மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்!

முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி!

"கு.கணேசன்"
பொதுநல மருத்துவர், ராஜபாளையம்

தடுப்பூசி ரகசியங்கள்!

டுப்பூசி என்றாலே அது குழந்தைகள் சமாச்சாரம் என்றே, பலரும் நினைக்கின்றனர்.  தடுப்பூசி அட்டவணையில்கூட, பத்து வயதுக்குள் போடப்பட வேண்டிய தடுப்பூசி விவரங்கள் மட்டுமே தரப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு, உங்கள் விருப்பத்தின்பேரில் போட்டுக்கொள்ளலாம் என்று, ஒரு தனிப் பிரிவில் சில தடுப்பூசிகளின் பெயர்கள் மட்டும் தரப்பட்டிருக்கும். நடைமுறையில், இளம் வயதினருக்கும் முதியவர்களுக்கும் பல தடுப்பூசிகள் இருக்கின்றன.  இவற்றைப் போட்டுக்கொள்வது அவர்களின் உயிரையே காப்பாற்றும். ஆனால், இது தொடர்பான விழிப்புஉணர்வு மக்களிடம் மிகவும் குறைவாகவே உள்ளது.

முதுமையில் தடுப்பூசி ஏன் தேவை?

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் கிருமித்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  இவற்றைத் தவிர்க்க, குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டியது அவசியம். குழந்தை வளர வளர, நோய் எதிர்ப்பு மண்டலமும் வளர்ச்சி பெற்றுவருவதால், அப்போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிடும். ஆனால், வயதாக ஆக இந்த எதிர்ப்புச் சக்தி குறைய ஆரம்பிக்கிறது. அதிலும், முதுமைப் பருவத்தில் இது மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றினால், உடல்நலம் பாதிப்பதுடன், உயிர் இழப்பும் ஏற்படலாம். முதியவர்கள் சில தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம், தீவிர நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.

முத்தடுப்பூசி:

இந்தியாவில் போலியோவை ஒழித்ததுபோல், டெட்டனஸ், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமலை இன்னமும் ஒழிக்க முடியவில்லை. எனவே, இவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு நாம் செய்யவேண்டியது, குழந்தைப் பருவத்தில் முத்தடுப்பு ஊசியைப் போட்டிருந்தாலும், பத்து வயதுக்கு மேலுள்ள இளம் வயதினரும் முதியவர்களும் மீண்டும் ஒருமுறை ‘டி.ஏ.டி.பி’ (Tadp) எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, 10 வருடங்களுக்கு ஒருமுறை  ‘டிடி’ (Td) எனும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இப்படிப் போட்டுக்கொள்வதால், இரண்டுவித நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று, இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. அடுத்து, உடலில் லேசான காயம் ஏற்படும்போது, போடப்படுகிற ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம்இல்லை.

தடுப்பூசி ரகசியங்கள்!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி:

பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது, கர்ப்பப்பைப் வாய் புற்றுநோய் (Uterine Cervical Cancer).  இந்த நோயைத் தடுக்க, 10 வயது முடிந்த பெண்கள் ஹெச்பிவி (HPV vaccine) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.  இந்தியாவில், இந்த வயதில் 10 சதவிகிதப் பெண்கள்கூட இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது இல்லை. 10 வயதில் போட்டுக்கொள்ளவில்லை எனில், 45  வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். முதலில், ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு அல்லது நான்கு மாதங்கள் இடைவெளியில், மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

நிமோனியா தடுப்பூசி:

முதுமையில் பெரும்பாலானோரைப் பாதிப்பது நிமோனியா. இது நுரையீரலைத் தாக்கும்போது, கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி எனப் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி, உயிர் இழப்பு வரை ்கொண்டுசெல்லும். இதைத் தவிர்க்க, ‘பிபிஎஸ்வி23 நிமோகாக்கல் தடுப்பூசி’யைப் (PPSV23 - Pneumococcal vaccine) போட்டுக்கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. காரணம், இவர்களுக்கு மற்றவர்களைவிட நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். ஐந்து வருடங்கள் இடைவெளியில், இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஃபுளு காய்ச்சல் தடுப்பூசி:

இன்ஃபுளுயென்சா வைரஸ் (Influenza virus) இந்த நோயை ஏற்படுத்துகிறது. இதற்கு வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். வட மாநிலங்களில் வசிப்போர், மே மாதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தடுப்பூசி போட்டு, ஒரு மாதத்துக்குப் பிறகுதான், இந்தக் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

சின்னம்மைத் தடுப்பூசி:

‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற சின்னம்மையைத் தடுக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணை போட்டுக்கொள்வது நல்லது. இதைப் போட்டுக்கொள்பவர்களுக்கு ‘அக்கி, அம்மை’ (Herpes zoster அல்லது Shingles) வருவதும் தடுக்கப்படும்.

தடுப்பூசி ரகசியங்கள்!

மூன்று அம்மைத் தடுப்பூசி:

மணல்வாரி அம்மை, அம்மைக்கட்டு, ருபெல்லா எனும் மூன்று நோய்களைத் தடுக்கின்ற எம்எம்ஆர் (MMR Vaccine) தடுப்பூசியை, சிறு வயதில் போடாமல் விட்டிருந்தால், முதுமையில் போட்டுக்கொள்ளலாம். நான்கு முதல் எட்டு வாரங்கள் இடைவெளியில், இரண்டு தவணைகளாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.

மஞ்சள்காமாலைத் தடுப்பூசிகள்:

உயிர்க்கொல்லி மஞ்சள் காமாலையைத் தடுக்கின்ற ‘ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி’யை, மொத்தம் மூன்று தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஊசியைப் போட்டுக்கொண்டு, முறையே ஒரு மாதம், ஆறு மாதங்கள் இடைவெளியில்  மற்ற இரண்டு தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ‘ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசி’யை ஆறு மாதங்கள் இடைவெளியில், இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

இவை தவிர, டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி, மூளை உறை அழற்சிக் காய்ச்சல் மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளவது நல்லது.

முதுமையில் உடல் நலக்குறைவு ஏற்படுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது, பணச் செலவு, போன்றவை இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் தடுக்கப்படுகின்றன. மேலும், குடும்பத்தினருக்குத் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதும் தவிர்க்கப்படும்.

-போர் ஓயாது

முதியோர் தடுப்பாற்றல் நிலவரம்

தேசிய குடும்ப ஆரோக்கியக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey) இந்தியாவில் குழந்தைப் பருவத்தில் போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் எல்லாவற்றையும், சரியாகவும் முறையாகவும் போட்டுக்கொள்கிறவர்கள் 100க்கு 42 பேர் மட்டுமே. மற்றவர்களில் பலர், ஒரு சில தடுப்பூசிகளை மட்டுமே போட்டுக் கொண்டவர்களாக உள்ளனர். இதனால், இவர்கள் தடுப்பூசிகளால் தடுக்கப்படும் பல நோய்களுக்கு, தடுப்பாற்றல் இல்லாதவர்களாகவே வளர்கிறார்கள். இவர்களுக்கு அந்தத் தொற்று நோய்கள் ஏற்படும்போது, அவற்றை மற்றவர்களுக்கும் பரப்பிவிடுகிறார்கள். இது தேசிய நலனுக்கு ஆபத்தைக் கொடுக்கும். எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை இளம் வயதிலும் முதுமையிலும் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.