மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள் !

தடுப்பூசி ரகசியங்கள் !

கு.கணேசன் பொதுநல மருத்துவர், ராஜபாளையம்

அலோபதி மருத்துவத்தில் ‘மெனிஞ்சஸ்’ (Meninges) என்றால், ‘மூளை உறைகள்’ என்று பொருள். இந்த மூளை உறைகளை, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் பாதிக்கும்போது ஏற்படுகிற காய்ச்சலை ‘மூளை உறை அழற்சிக் காய்ச்சல்’ (Meningitis) என்று அழைக்கிறோம்.

மெனிங்கோகாக்கல் நோய்:

‘நைசீரியா மெனிஞ்சைடிடிஸ்’ (Neisseria meningitides) எனும் பாக்டீரியா கிருமிகள், மூளை உறைகளைப் பாதிக்கும்போது உண்டாகிற  ஒரு  தொற்றுக்கு, மெனிங்கோகாக்கல் நோய் (Meningococcal disease) என்று பெயர். இந்தக் கிருமிகள் நோயாளியின் எச்சில் மற்றும் சளியில் வசிக்கும். நோயாளி, வாயை மூடாமல் இருமும்போது, தும்மும்போது, சளியைத் துப்பும்போது, இவை சளித் திவலைகளுடன் காற்றில் கலந்து, மற்றவர்களுக்குப் பரவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் இது பாதிக்கும். என்றாலும் நடைமுறையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுமே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தக் காய்ச்சலால் ‘நச்சுக்குருதிநிலை’ (Septicaemia) என்று சொல்லப்படும் மற்றொரு நோயும் உண்டாகும். இந்த இரண்டுமே மிகவும் கடுமையான, கொடுமையான நோய்கள். உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துபவை. நோய் குணமானாலும், பேச்சு நின்று போவது, பார்வை இழப்பு, காது கேளாமை, பக்கவாதம் போன்ற ஊனங்கள் நிலைத்துவிடும்.

தடுப்பூசி ரகசியங்கள் !

அறிகுறிகள்:

திடீரென்று கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, அடிக்கடி குமட்டல், அளவில்லாமல் வாந்தி ஏற்படும். இந்த நோய்க் கிருமிகள் மூளை உறைகளை மட்டுமின்றி மூளைத் தண்டுவடத்தையும் பாதிக்கின்றன. இதனால், தண்டுவடச்சவ்வு வீங்கி, கழுத்துத் தசைகள் கல் போன்று இறுகிப்போகும்.  இதனால், கழுத்து வலியுடன், கழுத்தை மேலும் கீழும் அசைக்கவோ, பக்கவாட்டில் திருப்பவோ இயலாது. மேலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு, மனக்குழப்பம் ஏற்பட்டு மனநோயாளிபோல் நடந்துகொள்வார்கள்.

நச்சுக்குருதிநிலை:

தடுப்பூசி ரகசியங்கள் !

இந்த நோய்க்கிருமிகள் சுவாசப்பாதை வழியாக ரத்தத்துக்குச் சென்று, பல்கிப் பெருகி, அங்கிருந்து உடல் முழுவதும் பயணிக்கின்றன. முதலில், இவை ரத்தத்தை நச்சாக்கி, மூளைக்குச் சென்று, மூளைஉறைகளைப் பாதிக்கும். அடுத்து, நுரையீரல் திசுக்கள், எலும்பு மூட்டுகள், இதயத் தசைகள் என்று, பல உறுப்புகளைப் பாதிக்கின்றன. என்றாலும், ரத்தத்தைப் பாதிக்கும்போது உண்டாகிற ‘நச்சுக்குருதிநிலை’தான் மிகுந்த ஆபத்தைத் தருகிறது. இதனால், கடுமையான காய்ச்சல், குமட்டல், வாந்தி, உடல்வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும். கூடவே,  உடல் முழுவதும் அரிப்புடன் கூடிய செந்நிறத் தடிப்புகள் தோன்றும். மார்பு, முதுகு, கால்களில் இவை அதிக அளவில் காணப்படும். முகம், கை, வாய் போன்ற உடல் பகுதிகளிலும் இவை தோன்றி, சில நாட்களிலேயே கொப்புளங்களாக மாறும். இவற்றைச் சொறிந்தால், ரத்தம் வரும். தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து காணப்படும். முக்கியமாக, கை, கால் விரல் பகுதிகளில் இப்படி ஏற்படுவது உண்டு. அப்போது விரல்கள் செயலிழந்துவிடும். மேலும், நோயாளிக்கு ஓர் அதிர்ச்சிநிலை உருவாகி, ரத்த அழுத்தம் குறைந்து, மரணமும் ஏற்படும்.

