ஸ்பெஷல்
Published:Updated:

‘ஐ’ டாக்டர் ஃபேமிலி

குடும்பம்

‘ஐ’ டாக்டர் ஃபேமிலி

‘ரஜினிகாந்தா’ என்றால் இந்தியில் சம்பங்கி மலர். குழல் போன்ற வடிவில் மெலிதாக, கவர்ந்து இழுக்கும் மணமுடன் இருப்பது சம்பங்கியின் தனிச்சிறப்பு.
இது, சென்னையின் பிரபல கண் மருத்துவர் ரஜினிகாந்தாவுக்கும் பொருந்தும். 60 வயது என்றால் நம்ப முடியவில்லை. அத்தனை இளமை... அவ்வளவு உற்சாகம். “சிரிக்காமல் இருங்க...’’ என்று யாராவது சொன்னால், ரொம்பக் கஷ்டம் இவருக்கு.

ரஜினிகாந்தாவின் மூத்த மகன் டாக்டர் நவீன் நரேந்திரநாத், அவருடைய மனைவி டாக்டர் வர்ஷா பாக்கியவதி. இவர்களும் கண் மருத்துவர்கள்தான். ரஜினிகாந்தாவின் இளைய மருமகள் நிரஞ்சனா பிரவீன், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட். ரஜினிகாந்தாவின் அக்கா, அக்கா மகள், அண்ணன் மகள், சம்பந்தி என இவருடைய குடும்பத்தில் நிறைய மருத்துவர்கள்.

“நாங்க தமிழ்நாட்டுக் குடும்பம்தான் என்றாலும், என் பெற்றோர் டெல்லியில் வேலை செய்ததால் அங்கேயே பிறந்து வளர்ந்தேன். லேடி ஹார்டிங் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிச்சு, கண் மருத்துவத்தில் ஸ்பெஷலைஸ் பண்ணிட்டு, அங்கேயே லெக்சரரா இருந்தேன். என் கணவர் நரேந்திரநாத், இங்கே சென்னையில் தொழிலதிபர். அதனால், கல்யாணத்துக்குப் பிறகு, சென்னையில் செட்டில் ஆயாச்சு. சங்கர நேத்ராலயாவில்தான் முதலில் என் பணி ஆரம்பம். அங்கே கிடைத்த அனுபவம்தான் இந்த ஆர்.கே. ஐ சென்டர்... 25 வருஷங்கள்! இப்போ என் மகனும் மருமகளும் எனக்குத் தோள்கொடுக்க வந்துட்டாங்க.” பெருமையாகச் சொல்கிறார் ரஜினிகாந்தா.

‘‘உங்க இளமையின் ரகசியம் சொல்லுங்க டாக்டர்?

“ சிரிப்புதான். சிரிச்சுக்கிட்டே இருந்தா,  எந்த நோயும் நெருங்காது. முதுமையும் வராது.’’ அதையும் சிரித்தபடியே சொல்கிறார்.

‘ஐ’ டாக்டர் ஃபேமிலி

‘‘உங்க குடும்ப ஆரோக்கியத்துக்காக என்ன செய்யறீங்க?”

“என் பசங்க இரண்டு பேருக்குமே சின்னப் பிள்ளையிலிருந்தே நிறைய பால், மீன், முட்டை தருவேன். பாலில் எதுவும் தூள் எல்லாம் போடறது கிடையாது. காபி, டீயும் கிடையாது. நவீன் எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் குடிச்சிடுவார்...” என்று சொல்ல, அருகிலிருந்த நவீன், “ஆமாம், ஏதாவது காரமா சாப்பிட்டால்கூட, தண்ணி குடிக்கறதில்ல. பால்தான் குடிப்பேன்.  என் எலும்பு பலத்துக்குக் காரணமே, நான் குடிக்கிற பால்தான்” எனப் புன்னகைக்கிறார்.

