Published:Updated:

அலைபாயுதே... - 3

ப்ரியா தம்பிகுடும்பம்

அலைபாயுதே... - 3

திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சித்ராவுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது. மருத்துவர் அதை உறுதிசெய்த நொடியில் இருந்து, அவளுக்குள் உற்சாகம் இறக்கைகட்டிப் பறந்தது. இனி வாழ்வில் எல்லா நாளும் சந்தோஷம்தான் என நினைத்தாள். காலையில் எழுந்தால், உற்சாகத்துக்குப் பதில் சோகம் அப்பிக்கொண்டது. “இத்தனை வருடங்கள் கழித்து அம்மாவாகப்போகிறேன், எனக்கு ஏன் சந்தோஷமே வரவில்லை’’ என்கிற கேள்வி சித்ராவை மன அழுத்தத்தில் தள்ளியது.

மனதைத் திருப்ப வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்தினால், சட்டென மனம் குழந்தை மீது திரும்பி, குழந்தையை நேசிக்கத் தூண்டியது. அதே நாள் மாலையில் சட்டென எல்லாவற்றின் மீதும் மீண்டும் வெறுப்பு. சித்ராவை வாழ்த்த உறவினர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் சந்தோஷமாகச் சிரிக்க சித்ராவால் முடியவில்லை. எத்தனை முயன்றும் மனம் ஏதோ ஒரு வெறுமையில், சோகத்திலேயே இருந்தது.

சித்ராவிற்கு தன் மீதே கோபம் வந்தது. “குழந்தை இருக்கா?’’ என யாராவது கேட்டுவிடுவார்களோ என்று எவ்வளவு பயம் இருந்தது? இன்றைக்கு சந்தோஷமாக, “ஆமா நான் பிரக்னென்டா இருக்கேன்” எனச் சொல்லாமல் ஏன் எரிச்சலாக இருக்கிறேன், எனக்கு என்னாயிற்று என யோசிக்க மன அழுத்தம் இன்னமும் அதிகமானது.

அலைபாயுதே... - 3

சந்தோஷம், சோகம், குழப்பம், தனிமை மீண்டும் சந்தோஷம் என மாறி மாறி வரும் மனநிலையை சித்ராவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கணவனிடம் இதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றால், அவரைப் பார்த்தாலே கோபமாக வந்தது. “நல்லாத்தான இருந்தா, திடீர்னு இவளுக்கு என்னாச்சு?’’ என அவரும் அவள் அருகில் வரவே பயந்தார். “மூட் நல்லா இல்லையா?’’ என்கிற சாதாரணக் கேள்விகூட, சித்ராவை எரிச்சல்படுத்தியது. “ஆமா நல்லா இல்லை, என்ன பண்ணப்போறீங்க? வேலையைப் பார்த்துட்டு போங்க” என சிடுசிடுத்தாள்.

கருவுறும் பெண்களில் நிறையப் பேர் சித்ராவைப் போலத்தான் இருக்கிறார்கள். காரணமற்ற பயம், கோபம், மகிழ்ச்சி என ஊஞ்சலாடும் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். கருவுற்றிருக்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாறுபாடே இந்த தடுமாற்றத்துக்குக் காரணம். கூடவே, எதிர்காலம் குறித்த பயம், தன்னால் குழந்தையை வளர்க்க முடியுமா என்கிற குழப்பம், ஒரு குழந்தையை வளர்க்கும் அளவுக்கு பொருளாதார நிலை உள்ளதா என்கிற யோசனை, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டுமே என்கிற கவலை எல்லாம் சேர்த்து அம்மாக்களின் மனநிலையை ஊஞ்சலாடவைத்துவிடுகிறது.

இந்த பிரச்னையைப் புரிந்துகொள்ளாமல், “இவ ஏன் இப்படி கத்திக்கிட்டே இருக்கறா, அதிசயமா இவ மட்டும்தான் குழந்தை பெத்துக்கப் போறாளா?” எனக் குடும்பம் எரிச்சலைக் காட்டினால், கருவுற்ற பெண்களின் நிலை பாவம்.

சில பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு இந்த மூட் ஸ்விங் வரக்கூடும். எப்படா குழந்தையைக் கண்ணால பார்க்கப்போறோம் எனக் காத்திருக்கும் பெண்கள்கூட, குழந்தை பிறந்ததும் அதைப் பார்க்க மறுத்துவிடுவது இதனால்தான். குழந்தை பிறந்ததும் தனிமையாக உணர்வது, பால் கொடுக்க மறுப்பது, எங்காவது ஓடிவிடலாமா எனத் தோன்றுவது எல்லாவற்றிற்குப் பின்னாலும் ஹார்மோன்களின் மாயாஜாலம் இருக்கிறது. கூடவே, நம்மால் பொறுப்பான அம்மாவாக இருக்க முடியாது, கணவருக்குத் தன் மீது அன்பு இருக்காது போன்ற காரணமற்ற பயங்களும் ஆழ்மனதில் தோன்றி அவர்களை ஆட்டுவிக்கிறது.

அலைபாயுதே... - 3

இது தற்காலிகமானதுதான். பலருக்குத் தானாகவே சரியாகக்கூடியதும்கூட. இயற்கையில் தாயாகும் ஒவ்வோர் உயிருக்கும், தன் குழந்தையைக் காத்துக் கொள்ளும் சக்தி இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். மனநிலையில் ஏற்படும் மாற்றத்தையும், அதைக் கடக்க முயற்சி செய்வதையும் கணவரோடு அல்லது நண்பர்களோடு வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிப்பது, இயற்கையை ரசிப்பது அமைதியான இடங்களுக்குப் பயணிப்பது என இந்த மனநிலையை எளிதில் தாண்டிவிடலாம். கருவுற்ற காலத்தில் செய்யவேண்டிய உடற்பயிற்சியும் இந்த மனநிலையில் இருந்து வெளிவர உதவும். யோகா, தியானம் போன்றவற்றைப் பழகிக்கொள்வதும், இந்த மனமாற்றங்கள் இயல்பே என ஏற்றுக்கொள்வதும் ஊஞ்சலாட்டத்தைத் தாண்டியும், பிரசவ காலத்தை மகிழ்ச்சியாக்கும்.

- ஊசலாட்டம் தொடரும்