அவள் 16
Published:Updated:

நோய் நாடி!

புற்றுநோய்... மற்றொரு நோயே!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், புற்றுநோய் பற்றி விரிவாகப் பேசுகிறார், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும், சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் குணசாகரன்.  

புற்றுநோயும் மற்றொரு நோய்தான்!

‘‘சினிமாக்களும், சீரியல்களும் புற்றுநோயை ‘ஓவர் சென்டிமென்ட்’ சேர்க்கப் பயன் படுத்தியதால், புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போன்ற எண்ணம் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், அதைப் பற்றி உண்மைகளை அறியும்போது, ‘இதுவும் மற்றொரு நோய்தான்’ என்ற தெளிவு கிடைக்கும்!’'

- டாக்டர் குணசாகரனின் அறிமுகமே, அச்சம் விலக்கியது.

புற்றுநோய் என்றால் என்ன..?

‘‘உடலில் உள்ள செல்களின் முறையற்ற வளர்ச்சிதான் (Cell Disorder) புற்றுநோய். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும். சருமத்தில் இருக்கும் செல்கள் தங்களை இரு வாரத்துக்கு ஒருமுறை

நோய் நாடி!

புதுப்பித்துக்கொள்ளும். 24 நாட்களில் ஒரு இன்ச் முடி வளரும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, நுரையீரலில் செல்கள் இறந்து, மீண்டும் புதிய செல்கள் உருவாகும். 260 நாட்களுக்கு ஒருமுறை கண்களில் உள்ள லென்ஸ் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். மூளையில் இருக்கும் சில செல்கள், 21 மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளும். இதயத்தில் இருக்கும் செல்கள் 320 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளும்.

இந்தத் தொடர் நிகழ்வின் ஊடே, ஏதேனும் இரண்டு செல்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை ஏதோ ஒரு காரணி உடைக்கும்போது, அந்த செல்கள் தனித்து விடப்படும். இவை மற் றொரு செல்லுடன் சேர முடியாது. இந்தக் குறைபாடு தொடரும்போது, தனித்துவிடப்படும் செல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவை ஒன்று சேர்ந்து, ஒன்றாக வளர்ந்து புற்றுநோயை உண்டாக்கும். உடலில் இதுபோன்ற செல் பிணைப்பைப் பாதிக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதைக் கண்டறிந்து உடனுக்குடன் அழித்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, அந்த செல்கள் வளர்ச்சி பெற்று புற்றுநோயாக உருவெடுக்கிறது.

முதன்மை தடுப்பு!  

நோய் நாடி!

புற்றுநோய் பற்றிய மருத்துவத் தகவல்களை அறிந்துகொள்வதே, அந்நோய்க்கான முதன்மை தடுப்பு!

•  புற்றுநோய் ஏற்பட சுற்றுச்சூழலில் உள்ள கார்சினோஜென் என்ற, புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் முக்கிய காரணம். புகை, தூசு, அஸ்பெஸ்டாஸ், மணல், மரத்துகள் ஆகியவை இருக்குமிடங்களில் கார்சினொஜென் அதிகம் காணப்படுகிறது. இந்த இடங்களில் பணிபுரிபவர் களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. 

•  மரபும் புற்றுக்குக் காரணம். வீட்டில் அம்மா, அப்பாவுக்கு இந்நோய் வந்தால் வாரிசுகளுக்கும் வர வாய்ப்பு உண்டு. அதே நேரம், நிச்சயமாக வரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

•  வாழ்நாள் அதிகரிப்பதும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருக ஒரு காரணம் என்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி வாழ்நாள் 35 - 40 வயது வரை இருந்தது. இன்றோ அது 60 வயதைத் தாண்டிவிட்டது. 60 வயதைத் தாண்டி வாழ்பவர்களில் 30% பேருக்குப் புற்றுநோய் ஆபத்து இருப்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

•  புகையிலை, மதுப் பழக்கத்தைக் கைவிடுவது, மாதவிடாய்க் காலத்தில் சுத்தமாக இருப்பது, கதிரியக்கம் உள்ள இடங்களில் உரிய பாதுகாப்புடன் பணியாற்றுவது, காற்று, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பது... இவற்றைப் பின்பற்றினால் புற்றுநோயில் இருந்து விலகி நிற்கலாம்.

•  சில சமயங்களில் தைராய்டு பிரச்னைகளும் புற்று நோய் வரக் காரணியாக அமைவதுண்டு. அதிகக் கொழுப்பு, மாவுச்சத்து நிறைந்த உணவுகள், நன்றாக எண்ணெயில் வறுக்கப்பட்ட, பொரிக்கப்பட்ட உணவுகள், விலங்குக் கொழுப்பு, விலங்குப் புரதம் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்வது... இவையெல்லாம் புற்றுநோய்க்கு `வெல்கம்' சொல்லக்கூடும்.

