Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 2

அலர்ஜி வகைகள்ஹெல்த்

அலர்ஜியை அறிவோம் - 2

ம் தடுப்பாற்றல் மண்டலம் நிகழ்த்தும் விரும்பத்தகாத விளைவை ‘அலர்ஜி’ என்று சொன்னோம். ‘குறிப்பிட்ட ஒரு பொருளை நம் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று நமக்குத் தெரியப்படுத்தும் அறிகுறியாக இதை எடுத்துக்கொள்ளலாம். அலர்ஜியை ஆன்டிஜென் (Antigen) உருவாக்குகிறது எனப் பார்த்தோம். அது என்ன ஆன்டிஜென்?

உடலுக்குள் பல்வேறு வழிகளில் நுழைந்து அலர்ஜியை ஏற்படுத்தும் புறப்பொருளுக்கு ‘ஆன்டிஜென்’ என்று பெயர். இது, காற்றில் கலந்துவரும் தூசு, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை... ஆன்டிஜெனுக்கு சில உதாரணங்கள்.

நம் உடலுக்குள் முதல்முறையாக நுழையும் ஆன்டிஜெனை அதற்கு அடுத்து என்றைக்கும் நுழைய முடியாதபடி தடுப்பதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுமானால், அதற்கு ‘இம்யூனோஜென்’ என்று பெயர். உதாரணத்துக்கு, சின்னம்மை வைரஸ். இது, முதல்முறையாக நம் உடலுக்குள் நுழையும்போது நமக்கு இதற்கான தடுப்பு சக்தி நிரந்தரமாக ஏற்பட்டு விடுவதால், அடுத்த முறை சின்னம்மை நமக்கு வருவது இல்லை.

அலர்ஜியை அறிவோம் - 2

இந்த இடத்தில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லா ஒவ்வாப் பொருட்களும் நமக்கு ஆன்டிஜென்களாக இருக்கும். ஆனால், எல்லாமே இம்யூனோ ஜென்களாக இருப்பது இல்லை. உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு சோப்பை உபயோகிக்கிறீர்கள். அதில் உள்ள ஒரு வேதிப்பொருள் உங்களுக்கு ஆகவில்லை என்றால, அது அரிப்பை ஏற்படுத்தும். அந்த வேதிப்பொருள் உங்களுக்கு ஆன்டிஜெனாகத் தான் செயல்படுகிறது;  இம்யூனோஜென்னாக அல்ல. அதனால்தான் அந்த வேதிப்பொருளுக்கு உங்கள் உடலில் தடுப்பு சக்தி கிடைக்கவில்லை. அது உங்களை அடையும் போதெல்லாம் ஆன்டிஜெனாகச் செயல்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது.

ஹேப்டன்கள்

ஒரு புறப்பொருள் ஒவ்வாமையைத் தூண்டும் பொருளாகச் செயல்பட வேண்டுமானால், அதற்குக் குறிப்பிட்ட எடை இருக்க வேண்டும். அந்த எடைக்குக் குறைவாக உள்ள புறப்பொருளால் தானாக ஒவ்வாமையைத் தூண்டவும் முடியாது; எதிரணுக்களை உற்பத்திசெய்யவும் முடியாது. அதேவேளையில் அது ஒரு புரதத்துடன் இணைந்து உடலுக்குள் செல்லுமானால், அந்தப் புரதத்துக்கு எதிராக எதிரணுக்கள் உருவாகும். இந்த மாதிரியான புறப்பொருளை ஹேப்டன் (Hapten) என்கிறோம். டை நைட்ரோபீனால் என்பது  ஒரு வேதிப்பொருள்.  பல உலோகங்களில் இருக்கிறது. இது தனியாக உடலுக்குள் செல்லும்போது ஆன்டிஜென் ஆவது இல்லை. அதே நேரத்தில் இது உடலில் உள்ள ஒரு புரதத்துடன் கலந்துவிட்டால் சிலருக்கு ஆன்டிஜெனாக மாறி எதிரணுக்களை (Antibodies) உற்பத்திசெய்கிறது.

எதிரணுக்கள் என்றால் என்ன?


