மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4

மூளை இல்லாமல் உயிர் வாழ முடியாது. ஆனால், மூளையின் சில பகுதி இல்லாமல் வாழ முடியுமா என்று கேட்டால், ‘முடியும்’ என்பதுதான் பதில். மூளையில் இன்று செய்யும் பல்வேறு அறுவைசிகிச்சைகளுக்கு அடிப்படை, 18-ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்தான். மூளையின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாடு பற்றியும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுவந்தன. பீனியஸ் கேஜுக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து மூளையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனார்.

எல்லோரிடமும் சண்டையிடுபவர் ஆனார். ‘மூளையில் ஏற்பட்ட காயம் ஒரு நல்லவரை கெட்ட மனிதராக மாற்றுகிறது என்றால், கெட்ட மனிதரை ஏன் நல்லவராக்க முடியாது?’ என ஆய்வுகள் தொடர்ந்தன. இதற்கு, மூளையின் முன்மடலில் சிறு அறுவைசிகிச்சை செய்தால் போதும் என நினைத்தனர்.

1890-களில் இரண்டு நாய்களுக்கு மூளையில் உள்ள ‘நியோகார்டெக்ஸ்’ என்ற பகுதி அகற்றப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அந்த நாய்கள் மிகவும் சாதுவாகிவிட்டனவாம். இதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில், மாயத் தோற்றம் தெரியும் பிரச்னையான ஹாலுசினேஷன் (Hallucination) பிரச்னை காரணமாக, அதிகப் பாதிப்புக்கு ஆளாகியிருந்த ஆறு ஸ்கீஸோப்ரீனியா (Schizophrenia) பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, கார்டெக்ஸ் பகுதியை அகற்றிப் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பிறகு சாந்தம் அடைந்தனர். இரண்டு பேர் மரணத்தைத் தழுவினர். இதனால், இந்த அறுவைசிகிச்சையின் பலன் என்ன, பாதிப்பு என்ன எனத் தெரியாமல் குழம்பினர்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4

1937-களில் டாக்டர் ஈகஸ் மோனிஸ் (Egas Moniz) முதன்முறையாக முன்மடலைச் சீரமைக்கும் லோபோடமி  (Lobotomy)அறுவைசிகிச்சையைச் செய்தார். (இது தொடர்பாக இவருக்கு 1949-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக நீடிக்கிறது). அவரைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் வால்டர் ஃப்ரீமேன் (Walter Freeman) மற்றும் டாக்டர் ஜேம்ஸ் டபிள்யு வாட்ஸ் ஆகியோர் முன்மடலின் சிறு திசுக்களை அகற்றும் அறுவைசிகிச்சையை அறிமுகப்படுத்தினர். 

டாக்டர் மோனிஸ் மனநலக் குறைபாட்டால் அவதிப்பட்ட பெண்மணிக்கு முன்மடலில் சிறு அறுவைசிகிச்சையைச் செய்தார். அவரைப் பின்பற்றி, ஃப்ரீமேன் மற்றும் வாட் இருவரும் முதன்முறையாக, மனநலப் பாதிப்பில் இருந்த ஒரு பெண்மணிக்கு மண்டையில் இரு சிறு துளைகளை இட்டு அறுவைசிகிச்சை செய்தனர். என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே மூளையின் முன்மடலில் சில பகுதிகளைக் கீறியும் அகற்றியும் இந்த அறுவைசிகிச்சையை செய்து முடித்தனர். இதற்கு இவர்கள் பயன்படுத்திய உபகரணம், ஐஸ் கட்டியைக் குத்தி உடைக்க உதவும் கம்பி (Ice-pick).

அறுவைசிகிச்சைக்குப் பிறகு அந்த பெண்மணியின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம். அதுவரை குடும்பத்தில் சிக்கல், சண்டை, தற்கொலை முயற்சி என நிம்மதியின்றி வாழ்ந்துவந்த அந்தப் பெண்மணி, அமைதியானவராக மாறிவிட்டார். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை  1942-ம் ஆண்டு இவர்கள் ‘நியூயார்க் அகாடமி ஆஃப் மெடிசின்’ இதழில் வெளியிட்டனர்.

டாக்டர் மோனிஸ் மற்றும் டாக்டர் ஃப்ரீமேன் செய்த அறுவைசிகிச்சையில் எந்த பாதிப்பும் ஏற்படாததால், 1940-ம் ஆண்டு முதல் 1950 தொடக்கம் வரை மனநல மருத்துவமனைகளில் மனநலக் குறைபாடு பிரச்னை உள்ளவர்களுக்குத் தீர்வு அளிக்கும் சிகிச்சையாகவே இது பார்க்கப்பட்டது. தலைவலி பிரச்னைக்குக்கூட இந்த அறுவைசிகிச்சையைப் பரிந்துரைத்திருக்கிறாராம் ஃப்ரீமேன். லோபோடமியால் மூன்றில் ஒரு பகுதியினர் பலன் அடைந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினருக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு பகுதியினருக்கு நிலைமை இன்னும் மோசமடையவே செய்தது. இந்த அறுவைசிகிச்சைக்கு அறிவியல்பூர்வமான முடிவுகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனால், எவ்வளவு விரைவாக பிரபலம் அடைந்ததோ, அதேபோல இந்த அறுவைசிகிச்சைக்கு 1950-களில் முடிவும் கட்டப்பட்டது.

- அலசுவோம்!

பிரபலம் அடைந்த லோபோடமி

ந்தப் புகழின் உச்சியிலேயே 1940 - 60ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு காலத்தில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூளை முன்மடல் சீரமைப்பு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 25 அறுவைசிகிச்சைகள். இங்கிலாந்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் சகோதரி ரோஸ்மேரிக்கு டாக்டர் ஃப்ரீமேன் உடன் முதன் முறையாக அறுவைசிகிச்சை செய்த டாக்டர் ஜேம்ஸ் வாட்ஸ் இந்த அறுவைசிகிச்சையைச் செய்திருக்கிறார் என்றால், இது எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த அறுவைசிகிச்சையைச் செய்த பிறகு இறக்கும் வரையில் ரோஸ்மேரி, தன்னுடைய அன்றாட வேலைகளைக்கூட செய்ய முடியாத அளவுக்கு கிட்டத்தட்ட படுத்தபடுக்கையாகிவிட்டார் என்பதுதான் பரிதாபம்.