Published:Updated:

அந்தப்புரம் - 3

டி.நாராயண ரெட்டி, பாலியல் மருத்துவர்ஹெல்த்

அந்தப்புரம் - 3

பாலியல் தொடர்பான வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

ஷ்வின் இப்போது இன்ஜினீயரிங் முடித்துப் பெரிய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அவனுடைய சிவப்பான உடலும் மீசையும் ஐந்தரை அடி உயரமும் அத்தனை அம்சம். காதல் பருவம்.

ஒரு பெண்ணைக் காதலிக்க நினைத்து, தயக்கமான முயற்சிகள் செய்தான். போன் செய்து பேசுவதா? எஸ்.எம்.எஸ். அனுப்புவதா? காபி ஷாப்புக்கு அழைப்பதா? முடிவெடுப்பதற்குள், காலம் கடந்துவிட்டது.

அவள் வேறு யாரையோ காதலிப்பது  தெரிந்தது. கவலையில் கொஞ்சம் பியர் குடித்தான். கொஞ்ச நாளில் வேறு  ஒருத்தி ரிசப்ஷனின்ட்டாக சேர்ந்த
போது, ‘அட, காதலிக்க வேண்டியவள் இவள்தான்’ என முடிவு எடுத்தான். அடுத்த வாரம் முதல்  காதலிக்கலாம் என்ற அலைகழிப்பிலேயே ஆறு மாதங்கள் ஓடின. அதற்குள் அவள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டாள்.

துணிச்சலில் ஏதோ கம்மியாக இருந்தது. ‘‘பெண்ணைப் பார்த்தோமா, வேலையை முடித்தோமா என்று இல்லாமல் பல்வேறு தயக்கங்களுடன் சிக்கியா தவிப்பது?” என்று அலுவலகத்தில் ஒருத்தன் அஷ்வினை உசுப்பேத்தினான். காதலிப்பதா,  வேலையை முடிப்பதா? எது சரி?

அவனுக்கு அலுவலகத்தில் பலருடனும் பேசவும் எல்லாம்  தெரிந்தவன் போல காட்டிக்கொள்ளவும் ஈடுபாடு இருந்தது. குறிப்பாகப் பெண்களிடத்தில் பேசுவதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அஷ்வினுக்கு  நிறைய உற்சாகம்  இருந்தது. ஆனாலும்,  தான் அதற்குத் தயாராகிவிட்டோமா என்பது கோடி ரூபாய் கேள்வியாக இருந்தது.

அப்போதுதான் அந்த அறிவிப்பைப் பார்த்தான். பேருந்து நிறுத்தத்தில், வழித்தட எண்களை எல்லாம் மறைத்தபடி இருந்தது அந்த மர்மமான போஸ்டர்.

‘‘இந்திரியம் ஒழுகுகிறதா? வெட்டைச் சூடா, வெள்ளையா? இளம் வயதில் அறியாமல் செய்த தவறா? இல்லற வாழ்க்கையில் பயமா? உறுப்பு சிறுத்து இருக்கிறதா? வருந்த வேண்டாம்...’’ எனும் வாசகங்கள் தனக்காகவே எழுதப்பட்டதாகத் தோன்றியது.

அந்தப்புரம் - 3

தியேட்டரில், பக்கத்தில் சிறுநீர் கழிப்பவனின் உறுப்பை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அந்த சந்தேகம் வலுத்தது. தன்னுடையது மற்றவர்களுடையதைவிடச் சிறியதாக இருப்பதாக நினைத்தான்.

இந்த நேரத்தில் அவனுக்குக் கல்யாண ஏற்பாடு வேறு. கல்யாண ஆசையும் கல்யாண பயமும் அவனுக்கு ஒரு சேர இருந்தது. இவ்வளவுச் சிறிய உறுப்பைப் பார்த்து, மனைவி சிரிப்பாளோ என்று பயம். மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா என்ற கவலை அதிகரித்தது.

“அடக் கடவுளே! நமக்குக் கல்யாணம் ஒரு கேடா?” அஷ்வின் வெளியில் எவ்வளவு உற்சாகமாக நடித்தானோ, அந்த அளவுக்கு நிஜத்தில் நடுங்கிப்போயிருந்தான்.

ஏன்? எதற்கு? எப்படி?