இதுவரை `எதிரணுக்கள், எதிரணுக்கள்’ எனப் பலமுறை சொல்லிவிட்டோம். அப்படி என்றால் என்ன? நம் தடுப்பாற்றல் மண்டலத்தில் ஆன்டிஜென் என்று அழைக்கப்படுகிற ஓர் ஒவ்வாத அல்லது அந்நியப் பொருளுக்கு எதிராக உருவாகின்ற குளுக்கோஸ் கலந்த புரத மூலக்கூறுதான் (Glycoprotein) எதிரணு.  ‘இம்யூனோ குளோபுலின்’ என்று இதை ஆங்கிலத்தில் அழைக்கிறோம். தான் உருவாகக் காரணமாக இருந்த ஆன்டிஜெனோடு மட்டுமே இணைகிற தன்மையை உடையது. இதன் மூலம் அந்த ஆன்டிஜெனை  (ஒவ்வானை) எதிர்த்துப் போராடி உடலைவிட்டு வெளியேற்றுகிற ஆற்றல் பெற்றது.

1 உடனடி அலர்ஜி(Immediate Hypersensitivity)

ஓர் ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த 15 நிமிடங்களில் அதற்கான ஒவ்வாமைக் குணங்கள் தொடங்கிவிடும். தடுப்பாற்றல் மண்டலத்தில் ஐஜிஇ (IgE) எதிரணு உருவாவதால் ஏற்படும் அலர்ஜி இது. பெரும்பாலும் இந்த குணங்கள் சாதாரண உடல் அரிப்பில் தொடங்கி உயிருக்கு ஆபத்து தருவது வரை மோசமான ஒவ்வாமையை உண்டாக்குவதாக இருக்கும். ஒவ்வாத பொருள் எந்த வழியில் நுழைகிறதோ அதைப் பொருத்து அறிகுறிகள் ஏற்படும். விஷக்கடி போன்றவற்றில் தோல் வழியாக ஒவ்வாத பொருள் நுழைகிறது. அப்போது தோலில் அரிப்பும் சிவப்பு நிறத் தடிப்புகளும் ஏற்படும். தூசு மூலம் மூக்கு வழியாக இது நுழைந்தால், அங்குள்ள ரத்தக்குழாய்கள் விரிந்து அடுக்குத் தும்மலும் மூக்கு ஒழுகலும் ஏற்படும். சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் அது நுழைந்துவிட்டால், மூச்சுக்குழல்கள் சுருங்கி சுவாசிக்க முடியாமல் ஆஸ்துமா ஏற்படும். உணவு மூலம் ஒவ்வான் நுழைவது வாய் வழி என்றால், உதடு வீங்குவது, வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படுவது போன்ற குணங்களைக் காண்பிக்கும். உடலுக்குள் நுழைவது ஒவ்வாத மருந்தென்றால், சமயங்களில் அது உயிரையே மாய்த்துவிடும்.

அலர்ஜியை அறிவோம் - 2

2 திசுக்கள் சார்ந்த அலர்ஜி (Tissue Bound Hypersensitivity)

இந்த வகை அலர்ஜியில், ஓர் ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் ஒவ்வாமைக் குணங்கள் தொடங்கிவிடும். தடுப்பாற்றல் மண்டலத்தில் IgM அல்லது IgG எதிரணு உருவாவதால், இந்த அலர்ஜி ஏற்படுகிறது. இது திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால், சில நிரந்தர நோய்கள் உண்டாகின்றன. உதாரணத்துக்கு, ரத்த அழிவு ரத்தசோகை,  நெப்ரான் அழற்சி எனும் சிறுநீரக நோய்.

3 தடுப்பாற்றல் சார்ந்த அலர்ஜி (Immune - Complex Hypersensitivity)

இந்த வகை அலர்ஜி ரத்தச் சுற்றோட்டத்தில் மட்டும் நிகழலாம். அல்லது தனிப்பட்ட உடல் உறுப்பைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த மூன்றிலிருந்து 10 மணி நேரத்துக்குள் அதற்கான ஒவ்வாமைக் குணங்கள் தொடங்கிவிடும். தடுப்பாற்றல் மண்டலத்தில் IgG எதிரணு உருவாவதால், இந்த வகை அலர்ஜி ஏற்படுகிறது. இதற்கு ஓர் உதாரணம், ருமட்டாய்டு மூட்டுவலி.

