மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5

மூளையின் ஒவ்வொரு பகுதியும் என்னென்ன வேலை செய்கிறது, இவை அனைத்தும் ஒருங்கிணைந்து எப்படி மனிதனின் எண்ணங்கள், செயல்பாடுகள் போன்றவற்றை இயக்கி, அவனை தனித்தன்மை உள்ளவனாக உருவாக்குகின்றன என விஞ்ஞானிகள் மற்றும் மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சி செய்து, வியப்பில் ஆழ்த்தும் பல தகவல்களைக் கண்டறிந்தாலும், அவை எல்லாம் மூளையின் ரகசியங்களில் ஒரு சிறு பகுதிதான். இன்னும் கண்டறிய வேண்டியது மலை அளவு இருக்கிறது. பெருமூளையில் உள்ள நான்கு மடல்களில் ஒவ்வொன்றும் தனித்தனியான பணிகளைச் செய்கின்றன. இதில் முன்மடல் பற்றி பார்த்தோம். இந்த இதழில், ‘டெம்போரல் லோப்’ எனப்படும் நெற்றிப்பொட்டு மடலைப் பற்றி பார்க்கலாம்.

பெருமூளையின் அடிப்பகுதியில் இந்த மடல் அமைந்திருக்கிறது. பார்வைத்திறனில் சில குறிப்பிட்ட விஷயங்கள் கேட்க, பேச, எழுதக் காரணமாக இருப்பது இந்த மடல்தான். இது தவிர படித்தல், மொழி, உணர்ச்சிகள், நினைவாற்றல் என இன்னும் ஏராளமான பணிகளும் இந்த மடலுக்கு உள்ளன. ஒரு மனிதனின் ஆளுமை மற்றும் பாலியல் செயல்பாட்டுக்கு இதன் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5

நெற்றிப்பொட்டு மடல் நம்முடைய கண், காது, மூக்கு போன்ற உணர்ச்சி மையங்களில் இருந்து வரும் தகவல்களைக் கையாள்கிறது. இதில் உள்ள பிரைமரி ஆடிட்டரி கார்டெக்ஸ் என்ற பகுதி, நம்முடைய கண்களுக்குப் பின்னால் அமைந்திருக்கிறது. செவியில் விழும் ஒலி இங்கு கொண்டுசெல்லப்பட்டு, அது என்ன ஒலி எனப் பிரித்தறியப்படுகிறது.  அதேபோல, டெம்போரல் லோபின் முன்பக்கம் நம்முடைய கண்களுக்கு அருகில் இருக்கின்றன. இதுதான் நாம் பார்க்கும் பொருள் என்ன என அடையாளம் காண உதவுகிறது.

ஒருவரின் ஆளுமை மற்றும் அடிப்படைக் குணாதிசயங்கள் இங்கேதான் முடிவு செய்யப்படுகின்றன. போராட்ட குணம், எரிச்சல் உணர்வு மற்றும் குழந்தைத்தனமான நடவடிக்கை என அனைத்தும் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றன. பார்வை மற்றும் கேட்டல்திறனை டெம்போரல் லோப் கட்டுப்படுத்துவதுதான் இதற்கு முக்கியக் காரணம். இதன் வழியாகத்தான் வெளி உலகத் தகவல்கள் மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.

மறதி நோய்க்குக் காரணம்?

நெற்றிப்பொட்டு மடலின் மிக முக்கியப் பகுதி ஹிப்போகாம்பஸ். இது நெற்றிப்பொட்டு மடலின் மையத்தில் அமைந்திருக்கிறது. இதுதான் குறுகியகால நினைவாற்றல் மற்றும் நீண்டகால நினைவாற்றல், நம்மைச் சுற்றி உள்ளவற்றை உருவகப்படுத்துவது போன்றவற்றுக்கு மிகவும் அவசியம். இங்குதான் தகவல்கள் கொண்டு செல்லப்பட்டு, குறுகியகால நினைவாற்றலாகச் சேகரித்துவைக்கப் படுவதுடன், தேவைப்படும் போது பயன்பாட்டுக்கு வெளிக்கொணர்தலும் செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு நாம் ஒரு வாசனையை நுகர்கின்றோம். அது அழகிய ரோஜாப் பூவின் நறுமணம் என நம்முடைய மூளை அறிந்துகொள்கின்றது. நம்முடைய மூளையில் ஏற்கெனவே ரோஜாப் பூவின் நறுமணம் எப்படி இருக்கும் என்ற தகவல் பதிந்திருக்கிறது. வாசனை நுகரும் நேரத்தில் அது பற்றிய சிக்னல் மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அது என்ன என்று பகுத்தறியப்படுகிறது. இவ்வளவும் விநாடிக்கும் குறைவான நேரத்தில் நடப்பதுதான் வியப்பு. அல்சைமர் மற்றும் மறதி நோயால் அவதிப்படுபவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக தற்போது விஞ்ஞானிகள் அதிக அளவில் இந்த நெற்றிப்பொட்டு மடல் பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.

விபத்து, மூளையில் கட்டி போன்ற பிரச்னையால் டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, கேட்பது, ஒரு பொருளை அடையாளம் காண்பது மற்றும் அதைப் பற்றி விவரிப்பது போன்றவை பாதிக்கப்படும். மேலும், பாலியலில் அதிகப்படியான ஈடுபாடு அல்லது ஈடுபாடு இன்மை, பொருட்களை வகைப்படுத்தும் திறன் இன்மை போன்றவையும் ஏற்படும். குறிப்பாக, இடது பக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிக்கப்படும்போது, மொழித்திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் போன்றவை பாதிக்கப்படும். வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிக்கப்படும்போது, சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறிவதில் பாதிப்பு ஏற்படும்.

வலது-இடது வேறுபாடு

மூளையின் மற்ற பகுதிகளைப்போல இதுவும் வலது மற்றும் இடது என இரண்டாகப்

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5

பிரிக்கப்படுகிறது. வலது பக்க நெற்றிப்பொட்டு மடலானது மனித உடலின் இடது பக்கத்தை ஆதிக்கம் செய்கிறது. அதேபோல, இடது பக்க நெற்றிப்பொட்டு மடலானது வலது பக்க உடலை ஆதிக்கம் செலுத்துகிறது.

பொதுவாக வலது கை எழுத்து பழக்கம் உள்ளவர்களுக்கு, மூளையின் இடது பகுதி டெம்போரல் லோப் காரணமாக இருக்கிறது. ஆனால், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, மூளையின் வலது மற்றும் இடது என இரண்டு பகுதிகளும் காரணமாக இருக்கின்றன. இதனால்தான், வலது கை எழுத்துப் பழக்கம் உள்ளவருக்கு விபத்தில் மூளையின் வலது டெம்போரல் பாதிக்கப்படும்போது, அவர்களால் எழுத முடியாமல் போய்விடுகிறது. இதுவே, இடது கை பழக்கம் உள்ளவருக்கு எந்த ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், மற்றொரு பகுதி நன்றாக இருப்பதால், எழுதுவதில் எந்த பிரச்னையும் ஏற்படுவது இல்லை.

- அலசுவோம்!