மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள் -24

பயணம் மேற்கொள்பவர்களுக்கு என்ன தடுப்பூசி?

கு.கணேசன்
பொதுநல மருத்துவர், ராஜபாளையம்

தடுப்பூசி ரகசியங்கள் -24

டிப்பு, வேலை, உல்லாசப் பயணம், புனித யாத்திரை, மருத்துவ சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்துவருகிறது. அப்படி, நாம் பயணிக்கும் இடங்களில், நோய்த்தொற்றுகள் பரவி இருந்தால், அவை நமக்கும் பரவ வாய்ப்பு அதிகம். அதேவேளையில், நோய்வாய்ப்பட்டவர்கள் பயணம் செய்யும்போது, இவர்களின் நோய் தொற்றும், அந்த நாடுகளுக்குப் பரவ வாய்ப்பு உண்டு. எனவே, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயணம் மேற்கொள்கிறவர்கள், வழக்கமான தடுப்பூசிகளை முறைப்படிப் போட்டுகொள்வதோடு, சில முக்கிய தடுப்பூசிகளைப் பயணத்துக்கு முன்பு, போட்டுக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

தடுப்பூசி ரகசியங்கள் -24

பயணம் செய்கிறவரின் வயது, பயணிக்கும் நாடு, எதில் பயணிக்கிறார், எங்கு தங்க இருக்கிறார், எவ்வளவு காலம், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள விவரம், அவருக்கு உள்ள நோய்த் தடுப்பு ஆற்றல் போன்ற விவரங்களை வைத்து, பயணத்துக்கு முன்பு போட வேண்டிய தடுப்பூசிகளையும் காலத்தையும், மருத்துவர் பரிந்துரை செய்வார். பல தடுப்பூசிகளைப் போட வேண்டி இருந்து, காலம் குறைவாக இருந்தால், முக்கியமான தடுப்பூசிகளை மட்டும் போட்டுக்கொண்டு, அந்த நாட்டுக்குச் சென்ற பிறகு, அங்கு மீதியைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்துவார்.

மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் போட வேண்டி இருந்தால், கூட்டுத் தடுப்பூசிகளைப் (Combination Vaccines) போட்டுக்கொள்வது நல்லது. இது ஊசி
களின் எண்ணிக்கையையும் வலியையும் குறைக்கும். கூட்டுத் தடுப்பூசிக்குப் பொருந்தாதவர்கள், ஒரே நேரத்தில் ஒரு அங்குலம் இடைவெளி விட்டு, தனித்தனியாகப் பல தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம். வைரஸ் நோய்களுக்கான உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகளை (Live Vaccines) போடும்போது மட்டும், முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் நான்கு வாரங்கள் இடைவெளிவிடவேண்டும்.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி

இந்தியாவில், மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) இல்லை. எனவே, இந்தியர்களுக்கு இதற்குரியத் தடுப்பூசியைப் போடுவது வழக்கத்தில் இல்லை. ஆனால், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்பவர்கள், மஞ்சள் காய்ச்சலுக்கு அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலும் தென் அமெரிக்காவில் ஜனவரி முதல் மே வரையிலும் இந்தக் காய்ச்சல் அதிகமாகப் பரவுகிறது. இந்த நோய்க்கு, 17டி உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி (17D Live attenuated Vaccine) உள்ளது. பயணத்துக்குப் பத்து நாட்களுக்கு முன்பு, இதைத் தசை ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருமுறை போட்டுக்கொண்டால், அடுத்த 10 வருடங்களுக்குப் போட வேண்டியது இல்லை. கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள், எய்ட்ஸ் நோயாளிகள் இந்தத் தடுப்பூசியைப் போடக்கூடாது.

மெனிங்கோகாக்கல் தடுப்பூசி

உலக அளவில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மெனிங்கோகாக்கல் பாக்டீரியாவால் ஏற்படுகிற ‘மூளை உறை அழற்சிக் காய்ச்சல்’ பரவியுள்
ளது. எனவே, இதற்கான தடுப்பூசியை வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய்ப் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்பவர்கள், கண்டிப்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த நோய்க்கு இரண்டு வகைத் தடுப்பூசிகள் இருக்கின்றன. இவற்றில், ஏற்கனவே ஏதாவது ஒரு தடுப்பூசியைப் போட்டிருந்தாலும், குவாட்ரிவேலண்ட் தடுப்பூசியை (Quadrivalent Vaccine) மீண்டும், ஒருமுறை போட்டுக்கொள்வது நல்லது. பயணம் செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசி

சுகாதாரம் குறைந்த உலக நாடுகள் அனைத்திலும் ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலை பரவியுள்ளது. இந்த மாதிரியான நாடுகளுக்கு, 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் செல்வதாக இருந்தால், பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, மோனோவேலன்ட் ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ளலாம்.  40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இந்த நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதோடு, ஹெபடைட்டிஸ் ஏ தடுப்புப் புரதத்தையும் (Immunoglobulin) பயணம் கிளம்புவதற்கு முதல் நாளில் போட்டுக்கொள்ள வேண்டும்.ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசிபல ஆசிய நாடுகளில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் (Japanese B encephalitis) பரவியுள்ளது. இங்கு பயணம் செய்பவர்கள் வீரியம் குறைக்கப்பட்ட எஸ்ஏ 14-14-2 (Inactivated SA 14-14-2 vaccine) தடுப்பூசியை ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.இந்தத் தவணைகளைப் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால் போட்டு முடித்துவிட வேண்டும்.

- போர் ஓயாது

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மெனிங்கோகாக்கல் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடுயூட் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின் நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் மெனிங்கோகாக்கல் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. சென்னை, பாரிமுனை,ராஜாஜி சாலையில் (சுங்கவரித் துறை எதிர்புறம்) உள்ள போர்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன்  ( Port Health Organization) மற்றும் சென்னை, மீனம்பாக்கம், பழைய விமானநிலையம் (புளூ டார்ட் கொரியர் எதிர்புறம்) உள்ள ஏர்போர்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் ஆகிய நிறுவனங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது.

சர்வதேச தடுப்பூசி சான்றிதழ்

தடுப்பூசி ரகசியங்கள் -24

ஞ்சள் காய்ச்சல் மற்றும் மெனிங்கோகாக்கல் மூளை அழற்சிக் காய்ச்சல் நோய்களுக்கான சர்வதேச தடுப்பூசிச் சான்றிதழை (International vaccination certificate) மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்திருக்கும் நிறுவனத்திலிருந்து மட்டுமே பெற வேண்டும். சென்னை, கிண்டியில் உள்ள ‘கிங் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம் இந்தச் சான்றிதழை அளிக்கிறது. இதைப் பெறுவதற்கு, கையோடு பாஸ்போர்ட்டை எடுத்துச்செல்ல வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமே, மஞ்சள் காய்ச்சலுக்கு உரிய தடுப்பூசி போடப்படும். இந்தத் தடுப்பூசிக்கும் சான்றிதழுக்கும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டால், அன்றே சான்றிதழைத் தந்துவிடுவார்கள். சான்றிதழில், நிறுவனத்தின் அலுவலக முத்திரையும் மருத்துவரின் கையொப்பமும் இருக்கின்றனவா, என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை பெற்றுக்கொண்ட சான்றிதழ் பத்து வருடங்களுக்குச் செல்லும். இதைப் பயணாளிகள் நேரில் சென்றுதான் வாங்கமுடியும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். வெளிநாட்டுப் பயணத்தின்போது இதைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்புக்காக உண்மைச் சான்றிதழின் நகலையும் உடன் வைத்துக்கொள்வது நல்லது.