4 தாமதமான அலர்ஜி ( Delayed Hypersensitivity)

இதில் ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒவ்வாமைக் குணத்தைக் காட்டும். இதனால் உடலுக்கு அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படாது. தோலில் சிறிய வீக்கம், தோல் சிவப்பது போன்ற சாதாரண அறிகுறிகள்தான் காணப்படும். இதில், வழக்கமான எதிரணுக்கள் ஈடுபடுவது இல்லை. தைமஸ் நிண அணுக்கள் இதை ஏற்படுத்துகின்றன. காசநோய் உள்ளதா என்பதை அறிய மேன்டோ பரிசோதனை செய்யப்படுவதை இந்த அலர்ஜிக்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுவரை, அலர்ஜியின் வகைகளைப் பற்றி விளக்கமாகப் பேசியதற்குக் காரணம், அலர்ஜி எந்த வகையைச் சேர்ந்ததோ அதைப் பொறுத்துதான் அதற்கான சிகிச்சை வழங்கப்படும்.

- எதிர்வினை தொடரும்

படங்கள்: மா.பி.சித்தார்த்

அலர்ஜி டேட்டா

எப்படி ஒரு பூட்டில் சாவியை நுழைத்தால்தான் பூட்டு திறக்கிறதோ, அப்படி ஆன்டிஜெனும் எதிரணுவும் இணைந்துதான் எதிர்வினையை நிகழ்த்துகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டின் ஆராய்ச்சியாளர் பால் எர்லிச். இவர்தான் ‘ஆன்டிபாடி’ என்ற ஆங்கிலச் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். ஹங்கேரி மருத்துவர் லஸ்லோ டெட்டர் என்பவர் முதன்முதலில் 1903-ம் ஆண்டில் `ஆன்டிஜென்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1959-ம் ஆண்டு வரை ஆன்டிஜென் இம்யூனோஜென் இரண்டுமே ஒன்று என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கருத்தை உடைத்தனர். இரண்டும் வெவ்வேறு என்பதை நிரூபித்தனர்.

அலர்ஜி வகைகள்...

இதுவரை சொல்லப்பட்ட ஆன்டிஜென், இம்யூனோஜென், ஹேப்டன் ஆகியவை உடலுக்குள் நுழைந்து எதிரணுவை உருவாக்கும்போது, அந்த எதிரணு தன்னை உருவாக்கிய ஆன்டிஜெனோடு இணைந்து அதை எதிர்க்கிறது. அப்போது ஏற்படுகிற தகாத, அதீத விளைவுதான் அலர்ஜி. இதில் நான்கு வகைகள் உள்ளன. அவை, உடனடி அலர்ஜி, திசுக்கள் சார்ந்த அலர்ஜி, தடுப்பாற்றல் சார்ந்த அலர்ஜி, தாமதமான அலர்ஜி.

எதிரணு வகைகள்...

இதில் IgM, IgG, IgA, IgD, IgE என்று ஐந்து வகைகள் உள்ளன. முதல்முறையாக ஓர் ஆன்டிஜென் உடலுக்குள் நுழைகிறபோது உருவாகிற எதிரணுவுக்கு, IgM என்று பெயர். இரண்டாம் முறையாக ஓர் ஆன்டிஜென் உடலுக்குள் நுழைகிறபோது உருவாகிற எதிரணுவுக்கு, IgG என்று பெயர். உணவுப்பாதையிலும் மூச்சுப்பாதையிலும் உருவாகிற எதிரணுவுக்கு, IgA என்று பெயர். IgD எதிரணு என்பது, நிணநீர் அணுக்களில் ( Lymph nodes) உருவாகிறது. கடைசியாகச் சொல்லப்படுகிற IgE எதிரணுதான், ஒவ்வாமைக்குக் காரணமான ஒவ்வான்கள் உடலுக்குள் நுழையும்போது உருவாகிறது. பெரும்பாலும் இது தோல், உணவுப்பாதை, மூச்சுப்பாதை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.