மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாட்டு மருந்துக் கடை - 11

நாட்டு மருந்துக் கடை - 11

நாட்டு மருந்துக் கடை - 11

பித்தம் தீர்க்கும் வில்வம்

சித்த மருத்துவத்தில் பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கிய மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. வில்வம் பித்தத்துக்கு அருமருந்து. பண்டைய நாட்களில் பழங்களின் ராஜா எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணமுடையது.

நாட்டு மருந்துக் கடை - 11

வில்வம், மஹாவில்வம் என இரண்டு வகை உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரை நோய், பேதி, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிற்று உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து. நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy) மற்றும் மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் அளவுக்கு  காலை, மாலை சாப்பிட்டுவந்தால், படிப்படியாய் நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் துவங்கும்.

ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர் விட்டுவைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் இரைப்பு நீங்கும். 50 கிராம் வில்வ இலைத்தூளுடன், 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும்.  காலை, மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபீலியா என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும் என நவீன அறிவியலால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பரிய முறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மருந்துக் கடை - 11

வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. துவர்ப்புத்தன்மையும் மலமிளக்கித்தன்மையும் பசியை உண்டாக்கும். சித்த மருத்துவத்தில் வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்குக் கொடுக்கலாம் (பெப்டிக் அல்சர்). இதனை நாமே வீட்டில் செய்து கொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்தில் காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும்.  காலையில் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.  அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக்கொண்டு செய்யும், வில்வாதி லேகியம் நல்மருந்து.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை. வில்வ இலை வில்வம் பழம் இரண்டும், குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து. வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறுபயறு, நெற்பொறி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கசாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும். வில்வ இலையை நல்லெண்ணையில் காய்ச்சி காது நோய்களுக்கு, காதில் விடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

நாட்டு மருந்துக் கடை - 11

இன்று பெருகிவரும் தொற்றாத வாழ்வியல் நோய்கள், உளவியல் நோய்கள், பத்தில் மூன்று நபருக்கு வருவதாக மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உளவியல் நோய்களில் முதலாவதாக மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்பு கூறியதுபோல் ஊறவைத்தோ கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தில் தற்போது ‘சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்திவரலாம்.

- தொடரும்