•  ஆல்கஹால், மறைமுகமாகப் புற்றுநோய்க் காரணி. உணவு செரித்தலின்போது, ஆக்சிஜ னேற்றம், ஆக்சிஜன் ஒடுக்கம் முதலான 45,600 வேதியியல் மாற்றப் பணிகள் நடக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களைக் கல்லீரல் சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஆல்கஹால் இந்த நுண்ணூட்டச் சத்துகளை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது. மேலும் கல்லீரலை சிதைவைடையச் செய்கிறது. இதனால், ஏதேனும் சில நுண்ணூட்டச் சத்துகள் தொடர்ந்து தடைப்பட்டு உடலுக்குக் கிடைக்காமல் போக... அது புற்றுநோய்க்குக் காரணமாகலாம்.

•  செல்களுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் சீராக உறுப்புகளைச் சென்றடைந் தாலே, செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒருவரின் உடல்வாகுக்கு ஏற்ப டயட்டீஷியன் பரிந்துரைப்படி உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு என அனைத்து சத்துக்களும் உடலுக்கு அவசியம் தேவை. காய்கறிகள், பழங்களில் இருந்து பல நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் இருக்கும். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் கல்லீரல் நடத்தும் உணவு செரிமானத்துக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதை குறித்துக்கொள்க.

•  அப்பளம், வற்றல், ரோட்டோரம் விற்கும் சமோசா, பீட்ஸா, ஃபிரெஞ்ச் ஃப்ரை, சிக்கன் வறுவல், பதப்படுத்தப்பட்ட உணவுகள்... இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஒரு நாளைக்கு 40 மில்லி. எண்ணெய் மட்டும்தான் உணவில் சேர்க்க வேண்டும். 

•  மிளகாய்த்தூள், மசாலா வகைகள் என பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து ரெடிமேட் மசாலாக்களும் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவையே. வீட்டிலேயே சாம்பார் பொடி, ரசப்பொடி தயார் செய்து பயன்படுத்துவதே சிறந்தது.

•  புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மிக முக்கியமான அறிவுரையே, ஒவ்வொரு வேளை உணவையும் அவ்வப்போது சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதுதான். சமைத்த உணவின் ஆயுட்காலம் சராசரியாக நான்கு மணி நேரம்தான். காலையில் செய்த உணவை இரவு சாப்பிட வேண்டாம். இரவு புதிதாகச் சமைத்துச் சாப்பிடவும். ஃப்ரிட்ஜில் உள்ள காய்கறிகள், மாவு போன்றவை அறையின் வெப்பநிலைக்கு வந்தவுடன்தான் சமைக்கவும்.

•  ஆடு, மாடு, பன்றி இறைச்சியை அதிகமாக சாப்பிடுவதால், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஸ்டீராய்டு முதலான ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழி சாப்பிடுவது புற்றுநோய்க்குக் காரணமாகலாம். இயற்கைச் சூழலில் வளர்க் கப்பட்ட நாட்டுக்கோழி, மீன் போன்றவற்றை வாரம் ஒரு முறை அதிக அளவு எண்ணெய் சேர்க்காமல் அளவோடு சமைத்துச் சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை’’

- பட்டியலிட்ட டாக்டர் குணசாகரன், கேன்சர் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தொடர்ந்து, இன்னும் ஆழமாகப் பேசவிருக் கிறார் அடுத்த இதழில்..!

- நோய் நாடி வெல்வோம்...

சா.வடிவரசு

பரிசோதனை!

புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்

நோய் நாடி!

புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் போன்ற சோதனைகள் மூலம் 99 பர்சன்ட்டும், எண்டோஸ்கோப்பி (endoscopy) சோதனை மூலம் 100 பர்சன்ட்டும் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவிடலாம். 1 - 30 வயது வரை உள்ளவர்கள், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும், 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறையும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நன்று.

அறிகுறிகள்!

புற்றுநோய் என்பது திடீரென்று ஓரிரு நாளில் வருவது கிடையாது. சராசரியாக 11 வருடங்கள் உடலில் மெள்ள மெள்ள வளர்ந்து, அதன் பிறகே அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சுலபமாக குணப்படுத்த முடியும். அறிகுறிகளுக்குப் பின் கண்டறியப்பட்டாலும், நவீன சிகிச்சைகளின் மூலமாக கட்டுப்படுத்த முடியும். புற்றுநோய்க்கான அறிகுறிகள்...
 

நோய் நாடி!
நோய் நாடி!