என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

உங்கள் மேக்கப் சைவமா... அசைவமா?

இர.ப்ரீத்தி

##~##

காஸ்மெடிக் உலகின் அடுத்த ஃபேஷன் டிரெண்ட் என்ன தெரியுமா? சாதுவான நத்தை முதல் சீறும் பாம்பு வரை அனைத்து உயிரினங்களையும் உறிஞ்சி, அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பது. உங்கள் லிப்ஸ்டிக்கில் இருப்பது முயல் ரத்தம் என்றால் என்ன ஆகும்? 'உவ்வே...’ சொல்பவர்களுக்குத் தற்காலிக ஆறுதல், இந்த 'அசைவ’ அயிட்டங்கள் எல்லாம், இப்போதைக்கு வெளி நாட்டில் மட்டுமே விற்பனைக் குக் கிடைக்கும் என்பதுதான்!

 இந்த அனிமல் அழகுப் பொருட்கள்பற்றி அழகுக் கலை நிபுணர் வசுந்தராவிடம் விளக் கம் கேட்டோம்.

உங்கள் மேக்கப் சைவமா... அசைவமா?

''நம் உடம்பில் இருக்கும் கொலாஜென் (Collagen) எனப்படும் புரோட்டீனின் வீரியம் குறையும்போது, தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு தோற்றத்தில் முதுமை உண்டாகும். அந்த புரோட்டீன் குறைபாட் டைப் போக்க மாடுகளின் கழுத்துப் பகுதியில் இருந்து ஊசி மூலமாக கொலாஜெனை உறிஞ்சி எடுத்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் வெளி நாடுகளில் சகஜமாகக் கிடைக்கும். ஆனால், அப்படி எதுவும் பயன்படுத்தாமல்,  சத்தான உணவுகள் மற்றும் நிறையத் தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே கொலாஜென் குறைபாட்டைத் தவிர்க்கலாம். வெளி நாடுகளில் ஃபேஷன் மோகம் உச்சத்தில் இருக்கும். அதிலும் வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டுனு யோசிச்சுட்டே இருப்பாங்க. நத்தையில் இருந்து மாய்ச்சரைஸிங் க்ரீம், தழும்புகளை மறைக்கும் லோஷன் தயாரிச்சு இருக்காங்க. இப்போ பாம்பு விஷத்தில் இருந்து ஹேர் ஆயில் தயாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கிற க்ரீம், கண்ணுக்குக் கீழே இருக்கிற கருவளையம், முகச் சுருக்கங்களைப் போக்குமாம். காரணம், பாம்பின் விஷத்தில் இருக்கும் 'சையோனேக்’ என்கிற வேதிப் பொருள். பறவைகள், பூனைகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுற க்ரீம்கள்தான் இப்போ அமெரிக்காவில் ஹிட்!'' என்கிறார் வசுந்தரா.

''விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் மூலமாக நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார் காஸ்மெட்டாலஜிஸ்ட் முருகுசுந்தரம்.

உங்கள் மேக்கப் சைவமா... அசைவமா?

''பாம்பின் விஷம் முடி வளர்ச்சியைத் தூண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. பாம்பு விஷத்தால் தயாரிக்கப்பட்ட எண்ணெய், தலைச் சருமத்துக்கு உள்ளே ஊடுருவினால், அதனால் நமக்குத் தீங்குதானே தவிர, துளி நன்மையும் கிடையாது. இயற்கையான பொருட்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை செய்யும் என்பதும் தவறான நம்பிக்கை. மஞ்சள் நல்ல கிருமிநாசினிதான். ஆனால், மஞ்சள் பூசிய சருமத்தில் வெயில் படும்போது ஒருவிதக் கருமை நிறம் படரக் காரணமாக இருப்பது, மஞ்சளில் உள்ள 'ஃப்யூரோ க்ரோம்’ என்ற வேதிப் பொருள்தான்.

இயற்கையே தேவையான அளவுக்கு நமது உடலை டியூன் செய்து வைத்திருக்கிறது. அதனால், ஆரம்பத்தில் உடலை இஷ்டத்துக்குப் படுத்தியெடுத்துவிட்டு, பிறகு நிவாரணம் என்ற பெயரில் அதை மேலும் படுத்தாமல் இருந்தாலே போதும்!'' என்கிறார்.

அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே முடியாத மாடல்கள் என்ன செய்கிறார்கள்?

'கண்ணா, லட்டு திங்க ஆசையா’ விளம்பரத்தில் ஜொலிஜொலிக்கும் பூஜா சால்வி, ''ஐ லவ் காஸ்மெடிக்ஸ். நான் எப்பவும் மேக்கப் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பேன். அதனால், பியூட்டீஷியன் ஆலோசனைப்படி தரமான தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துவேன். மாடலிங் தொழிலுக்கு மூலதனமே இந்த அழகுதானே!'' என்று கண் சிமிட்டுகிறார்.

'விவல்... பளிச்னு ஒரு மாற்றம்’ விளம்பரத்தில் மின்னல் அழகுடன் கவனம் ஈர்க்கும் அகன்ஷா... ஓர் இயற்கை விரும்பி!

''ஷோ, ஷூட்டிங் இருக்கும் நாட்களில் தலை முதல் கால் வரை மேக்கப் இல்லாமல் சமாளிக்கவே முடியாது. ஆனா, ஷூட்டிங் இல்லாத நாட்களில் என் சாய்ஸ் முழுக்க முழுக்க நேச்சர்தெரபிதான். என் சருமம் பளபளனு இருக்க ஒரே காரணம், 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை தண்ணீர் குடிச்சுட்டே இருக்கிறதுதான். நம்ம உதடுகள் சிரிச்சா மட்டும் பத்தாது, நம்ம தேகமும் அழகா சிரிக்கணும். அதனால், தினமும் யோகா பண்றேன். ஸ்கின் டோன் பண்ண பசும்பால் பயன்படுத்துவேன். மத்தபடி பசு கொழுப்பு, நத்தை ஆயில்... சான்ஸே இல்லப்பா!'' என்று புன்னகைக்கிறார் அகன்ஷா!

மாடு, நத்தை, பாம்பு என்று அலையாமல் கலகலனு இருங்க... லகலகனு சிரிங்க!  

உங்கள் மேக்கப் சைவமா... அசைவமா?