மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள் - 26

தடுப்பூசி சந்தேகங்கள்

கு.கணேசன்
பொதுநல மருத்துவர், ராஜபாளையம்

தடுப்பூசி ரகசியங்கள் - 26

டுப்பூசியின் அவசியம், பயன்பாடு பற்றி தெரிந்துகொள்ள இந்தத் தொடர் உதவியாக இருந்திருக்கும். இந்தத் தொடரைத் தொடங்கியதில் இருந்து பலர், தடுப்பூசி போடுவது பற்றி பல்வேறு சந்தேகங்களைக் கேட்டிருந்தனர். தடுப்பூசி தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில முக்கியமான கேள்விகளுக்கு பதில் இங்கே...

தடுப்பூசி ரகசியங்கள் - 26

ஆரோக்கியமான குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டுமா?

தடுப்பூசி போடப்படுவதன் நோக்கங்களில் முக்கியமான ஒன்று, ஆரோக்கியமான குழந்தையைத் தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதான். மாசடைந்த காற்று, குடிநீர், உணவு மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, ஆரோக்கியமான குழந்தைக்கும் தடுப்பூசி அட்டவணைப்படி உரிய வயதில் தடுப்பூசி / தடுப்பு மருந்து போடப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான், தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

இயற்கையாகத் தடுப்பு ஆற்றல் பெறுவதுதானே நல்லது? தடுப்பூசிகள் போடப்படுவதன் மூலம் செயற்கையாகத் தடுப்பு ஆற்றல் பெறுவதை, நல்லது என்று எப்படிக் கூற முடியும்?

பிறந்த குழந்தையின் உடலில் இயற்கையாக இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு, ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். கர்ப்பமாக இருந்தபோது தாயின் ஊட்டச்சத்து நிலை, ஆரோக்கியப் பின்னணி, தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட விவரம், பரம்பரைத்தன்மை, நோய்ப் பாதுகாப்பு, குழந்தை பிறந்த கால அளவு, உடல் எடை எனப் பல காரணிகளைப் பொறுத்து, ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அமைகிறது. எனவே, எல்லா குழந்தைகளுக்கும் பிறக்கும்போதே போதுமான அளவுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

அடுத்து, ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பிறகுதான் அதற்கு உண்டான இயற்கையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். குழந்தைக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து, அந்தச் சமயத்தில் கொடிய உயிர்க்கொல்லி நோய் ஏதேனும் தாக்கினால், அந்த நோயின் காரணமாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரலாம். அதைத் தடுக்க தடுப்பூசிகளைப் போடவேண்டியது அவசியமாகிறது.

தடுப்பூசிகளால் நோய் எதிர்ப்பு சக்தியானது செயற்கையாகப் பெறப்பட்டாலும், இயற்கை எதிர்ப்பு சக்தியைப்போலவே செயல்படுவதால் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது என்கிறது ஆங்கில மருத்துவம். மேலும், தடுப்பூசிகளைப் பயன்படுத்திய பிறகுதான் உலகம் முழுவதும் பல உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து கோடிக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறோம். குறைந்த செலவில், இத்தகைய உயிரிழப்பை எளிதாகத் தடுக்கிற தடுப்பூசிகளை, அறிவியல் கண்டுபிடிப்புகளின் மகத்தான சாதனை என்கிறோம்.

தடுப்பூசி போடப்பட்ட இடத்தைத் தேய்க்கலாமா? அந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாமா? ஸ்பிரிட் கொண்டு துடைக்கலாமா?

தடுப்பூசி போட்ட பிறகு, அந்த இடத்தை ஸ்பிரிட்டால் துடைக்கக் கூடாது. ஏனெனில், துடைக்கும்போது தடுப்பு மருந்தில் உள்ள கிருமிகள் இறக்க நேரிடும். இதனால், தடுப்பு மருந்தின் பலன் குழந்தைக்கு முழுவதுமாகக் கிடைக்காமல்போகும். தடுப்பூசி போடப்பட்ட இடத்தைத் தேய்க்கக் கூடாது. ஒத்தடம் கொடுக்கக் கூடாது. பஞ்சுகொண்டு சிறிது நேரம் லேசாக அழுத்திப் பிடித்துக்கொண்டால் போதும்.

தடுப்பூசிகளை குழந்தையின் புட்டத்தில் போடுவது இல்லை, ஏன்?

புட்டத்தின் தசைகளில் கொழுப்பு அதிக அளவில் இருக்கும் என்பதால், தடுப்பூசி மருந்து அங்கு தங்கிவிடும். ரத்தத்தில் உடனே கலந்து செயல்படாது. காலதாமதம் ஆகும். இதனால், தடுப்பூசியின் முழுமையான பலன் கிடைக்காமல் போகலாம். மேலும், புட்டத்தில் ஊசி போடப்படும்போது ‘சியாட்டிக் நரம்பு’ பாதிக்கப்பட்டு கால் செயலிழக்கும் ஆபத்து நேரலாம். இதைத் தவிர்க்கவும் புட்டத்தில் தடுப்பூசிகளைப் போடுவது இல்லை.

