Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 1

புதிய பகுதி

அலர்ஜியை அறிவோம் - 1

ஹோட்டலில் இளம் வயதினர்கூட ‘நான் மீன் சாப்பிட மாட்டேன்... அலர்ஜியாகிவிடும்’ என்று சொல்வதும், மருந்துக் கடைகளில் ‘எனக்கு சல்ஃபா மருந்து அலர்ஜி. சளிக்கு சல்ஃபா இல்லாத மாத்திரையைக் கொடுங்கள்’ என்று கேட்பதும், `தலைக்கு ‘டை’ அடிக்க மாட்டேன்; ஹேர்டை எனக்கு அலர்ஜி’ என்று கவலைப்படுவதும், ‘வீட்டில் ஒட்டடை அடித்தால், அலர்ஜியாகி தும்மல் வரும். சளிப்பிடிக்கும்’ என்று வருத்தப்படுவதும் இந்தக் காலத்தில் சர்வசாதாரணம். மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த சந்தைப்பொருட்கள்,  நிறம்தரும் வேதிப்பொருள்கள் போன்ற பல காரணங்களால் காய்ச்சல், தலைவலி, தடுமத்துக்கு அடுத்தபடியாக பலரையும் பல நேரங்களில் அவதிப்படுத்துவது அலர்ஜி.

அலர்ஜி என்றால் என்ன?

நமக்கு ஒவ்வாத ஒரு பொருள் நம் உடலுக்குள் நுழைந்தால் அல்லது உடலுக்குள்ளேயே இருந்தால், உடலானது அதை எதிர்க்கிறது. அந்த எதிர்வினையைத்தான் ‘அலர்ஜி’ அல்லது ஒவ்வாமை என்கிறோம். இந்த எதிர்வினையின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி இருக்கும். ஒருவர் தூசு நிறைந்த அறைக்குள் நுழையும்போது ஐந்து முறை தும்மினால், அது சாதாரணம். மாறாக, 50 முறை தும்மல் போட்டால், அது அலர்ஜியின் வெளிப்பாடு. கொசு  கடித்தால், சிறிது நேரம் அரிப்பதும் வலிப்பதும் இயல்பு. அதுவே, இரவு முழுவதும் அரித்தால், அது அலர்ஜி. அலர்ஜிக்குப் பல காரணங்கள் இருப்பதுபோல், அலர்ஜியின் வெளிப்பாடும் பலவிதமாக இருக்கும்.

அலர்ஜியை அறிவோம் - 1

அலர்ஜிக்கு அடிப்படை!

உடலில் ஒரு நோய்க் கிருமி நுழையும்போது, அதை எதிர்த்து உடல் செயல்படுவதைப் போலவே ஒவ்வாத பொருளையும் எதிர்க்கிறது. ஆனால், தீங்கற்ற பொருளைக்கூட தீங்கு செய்யும் பொருளாகத் தவறாக அடையாளம் கண்டு எதிர்க்கிறது இதுதான் அலர்ஜிக்கு அடிப்படைக் காரணம்.  இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நம் உடலில் இயங்கும் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்று சொல்லக்கூடிய தற்காப்புப் படையை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

உடலின் ராணுவம்!

  நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; 24 மணி நேரமும் நம்மைக் காவல் காக்கும் வேலைதான். நாட்டைக் காக்கும் ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் கேம்ப் ஆபீஸ். ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். ‘டி’ அணுக்கள், ‘பி’ அணுக்கள், ‘மேக்ரோபேஜ்’ அணுக்கள், ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) எனப் பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள். ரத்தக் குழாய்களும் ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.

  சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத கிருமிகள், நஞ்சாகிப்போன உணவுகள், எதிர்பாராத விஷக்கடிகள் போன்றவற்றுடன்தான் யுத்தம். இந்த ‘எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப்படை தன்னிடம் உள்ள சிப்பாய்களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இந்த மாதிரியான எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்து, தளபதிக்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து அல்லது துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை. 

இவ்வாறு, நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும் அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப்படை தருகின்ற சக்திக்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ (Immunity) என்று பெயர். இது எல்லோருக்கும் ஒரே மாதிரி நிகழ்கிற நிகழ்வு.    ஆனால், அலர்ஜி என்பது உடலுக்கு ஒவ்வாத பொருளை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கான எதிர்வினை. இது எல்லோருக்கும் ஏற்படுகிற நிகழ்வு அல்ல. ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒரு பொருள்,  இன்னொருவருக்கு ஒன்றும் செய்யாது. அப்போது, இந்த எதிர்வினை அவருக்கு ஏற்படுவது இல்லை என்பதுதான் காரணம்.