‘‘அவர் சொல்றது உண்மைதான். சத்து மிகுந்த உணவுக்கு அடுத்ததா, இரண்டு பசங்களையுமே ஸ்விம்மிங், டென்னிஸ், ஷட்டில்னு அவங்களுக்கு ஆர்வம் இருக்கிற விளையாட்டுளில் ஈடுபட உற்சாகப்படுத்தினோம். அதே மாதிரி பியானோ, கிடார்னு அந்தந்த வயசில் எதைச் செய்யணுமோ, அதைச் செய்யவிட்டோம். சும்மா ஏனோதானோனு செய்யாமல், முறையான வகுப்புகளில் சேர்த்துப் பயிற்சி கொடுத்ததால், எல்லாத்திலுமே நல்லா வந்தாங்க. நவீன் நல்ல அத்லெட்டும்கூட. இப்பவும் அவர் பியானோ வாசிப்பார், நல்லா பாடுவார். பிரவீன் காலேஜ் லெவல்ல செஸ் சாம்பியன். ரெண்டு பேருமே ஷட்டில்காக் பிளேயர்ஸ். அவங்க ஸ்கூல் விட்டு வந்ததும் டி.வி முன்னாடி உட்கார்ந்ததே கிடையாது. ஸ்கூல், படிப்பு, டென்னிஸ், ஸ்விம்மிங்னு பிஸியா இருப்பாங்க.” என்று சொல்லி முடிக்க, நவீன் தொடர்ந்தார்.

‘ஐ’ டாக்டர் ஃபேமிலி

‘‘அம்மா  ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு எல்லாமே ஷெட்யூல்படி நடக்கணும். டாக்டர் ஆகணும்கிறது என் சின்ன வயசுக் கனவு. அதுக்குக் காரணம், அம்மாதான்.  அம்மாவோட ஹாஸ்பிட்டல் போகும்போது, அவங்க ஆபரேஷன் தியேட்டர்ல சர்ஜரி பண்றது,  நோயாளிகளைச் செக் அப் செய்யறதை எல்லாம் பார்த்து, நானும் டாக்டர் ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். அம்மா  ஆபரேஷன் பண்றதைப் பார்த்துப் பயந்தே, “நான் இன்ஜினீயராத்தான் ஆவேன்னு” தம்பி சபதம் எடுத்தது தனிக் கதை.” அம்மாவைப் போலவே சிரிக்க சிரிக்கப் பேசுகிறார் நவீன்.

“எங்க ஃபேமிலியில் எல்லோருக்குமே ஃபிட்னெஸில் அக்கறை உண்டு. நான் தினமும் வாக்கிங் போவேன். வீட்லயே மினி ஜிம் இருக்கு. வாக்கிங் போக முடியாதப்போ, ட்ரெட் மில்லில் 20 நிமிஷம் நடை. ட்ரெட் மில்லிலேயே அப்டாமினல் எக்சர்ஸைஸ் பண்ணிடுவேன். என் கணவரும் வாக்கிங் போகத் தவறவே மாட்டார். சாப்பாட்டில் அரிசி ரொம்பக் குறைவுதான். வடநாட்டுப் பழக்கத்தால், தினமும் இரவில் சப்பாத்திதான்! அதேமாதிரி, தினமும் முட்டை உண்டு. எங்க அம்மாவுக்கு வயசு 88. எங்க வீட்டில்தான் இருக்காங்க.

‘ஐ’ டாக்டர் ஃபேமிலி

எலும்பு அடர்த்திக் குறைவு பிரச்னை வராமல் தடுக்கிறதுக்காக, நான், அவர், அம்மா எல்லாம் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் சி மாத்திரைகள் எடுத்துப்போம். வருஷத்துக்கு ஒரு தடவை ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ பண்ணிக்குவோம். என் மருமகள் வர்ஷாவுக்கு எல்லாரையும்விட, ஹெல்த் அண்டு ஃபிட்னெஸ் கான்ஷியஸ் அதிகம்’’ என்ற ரஜினிகாந்தா, தன் மகனைப் பார்த்தார்.

‘‘வர்ஷா ஆயில் ஃபுட் எடுத்துக்குவே மாட்டாங்க. மிக்ஸ்டு டயட்டா சாப்பிடுவாங்க. நிறைய காய்கறிகள்தான் எடுத்துப்பாங்க. அவங்க ஜிம்மில் மெம்பர். ரெகுலரா போயிடுவாங்க. ரொம்ப அழகு உணர்வு உள்ளவங்க. ஆனா, மேக்அப் சுத்தமாகப் பிடிக்காது. இயற்கையாவே ஆரோக்கியமா இருந்தால், நாம அழகாகத் தெரிவோம்கிறது வர்ஷாவின் நம்பிக்கை’’  - மனைவியின் சார்பில் பேசுகிறார் நவீன்.

