக்குத் தீர்வா? விக்கல் ஏன் வருகிறது? விக்கல் வந்தால், என்ன செய்ய வேண்டும்?

விக்கல் ஏன் வருகிறது?

“நெஞ்சுப் பகுதியையும் வயிற்றையும் பிரிக்கும் வகையில் உதரவிதானம் (Diaphragm) என்ற தசை இருக்கிறது.  அதில் ஏற்படும் துடிப்புதான் விக்கலாக நமக்குத் தெரிகிறது. அவ்வாறு துடிப்பு ஏற்படும்போது, நுரையீரல் சுருங்கி விரியும் செயல்பாட்டில், சிறு மாற்றம் உண்டாகி தொண்டையின் குரல் நாளம் வழியாக சத்தத்துடன் விக்கல் வருகிறது. உணவை வேகமாகச் சாப்பிடும்போதும், வயிறு நிரம்பச் சாப்பிடும்போதும், வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்தும்
போதும், மது குடிக்கும்போதும் விக்கல் வருகிறது.  இது சில நிமிடங்கள் வரை நீடித்துவிட்டு, பிறகு நின்றுவிடும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை.”

விடாது விக்கல்!

பயமுறுத்தினால் விக்கல் நிற்பது ஏன்?

“பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன.  இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.”

தீர்வு?

“விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணம் என எண்ணி, கவனக்குறைவாக இருத்தல் கூடாது.

உணவுக்குழாயில் பிரச்னை, வயிறு தொடர்பான பிரச்னை,  நிமோனியா, மூளையில் கட்டி,  பின் மூளையில் பக்கவாதம் ஏற்படுதல், உடலில் சோடியத்தின் அளவு குறைதல், சிறுநீரகத்தில் குறைபாடு போன்ற பிரச்னைகளின் அறிகுறியாகவும் விக்கல் இருக்கலாம்.  எனவே, தொடர் விக்கலுக்கு மருத்துவரிடம் செல்வதுதான் சரி.

90 சதவிகித தொடர் விக்கல் பிரச்னைக்குக் குடல் தொடர்பான  பிரச்னைகளும், 10 சதவிகித தொடர் விக்கலுக்கு நரம்பு தொடர்பான  பிரச்னைகளும் காரண
மாக இருக்கலாம்.”

 - மினு