மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்!

சிறப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்!

கு.கணேசன்
பொதுநல மருத்துவர், ராஜபாளையம்

தடுப்பூசி ரகசியங்கள்!

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கத்தான் தடுப்பூசிகளைப் போடுகிறோம். அதேசமயம், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. இந்த மாதிரியான குழந்தைகளைச் சிறப்புப் பிரிவினரில் வைத்துள்ளது மருத்துவம். இவர்களுக்கு எந்தத் தடுப்பூசியை எப்போது போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்று வழிமுறைகள் உள்ளன. அவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்.

எய்ட்ஸ் நோய் உள்ள குழந்தைகள்

பொதுவாகவே எய்ட்ஸ் உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாகவோ அல்லது உற்பத்தி ஆகாமலோ இருக்கும். இந்தக் குழந்தைகளிடம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இவர்களுக்கு எந்த ஒரு நோய்த்தொற்றும் பஞ்சில் பற்றும் தீப்பொறி போல எளிதில் தொற்றிவிடும். அதன் விளைவுகளும் கடுமையாக இருக்கும். இவர்களுக்கு அடிக்கடி நோய்த்தொற்று உண்டாகவும் உயிர் இழப்பு ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் இருந்து, அறிகுறிகள் வெளியில் தெரியாமல் இருந்தால், பிசிஜி மற்றும் போலியோ சொட்டு மருந்து தவிர, மற்ற எல்லா உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகளை (Live vaccines) போடலாம். அதேசமயம், எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் இந்தத் தடுப்பூசிகளைப் போடக்கூடாது. இவர்களுக்குக் காசநோய், நிமோனியா, ஃப்ளு காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, ஹெபடைட்டிஸ் - ஏ மற்றும் பி, மூளை உறை அழற்சிக் காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதாகத் தாக்கிவிடும். எனவே, வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசிகளை (Inactivated vaccines) மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்!

புற்றுநோய் உள்ள குழந்தைகள்

இந்தக் குழந்தைகள், எல்லாத் தடுப்பூசிகளையும் முறைப்படி போட்டுக் கொள்ளலாம். ஆனால், புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை அல்லது கதிர்வீச்சுச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது, உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகளைப் போடக்கூடாது. புற்றுநோய்க்கான எல்லா சிகிச்சைகளும் முடிந்த பிறகு, வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகளை முறைப்படி போட்டுக்கொள்ளலாம்.

ரத்த உறைவு நோய் உள்ள குழந்தைகள்

ஹீமோபிலியா போன்ற ரத்த உறைவுக் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு, தசை வழித் தடுப்பூசிகளை மட்டுமே போட வேண்டும். அதுவும், வழக்கமாக அவர்கள் ரத்த உறைவுக்காக மருந்துகளை எடுத்துக்கொண்ட உடனே, இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுவிட வேண்டும்.  வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை இவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. ஊசியின் அளவு 24 கேஜ் (Gauge) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும். ஊசி போட்டதும் அந்த இடத்தைத் தேய்க்கக் கூடாது. அந்த இடத்தில் பஞ்சால், 10 நிமிடங்கள்  அழுத்திக்கொள்ள வேண்டும்.

நாள்பட்ட நோயுள்ள குழந்தைகள்

கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இதயநோய், நுரையீரல் நோய், நரம்பு மற்றும் வயிறு சார்ந்த நோய்களால் குழந்தைகள் வெகுகாலம் பாதிக்கப்பட்டிருந்தால், இவர்களுக்கு மற்ற நோய்த்தொற்றுகளும் எளிதாகத் தொற்றிவிடும். இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பதால், போடப்படும் தடுப்பூசிகளில் சிலவற்றைக் கூடுதலாகப் போட வேண்டியது வரும். உதாரணத்துக்கு, ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியைச் சொல்லலாம். மேலும், இவர்களுக்கு நீமோக்காக்கல் தடுப்பூசி, சின்னம்மைத் தடுப்பூசி, ஹெபடைட்டிஸ் – ஏ தடுப்பூசி, இன்ஃப்ளுயென்சா தடுப்பூசி, ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து போன்றவற்றைக் கண்டிப்பாகப் போட வேண்டும்.

