ஒரு துளி நீர் மழையாகிறது! ஒரு துளி ரத்தம் உயிராகிறது!
விபத்தில் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமே ரத்த விரயம்தான். தேவைப்படும் நேரத்தில் ரத்தம் செலுத்தப்பட்டிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். உயிர் காக்கும் பணியில் ரத்தத்தின் தேவையைக் கருத்தில்கொண்டு, தொடர் ரத்ததான முகாம்களை நடத்த டாக்டர் விகடன் திட்டமிட்டிருக்கிறது. ரத்தமின்றி ஒரு குடும்பமும் தன் நேசிப்புக்கு உரியவர்களை தொலைத்துவிடக் கூடாது என்கிற நல்ல கனவோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, உயிர் காக்கும் பயணம்.

பயணத்தின் முதல் அடியாக, விகடன் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி, ரத்ததான முகாமை நடத்தினோம். விகடன் குழும ஊழியர்கள் அனைவரும் விருப்பத்தோடு முன்வந்து ரத்ததானம் அளித்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் அழ.மீனாட்சிசுந்தரம் ஆர்வத்தோடு கலந்துகொண்டு முகாமை வழிநடத்தினார். விகடன் ஊழியர்கள் 130 யூனிட்கள் ரத்தத்தை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினார்கள்.
ரத்ததான முகாமை அடுத்தடுத்து கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடமும் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருக்கிறோம். முழுவதும் சேவை நோக்கோடு டாக்டர் விகடன் இந்தப் பயணத்தை முன்னெடுத்திருக்கிறது. ரத்தத்தை பணம் செலுத்தி வாங்க முடியாத ஏழை நோயாளிகள் மட்டுமே பயன்பெற வேண்டும், என்கிற நோக்கத்தில் அரசு மருத்துவமனை, அரசு ரத்த வங்கிகளுக்கு மட்டுமே ரத்தத்தை கொடையாக அளிப்பது என முடிவு செய்திருக்கிறோம். இந்த உயிர்காக்கும் பயணத்தில் இணைந்து செயல்பட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
விவரங்கள் விரைவில்...