‘‘எங்க குடும்ப நண்பர் டாக்டர் மோகன்ராவ், சைல்டு ஸ்பெஷலிஸ்ட். அவர்தான் எங்களுக்கு ஃபேமிலி டாக்டர். பசங்க குழந்தையாக இருக்கும்போதே, ஏதாவது ஒண்ணுன்னா அவர்கிட்டே தூக்கிட்டுப் போயிடுவேன். எங்களுக்கு ஹெல்த் பிரச்னைன்னா, நானே ட்ரீட் பண்ணிக்குவேன். ஆனா, பசங்களுக்குன்னா பயம். அதனால அவர்கிட்ட போயிடுவோம். இப்பவும் எங்க அம்மாவுக்கு, என் பேத்தி நிஷாவுக்கு  என எல்லாருக்கும் அவர்தான் டாக்டர். அவருக்கு கண் பிரச்னைன்னா,எங்க நர்ஸிங்ஹோம் வந்துடுவார்.’’

அம்மாவும் மகனும் கலகலவெனச் சிரிக்கிறார்கள். 

- பிரேமா நாராயணன், படம்: ஜே. வெங்கடராஜ்

கண்களுக்கு டிப்ஸ்:

•  டி.வி பார்க்கும்போது கும்மிருட்டான அறையில் உட்கார்ந்து பார்க்கக் கூடாது. அந்த அறையில் ஒரு சிறிய விளக்காவது எரிய வேண்டும். தொலைக்காட்சிக்கும் உங்களுக்கும் இடையே 10 அடி தூரமாவது இருக்க வேண்டும்.

•  கண் மை, ஐ லைனர், மஸ்காரா போன்ற மேக் அப் சாதனங்களை உபயோகிக்கும்போது, நல்ல பிராண்டட் ஆக  பார்த்து உபயோகிக்க வேண்டும். தூங்கப்போகும்
போது, மேக்அப்பைக் கலைத்துவிட்டுத் தான் படுக்க வேண்டும்.

•  அழகுக்காகவும் ஃபேஷனுக்காகவும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், அதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளைப் பின்பற்றி நடந்தால், பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

• சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆறு  மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் கண்களைப் பரிசோதிக்க வேண்டும். இதனால், டயபடிக் ரெட்டினோபதி, ஹைப்பர்டென்சிவ் ரெட்டினோபதி போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம், இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால், சிகிச்சை செய்வது சுலபம்.

•  வயதானவர்கள்தான் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்தக் காலத்தில், சிறுவர்களுக்குக்கூட கண்களில் பிரச்னை வருகிறது. நேர்ப்பார்வையில் பாதிப்பு வருவதுதான் அனைவருக்கும் தெரியும். பக்கவாட்டுப் பார்வையில் பாதிப்பு வந்தால் தெரியாது. அதனால், பரிசோதனை அவசியம் தேவை.

• கண்கள் வறண்டுபோகாமல் இருப்பதற்கு, வைட்டமின் ஏ மற்றும் டி மிகவும் அவசியம்.

கண் டாக்டர்கள் பயன்படுத்தும் கண் பராமரிப்பு டிப்ஸ்:

• எங்கள் வீட்டு உணவில் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், மற்ற கீரை வகைகள், முட்டைகோஸ் போன்ற இலையுள்ள காய்கறிகள், கேரட், பீட்ரூட், பால், தயிர், பப்பாளி, முட்டை, மீன், ஈரல் போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்வோம்.

• சாப்பிடும்போது கண்டிப்பாக டி.வி. பார்ப்பது இல்லை. கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையைப் பார்க்காமல், கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு விட்டுத்தான் பார்ப்போம்.

•  குழந்தைகளை அதிகம் வீடியோ, மொபைல் கேம்ஸ் விளையாட விடுவது இல்லை. வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் போன்றவற்றில் வேகமாக நகரும் காட்சிகள், பிம்பங்களைத் தொடர்ந்து பார்த்தால் கண்கள் சீக்கிரம் பாதிக்கப்படும்.