குடும்பம்

வலிதான் கடவுள், மனிதனுக்குத் தந்த மிகப் பெரிய வரம். ஆனால், அதை அனுபவிப்பவர்கள் அனைவரும் அதை சாபமாகத்தான் பார்க்கிறார்கள்.
ஏதோ ஒன்று உள்ளே சரி இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிதான் வலி. முள் காலில் ஏறியதை வலி சொல்லாவிட்டால், ஒரு சர்க்கரை வியாதிக்காரர் காலையே இழக்க நேரிடலாம். மூளையில் கட்டி என்றாலும் தீராத வலிதான் ஸ்கேன் எடுக்கவைக்கிறது. அது பல்வலியோ, பார்வைக் குறைபாடோ, எலும்பு முறிவோ எதுவானாலும் வலி உணர்த்தியதால், அதைப் பரிசோதிக்கிறோம்; அதன் தீவிரம் அறிகிறோம். உடலில் எங்காவது வலியை உணர முடியவில்லையா அல்லது சுரணைக் குறைவாக இருக்கிறதா என்பதைத்தான் மருத்துவர்கள் சுரண்டிப்பார்த்து, தட்டிப்பார்த்து பரிசோதிக்கிறார்கள். வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், நாம் காரணம் புரியாமலேயே நோய்க்கும் மரணத்துக்கும் இரையாகியிருப்போம்.

வலிக்கிறதா? முதலில் உடலுக்கு நன்றி கூறுங்கள்... அதைப் படைத்த மகா சக்திக்கு. இறைவனோ அல்லது இயற்கையோ எதற்கு நன்றி கூறுகிறீர்கள் என்பது உங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், நிச்சயம் நன்றி சொல்லுங்கள். வலி வந்தால்தான் வழி பிறக்கும்.
கணவன்-மனைவி சண்டை என்றால், இருவரில் ஒருவராவது வலியில் அவதிப்படுவது இயல்பு. `பேசிப் பேசி தலைவலி வந்ததுதான் மிச்சம்’ என்பார்கள். பாஸுடன் மீட்டிங் முடிந்தவுடன், ‘செம டென்ஷன்’ என்று தலையைப் பிடித்தவாறு காபிக்கும் சிகரெட்டுக்கும் ஓட வைப்பதும் வலிதானே? நல்ல படம் என்று நம்பிப் போனால், அந்த ஆக்ஷன் ஹீரோ வில்லன்களை டார்ச்சர் செய்வதைவிட நம்மை டார்ச்சர் செய்தால், தலை மட்டுமா வலிக்கும்? அடித்துப் போட்டதுபோல உடல் எல்லாம் வலிக்கும். பெரிய வேலை வரும்போது, பதற்றத்தில் தோள்பட்டை எல்லாம் முறுக்குக்கம்பியால் கட்டப்பட்டதைப் போன்ற வலியில் இறுக்கமாக உணர்வீர்கள்.
அமெரிக்காவில் வாழ்ந்த ஓர் இத்தாலியக் குடியிருப்பில் மாரடைப்பே இல்லை என்று தெரியவந்தது. அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்தார்கள். உடல்கூறுகள், உணவுப்பழக்கங்கள், வேலைத்தன்மை என பலவற்றை ஆராய்ந்தார்கள். முடிவு என்ன? அதிகக் கொழுப்பான உணவுதான் உண்கிறார்கள், பெரிய உடற்பயிற்சி இல்லை என முடிவுகள் காட்டின. வியத்தகு காரணம் என்று எதுவுமே புலப்படவில்லை. பின் சமூக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் செய்த நீண்ட ஆய்வுகளில் உண்மை தெரியவந்தது. அவர்கள் கூட்டுக் குடும்பங்களாக வசிக்கின்றனர். தங்கள் மொழியிலேயே பேசுகின்றனர். வேலையின்போது பேச்சும் சிரிப்பும் நிச்சயம் இருக்கும். கூட்டு விருந்து உண்டு. மால்கம் கிளாட்வெல் அழகாகச் சொல்கிறார், `இது அவர்கள் கலாசாரத்தைக் கெட்டியாகப் பிடித்திருக்கும் வாழ்வியலால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.’ வலி வருவதற்கும், வளர்வதற்கும் விலகுவதற்கும், மனநிலை ஒரு மிகப் பெரிய காரணம். இதைக் கண்டுபிடிக்க இத்தாலியர்கள் வரை போவானேன்? நம் வீட்டு நிலவரத்தைப் பேசினாலே நிஜம் வெளிவருமே!
ஓர் இரவு நேரத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள், ஞாயிறு என்று வைத்துக்கொள்வோமே. இல்லத்தரசி கேட்கிறார், `என்ன சமைக்கிறதுன்னே தெரியலை. போரடிக்குது. சோர்வா இருக்கு. என்ன பண்ணலாம் ராத்திரி சாப்பிடுறதுக்கு?’