இரண்டு வகைத் தடுப்பூசிகள்:

‘நைசீரியா மெனிஞ்சைடி டிஸ்’ கிருமிகளில் மொத்தம் 13 துணை வகைகள் (Sero types) உள்ளன. அவற்றில் ஏ, பி, சி, ஒய் மற்றும் டபிள்யூ-135 என்று சொல்லப்படும் ஐந்து துணை வகைகள் மட்டும் மேற்சொன்ன நோய் குணங்களைத் தோற்றுவிக்கின்றன. மூளைஉறைக் காய்ச்சலைத் தடுக்க இரண்டு வகை தடுப்பூசிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ‘எம்.பி.எஸ்.வி’ (MPSV - Meningococcal polysaccharide vaccine) என்று ஒரு வகை. இது இந்தியாவில் இரண்டு விதமாகக் கிடைக்கின்றது. ஒன்று, ஏ, சி, ஒய், டபிள்யூ-135 எனும் நான்கு துணை வகைக் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு தருகின்ற குவாட்ரிவேலன்ட் தடுப்பூசி (Quadrivalent Vaccine). மற்றொன்று, ஏ, சி எனும் இரண்டு துணை வகைக் கிருமிகளிடமிருந்து மட்டுமே பாதுகாப்பு தருகிற  பைவேலன்ட் தடுப்பூசி (Bivalent Vaccine).

தடுப்பூசி ரகசியங்கள் !

‘எம்சிவி’ (‘MCV’- Meningococcal polysaccharide-protein conjugate vaccine) என்பது அடுத்த வகை. இதுவும் ஏ, சி, ஒய் மற்றும் டபிள்யூ-135 எனும் நான்கு துணை வகை  கிருமிகளிடமிருந்து பாதுகாப்புத் தருகின்ற குவாண்டர்வேலன்ட் தடுப்பூசிதான்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு இரண்டு வயது முடிந்தவுடன், எம்.பி.எஸ்.வி அல்லது எம்.சி.வி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருமுறை தரப்படும் தடுப்பூசி மருந்தின் அளவு, அரை மி.லி. புஜத்தில் தசை ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற தடுப்பூசிகள் போடப்படும்போது, இதையும் போட்டுக்கொள்ளலாம். ஆனால், தனித் தனி இடங்களில் போட்டுக்கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் மற்றும் மண்ணீரல் நோய் உள்ளவர்கள் மட்டும் எட்டு வார இடைவெளியில் இரண்டு முறை இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஊக்குவிப்பு ஊசியாக, மீண்டும் இதைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

பக்கவிளைவுகள்:

இந்தத் தடுப்பூசிக்குக் கடுமையானப் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், வலி, தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்குக் காய்ச்சல் வரலாம். இரண்டு நாட்களுக்கு ‘பாராசிட்டமால்’ மாத்திரை அல்லது திரவ மருந்தைக் கொடுத்தால், காய்ச்சல் குறைந்துவிடும்.

- போர் ஓயாது

நோய் நிலவரம்

உலக அளவில் இந்த நோயின் தாக்கத்தை ஒப்பிட்டால், ஆப்பிரிக்காவில்தான் இது அதிகமாகப் பரவுகிறது. அடுத்து, மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு அதிக அளவில் பரவுகிறது. இந்தியாவில் நவம்பர் முதல் மார்ச் வரையுள்ள குளிர் காலத்தில் புது டில்லி, குஜராத், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்குதல் வேகம் அதிகம். சுற்றப்புற சுகாதாரம் குறைந்திருப்பதும், வீடுகள் மிக நெருக்கமாக இருப்பதும், மாசடைந்த காற்றும், வறண்ட காற்றும், அதிகக் குளிரும் இந்த நோய் வேகமாகப் பரவுவதற்குக் காரணிகள்.


அவசியம் போட்டுக்கொள்ள வேண்டியவர்கள்!

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்பவர்கள்.
சௌதி அரேபியா, மெக்காவுக்கு ‘ஹஜ்’ யாத்திரைக்குச் செல்பவர்கள்.
ரத்தப் பரிசோதனைக்கூடங்களிலும், ஆய்வகங்களிலும் பணிபுரிவோர்.
ஆரம்பச் சுகாதாரப் பணியாளர்கள்.
காய்ச்சல் பரவுகின்ற காலங்களில், அந்தப் பகுதிகளில் உள்ள அனைவரும்.