உறுப்பு மாற்றுச் சிகிச்சை பெறும் குழந்தைகள்

சிறுநீரகம், கல்லீரல், எலும்பு போன்ற உறுப்பு மாற்றுச் சிகிச்சை பெற காத்திருக்கும் குழந்தைகளுக்கு, இந்தச் சிகிச்சைகள் தொடங்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லா வகை உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகளைப் போட்டுமுடித்துவிட வேண்டும். இந்தச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, இந்தத் தடுப்பூசிகளைப் போடக்கூடாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவர்களுக்கு முறைப்படி போடப்பட வேண்டிய வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம். வருடத்துக்கு ஒருமுறை போட வேண்டிய இன்ஃப்ளுயென்சா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி ரகசியங்கள்!

கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...

கர்ப்பிணிகளுக்கு எந்த ஓர் உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசியையும் போடக்கூடாது. குறிப்பாக, மூன்று அம்மைத் தடுப்பூசி (MMR), தட்டம்மைத் தடுப்பூசி, சின்னம்மைத் தடுப்பூசிகளைப் போடக்கூடாது. திருமணமான பெண்கள் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டதும், அடுத்த ஒரு மாத காலத்துக்குக் கர்ப்பம் அடைவதைத் தள்ளிப்போடுவது நல்லது. அப்படிக் கர்ப்பம் ஆகிவிட்டது என்றாலும், கருப்பையில் வளரும் சிசுவுக்கு அவ்வளவாக பாதிப்பு நேராது. எனவே, கர்ப்பத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. கர்ப்பத்தின்போது வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு மூன்றாவது டிரைமெஸ்டரில் டிடிஏபி ( Tdap) தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போடவேண்டும். அப்போதுதான், குழந்தைக்குக் கக்குவான் இருமல் வராது. கர்ப்பிணிகளுக்குப் போட வேண்டியவற்றில் ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி, இன்ஃப்ளுயென்சா தடுப்பூசிகள் முக்கியமானவை.

குறைப் பிரசவம் / எடை குறைந்த குழந்தைகள்

குழந்தை பிறந்தவுடன் அதன் எடை இரண்டு கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது எனில், பிறந்தவுடன் போட வேண்டிய எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம். இதற்கும் குறைவாக எடை உள்ளவர்களுக்கு மட்டும், ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்குத் தசை வளர்ச்சிக் குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை, இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊசியின் அளவு 24  கேஜ் (Gauge) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும்.

ஹெபடைட்டிஸ் – பி மஞ்சள் காமாலை உள்ள தாய்க்குப் பிறந்த குழந்தையின் எடை, இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் அந்தக் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி மற்றும் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து இந்தத் தடுப்பூசியை முறையே ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் என மூன்று தவணைகள் குழந்தைக்குப் போட வேண்டும்.

தடுப்பூசியால் அலர்ஜி?

குழந்தைக்கு முதல் முறையாகத் தடுப்பூசியைப் போடும்போது அலர்ஜி ஆகி அரிப்பு, தடிப்பு, வாந்தி, மூச்சுத் திணறல், மயக்கம், வலிப்பு போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருந்தால், அடுத்தமுறை அந்தத் தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போடக்கூடாது. முட்டைக்கு அலர்ஜி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளுயென்சா தடுப்பூசியைப் போடக்கூடாது. எந்த ஒரு தடுப்பூசியைப் போட்டாலும், குறைந்தது 15 நிமிடங்களுக்கு மருத்துவமனையில் காத்திருந்து அலர்ஜிக்கான அறிகுறிகள் தெரிகிறதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு அலர்ஜிக்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்று உறுதியான பிறகுதான் மருத்துவமனையைவிட்டு வெளியேற வேண்டும்.

உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் (Live vaccines)

பிசிஜி
போலியோ சொட்டு மருந்து
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
தட்டம்மைத் தடுப்பூசி
ருபெல்லா தடுப்பூசி
அம்மைக்கட்டுத் தடுப்பூசி
சின்னம்மைத் தடுப்பூசி
இன்ப்ளூயென்சா தடுப்பு மருந்து (Nasal spray)
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி
ஹெபடைட்டிஸ் – ஏ தடுப்பூசி

வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (Inactivated vaccines)

போலியோ தடுப்பூசி
டைபாய்டு தடுப்பூசி
காலரா தடுப்பூசி
கக்குவான் இருமல் தடுப்பூசி
இன்ஃப்ளுயென்சா தடுப்பூசி
ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி
ஹெபடைட்டிஸ் – ஏ தடுப்பூசி
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
மூளை அழற்சிக் காய்ச்சல் தடுப்பூசி
ரேபீஸ் தடுப்பூசி

- போர் ஓயாது