மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7

சின்ன வயதில் படித்த பாடம், சொல்லிக்கொடுத்த ஆசிரியர், முதல் நாள் கல்லூரிக்குச் சென்ற அனுபவம் என நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் இன்றும் நம்முடைய மனதில் நீங்காமல் இருக்கின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது? மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே, நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, ஏன் அதில் தவறுகள் ஏற்படுகின்றன எனக் கண்டறிய முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம். இன்றைய நவீன யுகத்தில்கூட இதற்கான முழுமையான பதில் கண்டுபிடிக்கப்படவில்லை.

என்கோட், ஸ்டோரேஜ், ரெட்ரிவல் என்ற மூன்று செயல்பாடுகளின் தொகுப்பே நினைவாற்றல். இது, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியால் மட்டும் நிகழ்த்தப்படுவது இல்லை. இது, ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடு. மூளையின் பல பகுதிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதன் மூலம் நினைவாற்றல் என்ற செயல் நடக்கிறது.

பைக் அல்லது கார் ஓட்டுகிறோம். இது எப்படி நடக்கிறது? நம்முடைய மூளையில் ஏற்கெனவே வாகனம் எப்படி ஓட்ட வேண்டும் என்ற தகவல் பதிவாகி உள்ளது. எப்படி இயக்க வேண்டும் என்ற தகவல் மூளையின் ஒரு பகுதியில் இருந்தும், நாம் செல்ல வேண்டிய பாதைக்கான வழி மூளையின் மற்றொரு பகுதியில் இருந்தும், பாதுகாப்பாக ஓட்டுவது எப்படி என்ற தகவல் வேறொரு பகுதியில் இருந்தும், எதிர்பாராத விதமாக நம் மீது ஒரு வாகனம் இடிப்பதுபோல வருகிறபோது ஏற்படக்கூடிய பயம், நடுக்கம் போன்றவை, இன்னொரு பகுதியில் இருந்தும் வருகிறது. பார்த்தல், கேட்டல், எழுத்துக்கள், வார்த்தைகள், உணர்ச்சிகள் அனைத்தும் சங்கேதக் குறியீடாக மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறது. இந்தத் தகவலை பயன்பாட்டுக்கு எடுப்பதைத்தான் `நினைவாற்றல்’ என்கிறோம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7

நினைவாற்றல் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களின் தொகுப்பு. குறுகியகால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் மூளையின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு செயல்முறைகள் மூலம் பதியப்படுகின்றன. நாம் ஒருவரைப் பார்க்கிறோம், வழியில் சுவர், பலகைகளில் எழுதியுள்ள தகவலைப் படிக்கிறோம். மலர்களின் வாசனை நம்மை ஈர்க்கிறது... இப்படி, பலவகைகளில் தகவல்கள் மூளைக்குக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

மூளைக்குச் சென்ற தகவல்கள் அனைத்தும் மிகக் குறுகிய நினைவாற்றல், குறுகிய நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என்ற மூன்று வழிகளில் சேமிக்கப்படுகின்றன. இந்தத் தகவல், கண், காது, மூக்கு போன்ற நம்முடைய புலன்கள் மூலமாகக் கிடைக்கின்றன. இதை ‘சென்சரி மெமரி’ என்று சொல்வர். இதில் இருந்துதான், அந்தத் தகவலானது குறுகியகால நினைவாற்றலாக மாறி, பின்னர் நீண்டகால நினைவாற்றலாகிறது.

சாலையில் எத்தனையோ விஷயங்களைப் பார்த்தாலும், சில நிமிடங்களில் அது மறந்துபோகிறது. என்ன பார்த்தோம் என்றுகூட நமக்கு நினைவில் இருப்பது இல்லை. இவற்றை மிகக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறோம். அது நம்மை ஈர்க்கிறது. அதைப் பற்றியே சிந்தித்தபடி அலுவலகம் செல்கிறோம். இது சில மணிகள் முதல் சில நாட்கள் வரை நம்முடைய நினைவில் இருக்கும். இதைக் குறுகியகால நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், நம் அப்பா, அம்மா, கணவன், மனைவி, குழந்தைகள் பெயர், வீட்டு முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். இவை எளிதில் மறப்பது இல்லை. இவற்றை நீண்ட கால நினைவாற்றல் என்கிறோம்.

சேமிக்கப்பட்ட தகவல்களை எப்போது, எப்படி வெளியே எடுக்கிறோம் என்பதைத்தான் ரெட்ரிவல் என்கிறோம். ‘உங்கள் பெயர் என்ன?’ என்று யாராவது கேட்டால், ‘டக்’ என்று சொல்லி விடுவோம். ஆனால், `10-ம் வகுப்பு படிக்கும்போது, உங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் பெயர் என்ன?’ என்று கேட்டால் சற்று யோசிப்போம். அவரது பெயர் நினைவில் இருக்கும். ஆனால், உடனடியாக அதை நம்மால் நினைவுகூர முடியாமல் போய்விடலாம். நம் மூளை பல்வேறு நினைவுகளை அலசி ஆராய்ந்து, அந்தத் தகவலை வெளிக்கொண்டுவர முயற்சிக்கும். எப்படி, கம்ப்யூட்டரில் கூகுள் சர்ச் இன்ஜின் தகவலைத் தேடுகிறதோ அதுபோல. தலையில் அடிபடுவது, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, நீர் கோத்துக்கொள்ளுதல், வயது அதிகரித்தல் போன்ற காரணங்களால் மூளையின் நினைவுத்திறன் பாதிக்கப்படும்.

- அலசுவோம்!