மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6

மேலே அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறோம். நீல நிறமாக இருக்கிறது. மேகங்கள் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். பச்சைப்பசேல் என இருக்கும் இயற்கை அழகை ரசிக்கிறோம். நம் எதிரில் உள்ள சுவரில், பொருட்களில் மோதாமல் இருக்கிறோம். இது எப்படி சாத்தியம் என்று யோசித்திருக்கிறோமா? நம் கண்களால் பார்க்கும் ஒவ்வொன்றையும் ‘அது என்ன?’ என உருவகப்படுத்தும் வேலையைச் செய்யும் பெருமூளையின் ‘ஆக்ஸிபிட்டல் லோப்’ (Occipital Lobe) எனப்படும் பார்வை மடல்தான் அனைத்துக்கும் காரணம்.

உலகத்தைப் பார்க்க கண்கள் அவசியம். ஆனால், பார்வைத்திறனுக்குக் கண் வெறும் கருவிதான். கண்கள், கண்ணில் இருந்து மூளைக்குச் செல்லும் பார்வை நரம்பு, பெருமூளையின் ஆக்ஸிபிட்டல் லோப் என மூன்றும் சரியாக இருக்கும்போதுதான், நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். இதில், கண்களில் இருந்து செல்லும் பார்வை நரம்பு, இடது மற்றும் வலதுபக்கப் பார்வை மடல் என இரண்டுப் பகுதிக்குமே செல்கின்றன. நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்தக் காட்சியானது விழித்திரையில் தலைகீழாக விழுகிறது. இதை, பார்வை நரம்புகள் மூளையின் பார்வை மடல் பகுதிக்கு சிக்னலாகக் கொண்டு சேர்க்கின்றன. அங்கு உள்ள ‘விஷுவல் ரிசீவ் ஏரியா’ என்ற பகுதி, அந்த சிக்னலைப் பெற்றுக்கொள்கிறது. அங்கு வைத்துத்தான் அது என்ன எனத் தெரிகிறது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6

பார்வை மடலின் மூலம் காட்சிப் பதிவு நடக்கிறது. ஆனால், அது என்ன என அலசி ஆராயும் பணியில் டெம்போரல் மடல் உள்ளிட்ட மற்ற மடல்களுக்கும் பங்கேற்கின்றன. டெம்போரல் லோப் எப்படி நம்முடைய காதில் விழும் சத்தத்தை அலசி, ஆராய்ந்து அது என்ன என்று நம்மை அறியவைக்கிறதோ, அதேபோலத்தான், நம்முடைய கண்களால் பார்க்கப்படும் ஒவ்வொரு காட்சியையும் தொடர்ந்து மிக வேகமாகவும் அலசி ஆராய்ந்து அது என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது.

‘மழை’ என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். கண்ணில் விழுந்த அந்த வார்த்தை, மூளையின் பார்வை மடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அது ‘தமிழ் எழுத்து’ என அடையாளம் காணப்படுகிறது. பின்னர், அங்கிருந்து மூளையில் உள்ள டெம்போரல் லோப் என்ற பகுதிக்குக்கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், மொழி, வார்த்தைக்கான பகுதியில் அது என்ன வார்த்தை என ஆராயப்படுகிறது. இதுவே, நமக்குத் தெரியாத வேற்று மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை, வாக்கியத்தைப் பார்க்கும்போது அது ஓர் எழுத்து என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. அதன், அர்த்தம் நமக்கு தெரிவது இல்லை. அந்தத் தகவல் பார்வை மடலைத் தாண்டி வேறு பகுதியில் பரிசீலனை செய்யப்படுவது இல்லை. இதற்கு, பார்வை மடலை மட்டுமே நாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று அர்த்தம். இப்படி, மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாகவே, நம்மால் இந்த முழு உலகத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது.

ஆப்டிக்கல் லோபின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவிதமான காட்சித் தொடர்பு பணியைச் செய்கின்றன. பார்வை மடலின் பணிகளைக்கொண்டு, பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் செயல்பாட்டுப் பகுதியானது ‘ப்ரைமரி விஷுவல் கார்ட்டெக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. பெருமூளையின் மடல்களில் மிகச் சிறியது ஆக்ஸிபிட்டல் லோப். இது மூளையின் பின்பகுதியில் அதாவது நம்முடைய பின் மண்டையில் அமைந்திருக்கிறது. இதனால்தான், அதிக அளவில் விபத்தில் பாதிக்கப்படும் பகுதியாக ஆப்டிக்கல் லோப் இருக்கிறது. பார்வை மடலில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, பலவீனமானாலோ, கண்ணில் இருந்து வரக்கூடிய சிக்னலை நம்முடைய மூளையால் சரியாகப் பரிசீலிக்க முடியாது. இதனால், பார்வையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். சிலருக்கு முழுமையாகப் பார்வை இழப்பு ஏற்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட அளவு பார்வை இழப்பு, நிறங்களை அறிய முடியாத தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்- அலசுவோம்!

பார்வை மங்குதல்

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6

சிலருக்கு தலைவலியுடன், பார்வை மங்கலாகத் தெரியும். அவர்களுக்குப் பார்வை மடலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்துவிட்டால், பெரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.