
ஹெல்த்

‘முத்து’ படத்தில், ‘நான் எங்கே, எப்படி வருவேன்னு தெரியாது... ஆனா, வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வந்துடுவேன்’ என்று ரஜினிகாந்த் அடிக்கடி சொல்வார். இந்த டயலாக் அலர்ஜிக்கும் பொருந்தும். அலர்ஜி யாருக்கு வரும், எப்போது வரும், எப்படி வரும் என்பதெல்லாம் யாராலும் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், அது வர வேண்டியவர்களுக்கு வந்தே தீரும்.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எனப் பரம்பரையாக வரக்கூடிய நோய்களில் அலர்ஜியும் ஒன்று. குழந்தை கருவில் உருவாகும்போதே, அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் அலர்ஜி வருமா, வராதா என்பதைக் குழந்தையின் மரபணுக்கள் தீர்மானித்துவிடுகின்றன. எனவேதான், பெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால், குழந்தைக்கு 50 சதவிகிதம் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால், குழந்தைக்கு 75 சதவிகிதம் வாய்ப்பு ஏற்படுகிறது. அரிதாகச் சிலருக்குப் பரம்பரையில் பாதிப்பு இல்லாமலும் அலர்ஜி வரும் வாய்ப்பு உண்டு. 10-ல் ஒருவருக்கு இ்ந்த மாதிரி அலர்ஜி ஏற்படுகிறது.
பெற்றோருக்கு இருந்த / இருக்கிற அலர்ஜிதான் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. அப்படியே இருந்தாலும், ஒரே மாதிரியான அலர்ஜியாக இருப்பது இல்லை. ஒரு குழந்தைக்கு உணவு அலர்ஜி என்றால், இன்னொரு குழந்தைக்குத் தூசாக இருக்கலாம். இதற்கு எல்லாம் என்ன காரணம் என்பதை மருத்துவ உலகம் இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது.
பொதுவாக, 10 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவது அதிகம். இளம் வயதை நெருங்கும்போது இந்த வாய்ப்பு குறையத்தொடங்குகிறது; வயது கூடக்கூட இன்னும் குறைகிறது. `குழந்தைகளைக் கணக்கெடுத்தால், ஆண் குழந்தைகளுக்குத்தான் அலர்ஜி அதிகம்; அதேவேளையில் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களில் பெண்களுக்குத்தான் அலர்ஜி அதிகம்’ என்கிறது ஓர் ஆய்வு. `நாம் வளர வளர நம் உடலில் உள்ள தற்காப்பு மண்டலம் தன்னைத்தானே சரி செய்துகொள்வதால், இந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன’ எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.

தாய்ப்பாலும் அலர்ஜியும்
தாய்ப்பால் சரியாகக் கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு அலர்ஜி பாதிப்பு அதிகமாக இருப்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்? குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால், பலர் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவதை சீக்கிரத்திலேயே நிறுத்திவிடுகின்றனர். அந்தக் குழந்தைகளின் குடலில் தடுப்பாற்றல் மண்டல அமைப்புகள் சரியாக வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கும். அப்போது குழந்தையின் உடலுக்குள் நுழையும் புறப் பொருட்களை அதன் குடலால் சரியாகக் கையாளத் தெரியாது. இதனால் அலர்ஜி ஏற்பட்டுவிடும். பல குழந்தைகளுக்குப் பால் ஒவ்வாமை ஏற்படுவது இப்படித்தான்.
மரபு பாதி... மாசு மீதி!
`அலர்ஜி ஏற்படுவற்கு மரபுத்தன்மை பாதி காரணம் என்றால், மாசுத்தன்மை மீதி’ என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். மிக அசுத்தமான வீடுகளிலும், தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களிலும், வாகனங்கள் மிகுந்த நகரங்களிலும் வசிப்பவர்களுக்கு அலர்ஜி நோய்கள் ஏற்படுவது அதிகம் என்பதை உலக அளவில் நடந்த ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. முக்கியமாக, வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, சிகரெட் புகை, பட்டாசுப் புகை, ஜென ரேட்டர் புகை, பூக்களின் மகரந்தங்கள், பூஞ்சைகள், மரத்தூள் எனப் பலதரப்பட்ட கழிவு கள் அலர்ஜியைக் கொடுக்கும்.
வீட்டில் தூசி சேர்ந்திருந்தால், விறகு/ மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்தினால், சிகரெட் புகைப்பவர் இருந்தால், கொசுச் சுருள்களைப் பயன்படுத்தினால், செல்லப் பிராணிகளை வளர்த்தால், கரப்பான், எலி இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மாசடைந்த காற்றால் ஏற்படும் பல அலர்ஜி நோய்கள் எளிதில் தாக்கும்.
மனச்சோர்வும் அலர்ஜியும்
இன்று மக்கள் பல்வேறு காரணங்களால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடலில் ஒவ்வாமையைத் தூண்டும் டிஹெச்2 (Th 2) செல்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாலும், தடுப்பாற்றல் மண்டலத்துக்குத் துணையாக இருக்கும் ஹார்மோன்களை மனஅழுத்தம் தடுப்பதாலும் இவர்களுக்குப் பல வழிகளில் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
அலர்ஜி அதிகரிப்பது ஏன்?
இப்போது எல்லாம் குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை எல்லோருக்கும் அலர்ஜி நோய்கள் அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ‘சுத்தச்சூழல் கருதுகோள்’ (Hygiene Hypothesis) பற்றி புரிந்துகொள்ள வேண்டும். நம் ஆரோக்கியம் காக்க சுத்தம் அவசியம் என்பது உண்மைதான் என்றாலும், 100க்கு 100 சுத்தமாக இருந்தாலும் அதில் ஆபத்து இருக்கிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம். எப்படி?