அலர்ஜி ஏற்படும் விதம்

உடலுக்கு ஒவ்வாத ஒரு புறப்பொருள் அல்லது உடலின் உட்பொருள் உடலுடன் தொடர்புகொள்கிறபோது, ரத்த வெள்ளையணுக்களின் சிப்பாய்கள் அதை எதிரியாக எண்ணித் தாக்கத் தொடங்கிவிடும். அப்போது, ரத்தத்தில் அந்த ஒவ்வாத பொருளுக்கு ‘இம்யூனோகுளோபுலின் - இ’ (IgE) எனும் எதிரணுப் புரதம் உருவாகும். இதை, ரத்தப் பிளாஸ்மா செல்கள் உருவாக்குகின்றன. ஒவ்வாத பொருள் முதல் முறையாக உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். அதே ஒவ்வாத பொருள் மீண்டும் உடலுக்குள் நுழையும்போது, இது அந்த ஒவ்வாமைப் பொருளைக் ’கைது’ செய்துவிடும். புரதத்தால் ’கைது’ செய்யப்பட்ட ஒவ்வாமைப் பொருளால் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. இந்தப் புரதமும் ஒவ்வாமைப் பொருளும் சேர்ந்து, ரத்தக் குழாய் திசுவின் உள்ள மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, புரோட்டியேஸ், ‘லுயூக்கோட்ரின்’ போன்ற  வேதிப்பொருள்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால், அலர்ஜியின் முக்கிய அறிகுறிகளான அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படும்.

அலர்ஜியை உருவாக்கும் ஆன்டிஜென், இம்யூனோஜென், ஹேப்டன் போன்றவற்றைப் பற்றி அடுத்த இதழில் விளக்கமாகப் பார்க்கலாம்.

- எதிர்வினை தொடரும்

அலர்ஜி டேட்டா! 

ஆஸ்துமா, கரப்பான் (Eczema) போன்ற அலர்ஜி தொடர்பான நோய்கள் ஹிப்போகிரேட்ஸ் காலத்துக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களிடமே  காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது. என்றாலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அலர்ஜிக்குக் காரணம் புரிந்தது. வியன்னாவில் பிறந்து ஆஸ்திரியாவில் குடியுரிமை பெற்ற குழந்தைநல மருத்துவர் கிளமென்ஸ் பீட்டர் வான் பிர்கெட் (Clemens Peter Von Pirquet) என்பவர், மனித உடலில் நுண்ணுயிர்கள் நுழைகிறபோது ஒரு மாறுபட்ட செயல் நிகழ்வதாக 1906ல் கண்டறிந்து, ’அலர்ஜி’ (Allergy) என்று அதை அழைத்தார். கிரேக்க மொழியில் “allos” என்றால், ‘மாறுபட்ட’ எனவும் “ergon” என்றால் ’எதிர்வினை’ எனவும் பொருள். எனவே, அலர்ஜி என்பது உடலில் நிகழ்கின்ற ஒரு மாறுபட்ட எதிர்வினைச் செயலைக் குறிப்பது என்ற கருத்து இவருக்குப் பிறகுதான் பரவியது.

ஜெயலட்சுமி, பொள்ளாச்சி.

“எனக்கு 50 வயதாகிறது. மெனோபாஸ் துவங்கிவிட்டது. எப்போதும், உடல் மிகவும் சோர்வாக உள்ளது. நான் சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாமா? எனில், எந்தெந்த சப்ளிமெண்ட்கள் எனக்குத் தேவை?”

டாக்டர். உமா பொன்சிங் பெண்கள் நல மருத்துவர், திருநெல்வேலி.

அலர்ஜியை அறிவோம் - 1

“மெனோபாஸ் என்பது பெண்களின் மாதவிடாய் முழுவதுமாக நிற்கும் ஒரு பருவம். இது பொதுவாக, பெண்களுக்கு 45  முதல் 50 வயதினில் ஏற்படும். இந்த மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்குப் பலவிதமான மன மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த அறிகுறிகள் தோன்றும். ஈஸ்ட்ரோஜன் வெளியேற்றத்தால் மனஅழுத்தம், சோர்வு, எரிச்சல், துக்கமின்மை, அதிக அளவிலான வியர்வை போன்றவை ஏற்படும். இந்தத் தருணங்களில்

அலர்ஜியை அறிவோம் - 1

குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்புமே சிறந்த மருந்தாகும். தினமும்  வைட்டமின் இ 400 எடுத்துகொள்வது, சூடான நீர்த் துளிகளை  அகற்றுகிறது. வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் வலு இழப்பைத் தடுகின்றன. குணசிங்கிச் சாறு மனநல உயர்த்தியாகப் பயன்படுகிறது. கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் ஹார்மோன் மாற்றுசிகிச்சை செய்யப்படுகிறது. இத்துடன் தினமும் ப்ரிமரின் (Premarin)  0.625mg அல்லது 1.25mgs போன்ற ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும்  மேட்ராக்ஸிப்ரோகெஸ்ட்ரோன் (Medroxyprogestrone)ஒவ்வொரு சுழற்சியின் கடைசி 10 நாட்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கு, எந்த சப்ளிமென்ட் தேவை என்பதை, ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்தபின் எடுத்துக்கொள்வது நல்லது.”