தடுப்பூசி ரகசியங்கள் - 26

தடுப்பூசி போட ஒரு தவணைக்கும் அடுத்த தவணைக்கும் குறைந்தது ஒரு மாத இடைவெளி விடப்படுவது ஏன்?

முதல் தவணையாகக் கொடுக்கப்பட்ட தடுப்பூசி செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும். இதுதான் காரணம்.

‘பென்டாவேலன்ட் தடுப்பூசி’ என்றால் என்ன? எப்போது போடப்படுகிறது? இதனால் ஆபத்து ஏற்படும் என்று சொல்கிறார்களே, உண்மையா? இதன் நன்மை பற்றி..?

குழந்தைகளுக்கு ஒரே ஊசி மருந்தில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, ஹெபடைட்டிஸ்-பி மஞ்சள் காமாலை, ‘ஹிப்’ மூளைக் காய்ச்சல் எனும் ஐந்து நோய்களைத் தடுக்கும் தடுப்பூசிக்குப் ‘பென்டாவேலன்ட் தடுப்பூசி’ என்று பெயர். இதன் கண்டுபிடிப்புக்கு முன்னால் குழந்தைக்கு இந்த ஐந்து நோய்களைத் தடுக்க ஒரே நேரத்தில் தனித்தனியாக மூன்று இடங்களில் தடுப்பூசி போடப்படும் வழக்கம் இருந்தது. இந்த ஊசி எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒரே ஊசியில் இந்த ஐந்து நோய்களையும் தடுத்துவிடும் வகையில் பென்டாவேலன்ட் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆபத்து எதுவும் இல்லை. குழந்தைக்கு 6, 10, 14 வாரங்கள் முடிந்ததும் மொத்தம் மூன்று தவணைகள் இதைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் தடுப்பூசிகளைப் பாதுகாக்கலாமா?

பாதுகாக்கலாம். ஆனால், வேறு எந்த உபயோகத்துக்கும் இந்தக் குளிர்சாதனப்பெட்டியைப் பயன்படுத்தக் கூடாது. மின் விநியோகம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதிக வெப்பம் இல்லாத, சூரிய ஒளி நேரடியாகப் படாத இடத்தில் குளிர்சாதனப்பெட்டியை வைக்க வேண்டும். இதன் கதவுகளில் வைக்காமல், அதன் உள்ளே இருக்கும் அடுக்குகளில் மட்டுமே பாதுகாக்க வேண்டும். ஃபிரீசரில் ஐஸ் கட்டிகளை வைத்திருக்க வேண்டும். கதவுகளில் தண்ணீர் பாட்டில்களை வைத்திருக்க வேண்டும். மின் விநியோ
கம் சிறிது நேரம் தடைபடும்போது, இவற்றின் குளிர்ச்சி தடுப்பூசிகளைப் பாதுகாக்க உதவும். முறைப்படி குளிர்சாதனப்பெட்டியை சர்வீஸ் செய்ய வேண்டும்.

ஒரு நோய்க்கான தடுப்பூசியைப் பல முறை போட வேண்டி இருந்தால், முதல் முறை பயன்படுத்திய அதே மருந்துக் கம்பெனி தயாரித்த தடுப்பூசியைத்தான் அடுத்த முறையும் பயன்படுத்த வேண்டுமா?

முடிந்தவரை ஒரே கம்பெனி தடுப்பூசியையே போட வேண்டும். முடியாதபோது, மற்ற கம்பெனி தயாரித்ததையும் பயன்படுத்தலாம், தவறு இல்லை.

குழந்தைக்கு ஒரு வயது ஆகியும் எந்தத் தடுப்பூசியும் போடாமல் இருந்தால் என்ன செய்வது?

பிசிஜி தடுப்பூசி, பென்டாவேலன்ட் தடுப்பூசி, போலியோ தடுப்பூசி, பிசிவி தடுப்பூசி முதல் தவணை கொடுக்கப்பட வேண்டும். நான்கு வாரங்கள் கழித்து பென்டாவேலன்ட் தடுப்பூசி, போலியோ தடுப்பூசி, பிசிவி தடுப்பூசி இரண்டாம் தவணை, எம்எம்ஆர் தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும். அடுத்த நான்கு வாரங்கள் கழித்து பென்டாவேலன்ட் தடுப்பூசி, போலியோ தடுப்பூசி மூன்றாம் தவணை கொடுக்கப்பட வேண்டும். இத்துடன் டைபாய்டு தடுப்பூசியும் மஞ்சள் காமாலை – ஏ தடுப்பூசியும் போடப்பட வேண்டும்.
பின்குறிப்பு: இதுபோல, முறையாகத் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் நம் நாட்டில் அநேகம் பேர் உள்ளனர். இவர்கள் தவறவிட்ட தடுப்பூசிகளை மீண்டும் போட்டுக்கொள்ளும் வசதி இப்போது உள்ளது. ‘விடுபட்ட தடுப்பூசித் திட்டம்’ (Catch up vaccination) என்று அதற்குப் பெயர். இந்தத் தொடரிலும் இதுகுறித்து விரிவாகச் சொல்லியிருக்கிறோம். குடும்ப மருத்துவரிடமும் இது தொடர்பாக ஆலோசித்துக்கொள்ளலாம். விடுபட்ட தடுப்பூசிகளை உடனே போட்டுக்கொண்டு, குழந்தையின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