40 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளிடத்திலும் பெரியவர்களிடத்திலும் பலதரப்பட்ட தொற்றுநோய்கள் பரவலாக இருந்தன. சமீபகாலமாக பல தடுப்பூசிகளைப் போட்டு பல நோய்கள் வராமல் தடுத்துவிட்டோம். இதனால் நம்முடைய தடுப்பாற்றல் மண்டலத்துக்கு வேலைப்பளு குறைந்துவிட்டது.
ஒரு பட்டதாரி வேலை இல்லாமல் இருந்தால் என்ன செய்வான்? விரக்தி காரணமாக குடி, சிகரெட் பழக்கம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது அல்லவா? அதுபோலத்தான் நம் தடுப்பாற்றல் மண்டலத்தின் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் டிஹெச்1 ஓய்வாக இருக்க, ஒவ்வாமையைத் தூண்டும் டிஹெச்2 தவறான முறையில் அதீதமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அது அலர்ஜியில் போய் முடியும்.
இதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். 20-30 வருடங்களுக்கு முன்பு வரை விடுமுறை தினங்களில், குழந்தைகள் மைதானங்களில் மண்ணில் விளையாடுவார்கள். மண் தூசு, காற்றில் கலந்து வரும் தூசு எனப் பலதரப்பட்ட தூசுக்கள் உடலுக்குள் செல்லும். ஆனாலும் அப்போது எல்லாம் இப்போது உள்ள அளவுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட அலர்ஜி நோய்கள் ஏற்படவில்லை. இப்போது குழந்தைகள் மண்ணில் விளையாடுவது குறைந்துவருகிறது. பெரும்பாலானோர் விடுமுறையில் வீட்டில் டி.வி-க்கு முன்னால்தான் முடங்கிக் கிடக்கின்றனர். உடல் அசுத்தமாக வழி இல்லை. சுத்தமாகத்தான் இருக்கின்றனர். ஆனால், `இவர்களுக்குத்தான் அலர்ஜி நோய்கள் அதிகம்’ என்கிறது புள்ளிவிவரம்.
குழந்தைகள் மண்ணில் விளையாடியபோது, சிறிதுசிறிதாகத் தூசுகளும், மாசுகளும் உடலில் நுழைந்தன. அப்போது எல்லாம் அவர்களின் தடுப்பாற்றல் மண்டலம் விழிப்புடன் செயல்பட்டு அவர்களுக்கு முறையான தடுப்பாற்றலைத் தந்தது. ஆனால், தூசுகளும் மாசுகளும் இன்றைய குழந்தைகளின் உடலுக்குள் நுழைவது குறைந்துவிட்ட காரணத்தால், இவர்களின் தடுப்பாற்றல் மண்டலம் திறன் குறைந்துவிட்டது. இதனால், தீங்கில்லாத பொருட்களைக்கூட தீங்கு தரும் பொருள்கள் எனத் தவறாகக் கணித்து அலர்ஜியை ஏற்படுத்திவிடுகிறது. இதுதான் இப்போது அலர்ஜி நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம்.
- எதிர்வினை தொடரும்
அலர்ஜி டேட்டா!
புது டெல்லி, இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டும் அல்ல. அலர்ஜி நோய்களுக்கும் அதுதான் தலைநகரம். காரணம், அங்குதான் காற்றில் கலந்து இருக்கும் மாசுக்களின் அளவு மிகமிக அதிகம்.
ஊட்டச்சத்து குறைந்து உள்ளவர்களுக்கும் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்களுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துள்ள காரணத்தால், அலர்ஜி நோய்களின் தாக்கம் அதிகம்.
உடல் பருமனானவர்களுக்கும், பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற ஹார்மோன்களின் குறைபாடு உள்ளவர்களுக்கும், பணி நிமித்தமாக பல இடங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் அலர்ஜி பாதிப்பு அதிகம்.
இந்தியாவில் 100 பேரில் குறைந்தது 40 பேருக்கு ஏதாவது அலர்ஜி ஒன்று இருக்கிறது. இவர்களில் 5 பேருக்கு ஏதாவது ஓர் உணவு ஒவ்வாமையும் 6 பேருக்கு அடுக்குத் தும்மல் நோயும் இருக்கின்றன. பருவகாலங்கள் மாறும்போது, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது.
பரம்பரை அலர்ஜியைத் தடுக்க முடியுமா?
ஓர் அலர்ஜி ஆய்வில், குடும்பப் பாரம்பரியத்தில் அலர்ஜி உள்ள 50 குழந்தைகளைத் தேர்வுசெய்து, முதல் 25 குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்த்தார்கள். வீட்டில் செல்லப்பிராணிகள் எதையும் வளர்க்கவில்லை. ஒட்டடை, தூசு என எதுவும் இல்லாமல் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குழந்தைகளைப் பரிசோதனை செய்ததில் ஆறு பேருக்கு மட்டுமே அலர்ஜி நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் தெரிந்தன. இந்த ஆராய்ச்சியின் முடிவின்படி குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் நம் சுற்றுச்சூழலைச் சரியானமுறையில் பாதுகாப்பதன் மூலமும் பரம்பரை அலர்ஜி உள்ளவர்களுக்கும் அந்த வாய்ப்பைக் குறைத்துவிடலாம் என்ற உண்மை தெரியவந்தது.