அந்த நேரம் பார்த்து அழைப்பு மணி அடிக்கும். திறந்தால், ஊரில் இருந்து அம்மையாரின் உறவுகள். இப்போது, இல்லத்தரசியிடமிருந்து ஓர் அபூர்வக் குதூகலமும் உற்சாகமும் பீறிட்டுக் கிளம்பும். நல விசாரிப்புகள் முடிந்து, சாப்பாட்டு விஷயம் சுமுகமாக முடியும். இருந்தவற்றைக்கொண்டு சுடச்சுட விருந்து உணவுத் தட்டுக்கு வரும். சிரிப்பும், குடும்ப வம்பும், அரட்டையுமாக நள்ளிரவு வரை பேச்சு நீளும்! `யாருக்கோ இங்கே உடம்பெல்லாம் வலின்னு சொன்னாங்களே’ எனக் கேட்கத் தோன்றும். ஆனால், சம்சார சாகரத்தின் ஆழ அகலங்கள் நமக்குத் தெரியாதா என்ன! சொந்தம் தரும் சுகமும் பாதுகாப்பும் மனநிறைவும் வலியைப் போக்கச்செய்யும் அல்லது மறக்கச் செய்யும்.
அவரவர் வயதை, மனநிலையை ஒத்த நட்புகள் தரும் பாதுகாப்பு உணர்வு இதுதான். மனக்குறை பகிர, பெருமைகள் பேச, கருத்துக் கேட்க, ஆலோசனை கேட்க... எல்லாவற்றுக்கும் நமக்கு மனிதர்கள் வேண்டும். உங்கள் விடலை மகள் வாட்ஸ்அப்பில் தோழிக்குத் தட்டுவதும், உங்கள் கணவர் அலுவலக நண்பரிடம் பாஸ் பற்றி போனில் புலம்புவதும், வயதான தந்தை கர்மசிரத்தையாக வாக்கிங் போய், தன் வயதொத்தவரிடம் பழைய கதை பேசுவதும் இதனால்தான்.
ஃபேஸ்புக்கில் ஓராயிரம் நண்பர்கள்கொண்டவரிடம் மனம்விட்டுப் பேச ஒருவர்கூட இல்லை என்றால், அடைக்கப்பட்ட அழுத்தங்களும், உளைச்சல்களும் வலிகளாக மாறுவதில் வியப்பே இல்லை. வருவோர் போவோரிடம் எல்லாம் திண்ணையில் உட்கார்ந்து பேசிய காலம் போய், வெறுமையாகத் தனிமையில் அமர்ந்திருக்கிறோம். முன்பு, நம் வீடுகளில் அறைகள் குறைவு; மனிதர்கள் அதிகம். இன்று அறைகள் அதிகம்; அவற்றில் மனிதர்கள் குறைவு. நாம் நாகரீகமான தனி மனிதர்களாக வாழத் தொடங்கியதில் ஏற்பட்ட கலாசாரத் தேக்கம் முதலில் மனதையும் பின் உடலையும் பாதிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கூட்டு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட நம் மரபணுக்கள், தனிமையை அவ்வளவு விரைவில் ஏற்றுக்கொள்ளுமா?
வலி நிவாரணத்துக்கு ஆயிரம் மருந்துகள் உள்ளன. ஆனால், அவற்றில் சிறந்தவை அன்பு, கவனம், அரவணைப்பு மற்றும் நம்பிக்கைமொழி. வலியை சுகமாக மாற்றும் வழிகள் இவைதான்!
- மாறுவோம்!