அஷ்வினுக்கு ஏற்பட்ட அச்சம் ஏன்? நம் உறுப்பு பலவீனமாகிவிட்டது என்று அவன் அஞ்சுகிறான். மனைவியை மகிழ்விக்க முடியாவிட்டால், அவனுடைய ஆண்மைக்கு இழுக்கு என்ற அச்சம். முதலில் உறுப்பு என்கிறோமே... அது என்ன என்று பார்ப்போம்.

ஆண்களுக்கான இனப் பெருக்க உறுப்பு, சிறுநீர் கழிக்கும் உறுப்பாகவும் இருக்கிறது. நிறைய ஆண்களுக்குத் தங்கள் உறுப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால்தான் தியேட்டரில் சிறுநீர் கழிக்கும்போது, பக்கத்தில் கழிப்பவரின் உறுப்போடு அதை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். எல்லோருடைய உறுப்பும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்பத் தடிமனிலும் நீளத்திலும் வித்தியாசமானது.  அதற்கும் உடல் இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை. தடிமனும் நீளமும் குறைவாக உள்ளவர்கள் இன்பம் வழங்குவதில் குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்த உறுப்பு பெண்ணின் உறுப்பினுள் நுழைந்து இயங்கும் போதுதான் ஆணும் பெண்ணும்  இன்பம் அடைகிறார்கள். அதைப் பற்றி விரிவாகப் பிறகு பார்ப்போம். மனம், செக்ஸ் கிளர்ச்சி அடையும்போது, ஆணின் உறுப்பினுள் ரத்தம் நிரம்புகிறது. அதனால்தான் விரைப்புத்தன்மை ஏற்படுகிறது.

அந்தப்புரம் - 3

உறுப்பு எல்லா நேரங்களிலும் விரைப்புடன் இருப்பது இல்லை. பெரும்பாலும் சாதாரண ரப்பர் குழாய்போலத்தான் இருக்கும். விரைப்புத்தன்மை அற்ற உறுப்பின் நிலையை ஃப்ளாஸிட் (Flaccid) என்று அழைக்கிறோம். சுருங்கிய நிலையில் சிறியதாக இருக்கும் உறுப்பு, விரைப்பு நிலையில்  3 முதல் 5 அங்குலம் வரை நீளும். உடம்பின் ரத்த ஓட்டத்தில் ஒரு பகுதி, ஆண் உறுப்புக்குச் சில நிமிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. அப்போது உறுப்பு மேல் நோக்கி உயர்ந்து நிற்கும். ஆண் உறுப்பு பற்றி மேலும் சில தகவல்களை அடுத்த இதழில் சொல்கிறேன்.

- ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

பொதுவாக ஆண்குறி எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?

நீளமும் தடிமனும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இரண்டு இன்ச் நீளம் இருந்தால் போதும் அது தன் கடமையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். விரைப்புக்கு முன், என்ன அளவில் இருந்தாலும், விரைப்புக்குப் பின், சராசரியாக நாலரை அங்குலத்தில் இருந்து, ஐந்தரை அங்குல அளவுக்கு நீள்கிறது என்பதுதான் மருத்துவ உண்மை.

நிஜமாகவே இரண்டு அங்குல அளவு நீளம் இருந்தால் போதுமா?

பெண்குறியின் ஆழம், சராசரியாக ஆறு அங்குல அளவு இருக்கும். ஆனால், பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குல ஆழத்தில்தான், உணர்வுகளைத் தூண்டும் நரம்புகள் முடிகின்றன. அதற்கு அடுத்த நான்கு அங்குலத்தில் உணர்வுகளைத் தூண்டும் பகுதி இல்லை. ஆக, ஆண்குறி இரண்டு அங்குலம் இருந்தாலே பெண்களுக்குத் திருப்தி தருவதற்குப் போதுமானது.

ஆண்குறியின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?

தடிமனும் முக்கியமானது இல்லை. பெண்குறி சுருங்கவும் விரியவும் கூடியது. ஒரு விரல் நுழையும் அளவில் இருந்து குழந்தையின் தலை வெளியே வரும் அளவுக்கு, அது சுருங்கவும் விரிவடையவும் செய்யும். ஆகவே, எந்த அளவு தடிமன் இருந்தாலும் பிரச்னை இல்லை.