தடுப்பூசிகளை எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

தயாரிக்கும் இடத்திலிருந்து பயனாளிக்குப் பயன்படுத்தப்படும் வரை தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் சரியான வெப்பநிலையில்வைத்துப் பாதுகாக்க வேண்டியது முக்கியம். அப்போதுதான், அவை முழுமையான நோய்ப் பாதுகாப்பைத் தரும். தயாரிக்கப்படும் நிறுவனத்தில் தடுப்பூசியின் வெப்பநிலைப் பாதுகாப்புக்கு என்றே ஒரு தனி அறை (Walk-in cold rooms) இருக்கிறது. அங்கு இரண்டிலிருந்து எட்டு டிகிரி சென்டிகிரேட் வரை உள்ள வெப்பநிலையில் வைத்து, அதிகபட்சமாக இரண்டு வருடங்களுக்குப் பாதுகாக்கிறார்கள். மைனஸ் 20 சென்டிகிரேட் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய தடுப்பூசி / தடுப்பு மருந்துகளை ஃபிரீசர்களில் (Walk - in freezers) வைத்துப் பாதுகாக்கிறார்கள். மாநில மையங்களுக்கு ‘நடமாடும் ஃப்ரீசர்’களில் (Portable freezer) அனுப்புகிறார்கள். மாவட்ட மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், மருந்துக் கம்பெனிகளின் ஸ்டாக்கிஸ்ட்கள் உறைநிலை குளிர்சாதனப் பெட்டியிலும் (Deep freezer), பனிக்கட்டி குளிர்சாதனப் பெட்டியிலும் (Ice lined) வைத்துப் பாதுகாக்கிறார்கள். இங்கிருந்து மருந்துக் கடைகளுக்கு குளிர்ப் பெட்டியில் (Cold Box) கொண்டுசெல்கிறார்கள். இவ்வாறு தடுப்பூசிகளின் வெப்பநிலை ஒரு சங்கிலித் தொடர் போல் மிகவும் பாதுகாப்பான முறையில் நிலை நிறுத்தப்படுவதை ‘குளிர்ச் சங்கிலி’ (Cold Chain) என்கிறார்கள். தடுப்பூசிகளைத் தெர்மோ ஃப்ளாஸ்க்குகளில் எடுத்துச் செல்லக் கூடாது. இது சரியான பாதுகாப்பைத் தராது.

தடுப்பூசி ரகசியங்கள் - 26

திலீப், கும்பகோணம்.

“நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்கிறேன். வெளியில் அலைய வேண்டிய வேலை என்பதால், வியர்வை அதிகமாக வருகிறது. உடலில் அதிகமாக வியர்வை துர்நாற்றம் வீசுவதால், எனக்குக் கூச்சமாக உள்ளது. என் வேலையை என்னால் விட முடியாது. என் உடலை துர்நாற்றம் இல்லாமலும் வியர்வை வழிந்தாலும் புத்துணர்வோடும் வைத்திருப்பது எப்படி?”

டாக்டர் சுதா,
சரும மருத்துவர், திண்டுக்கல்.

தடுப்பூசி ரகசியங்கள் - 26

“நமது உடலில் இரண்டு முதல் ஐந்து மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் வியர்வை சுரப்பதின் அளவுகள் மாறுபடும். வெயில் காலங்களில் வியர்வை அதிகம் சுரப்பதன் மூலம், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவது, வியர்வை சுரப்பிகள்தான். உடலில் வெப்பநிலை உயரும்போது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ்  தூண்டப்பட்டு, வியர்வை சுரப்பு அதிகரிக்கிறது.

உங்களைப் போல, வெளியில் அதிகம் சுற்றுவதால் வியர்வை அதிகமாக வரும் பிரச்னை இருப்பவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வியர்வையால் அதிக துர்நாற்றம் வீசினால், அதற்குக் காரணம் பாக்டீரியா. எனவே, தினம் இருமுறை ஆன்டிபாக்டீரியல் சோப் பயன்படுத்திக் குளித்து, ரசாயனங்கள் குறைவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். அதிக வியர்வை வருதல், உடல் துர்நாற்றம் பிரச்னை இருப்பவர்கள், உணவில்  வெள்ளைப் பூண்டு சேர்த்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

தளர்வான பருத்தி ஆடைகளை அணவது போதுமான நீரைக் குடிப்பது, போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம், வியர்வையால் துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.”