
குடும்பம்

வலிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா வியாதிகளுக்கும் உடலைவிட மனம்தான் பிரதான காரணம் அல்லது சிக்கல் மனதில் தொடங்கி உடலில் முடிகிறது என்று சொல்லலாம். சிந்தனையால், ரசாயன மாற்றத்தால் மட்டும் வலிகளும் உபாதைகளும் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதற்றம்கூட விபத்து ஏற்படக் காரணமாகலாம்; சில ஆபத்துகளை நோக்கிச் செல்லவைக்கலாம்; வெளியிலிருந்து வரும் கிருமியைத் தடுக்கும் சக்தியை இழக்கலாம். மன அளவிலான வியாதித் தடுப்பை `சைக்கோ இம்யூனிட்டி’ எனச் சொல்கின்றனர். மனைவியை இழந்தவர்கள் பலர் மிக விரைவில் நோய்வாய்ப்பட்டு இறப்பதைப் பார்க்கிறோம். அதே நேரம் மிகவும் நோய்வாய்ப்பட்ட தாய், தன் பிள்ளைகளுக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடுவதையும் பார்க்கிறோம். உயிரைக் காக்க நினைப்பதும் துறக்க நினைப்பதும், நம் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல; வாழ்க்கையையே பாதிக்கும். `கில்லி’யிலும் `துப்பாக்கி’ படத்திலும், இளைய தளபதி க்ளைமாக்ஸில் கையை, காலை உதறி உயிர் பெற்று எதிரியைத் தாக்குவதும் இந்த சைக்கோ இம்யூனிட்டியால்தானோ!

`எல்லா டெஸ்ட்டும் செய்தாகிவிட்டது. எல்லாம் நல்லா இருக்குன்னுதான் ரிசல்ட் வருது. ஆனா, வலி கொஞ்சம்கூட குறையலை’ என்று யாராவது சொன்னால், அந்த வலிக்கு ஆதாரம் மனப்பிரச்னை எனப் புரிந்துகொள்ளுங்கள். பலர் டாக்டர் மேல் டாக்டர்களாகப் போய்ப் பார்ப்பார்கள். அவர்களாகவே, `ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா டாக்டர்?’ என்றும் கேட்பார்கள். வலி சரியாகவில்லை என்றால், வேறு டாக்டரைப் பார்க்கப் போவார்கள். இதை `டாக்டர் ஷாப்பிங்’ என்று சொல்வோம். எந்த டாக்டரிடமும் திருப்திப்பட மாட்டார்கள். `அவர் சரியாகப் பார்க்கலை’ என்று குற்றம் சொல்வார்கள். தங்கள் வலி யாராலும் சரிசெய்ய முடியாதது என்று பெருமைப்படும் அளவுக்கு வலிப்பற்று கொண்டிருப்பார்கள். மருத்துவர்களும் அவரவர் இலாகாவான நரம்பு மண்டலம், கண், பல் எனப் பார்த்து ஓய்ந்துபோய் `ஆக்சுவலி... யூ ஆர் ஆல்ரைட்!’ என்பார்கள். நம் ‘வலி’யவர் அதற்குள் அடுத்த டாக்டரின் அட்ரஸ் விசாரித்துக்கொண்டிருப்பார்!
இன்னும் பலர் பல வலி நிவாரண மாத்திரை, களிம்பு, சொட்டு மருந்து, வாசனைத்திரவியம் எனப் புதுவிதப் போதைகளுக்கு அடிமையாகி
விடுகின்றனர். `ரெண்டு மாத்திரை போட்டுட்டு ஒரு மணி நேரம் படுத்தாத்தான் சரியாகும்’ என எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த வலி நிவாரண மாத்திரைகள் மருத்துவர் சிபாரிசில் ஒரு குறுகிய காலத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டிவை என்ற உண்மையை மறைத்து, ஒரு மாபெரும் மருந்துச் சந்தை இயங்கி வருகிறது. இதனால்தான் நாம் விரும்பும் கிரிக்கெட் வீரர் வலி நிவாரண மருந்துக்கு `பிராண்டு அம்பாசிடர்’ ஆகி நம்மையும் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.
மனம், வலியை வரவழைப்பதிலும் போக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. `அந்த குருஜி ஆசிரமத்துக்கு போய் ஒரு வார யோகப் பயிற்சி கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாயிடும்’ என்று எம்.எல்.எம் ரேஞ்சில் மார்க்கெட்டிங் பண்ணும் மாமி சொல்வதில் பொய் ஒன்றும் இருக்காது. ஒரு வாரப் பயிற்சியில் நிச்சயம் பெரும் மாற்றம் வரும். ஆனால் யோகக்கலை மட்டும் அதற்குக் காரணம் இல்லை.
ஒரு வாரம் வேலைக்கும் வீட்டுப் பொறுப்புகளுக்கும் விடுப்பு. எங்கும் அமைதி, சுத்தம்; அனைவரும் பெரும்பாலும் மௌனம்; பார்த்துக்கொண்டாலும் பரவசத்துடன் மந்திர வார்த்தைகள்தான் பிரயோகம்; ஒவ்வொரு வேளையும் சத்தான உணவு; தன்னைப் பற்றி நினைக்க நிம்மதியான இடம்; பிரத்யேக நேரம்; வலிகள் வலுவிழந்து சுகம் மேலிடும். ஆனால், எத்தனை நாட்களுக்கு? திரும்பி வந்தால், அதே வாழ்க்கை; அதே ஓட்டம்; பாஸ் கொடுமை; வாழ்க்கை இணையின் இம்சை; பிள்ளைகளின் நச்சரிப்புகள்; தொலைக்காட்சி இரைச்சல்கள் தொடரும் எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். கற்ற யோகாவை செய்ய விருப்பம்தான், ஆனாலும் நேரம் இல்லை. வலிகள் மீண்டும் இன்னும் வலிமையாகத் தாக்கத் தொடங்கும்.

இது ஆசிரமப் பயிற்சிகள் மீது உள்ள குறை அல்ல; நம் எதிர்பார்ப்புகள் செய்யும் பிழைகள். அதிரடி டயட்டில் வயிற்றைக் குறைக்க நினைப்பதுபோல வாழ்நாள் வலிக்கு ஒரு வாரப் பயிற்சியை சிகிச்சையாக நினைப்பது... எதையும் தொடர்ந்து செய்ய முடிந்தால் மட்டுமே மாற்றம் நிலைக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் உள்ள வாழ்வியல் அம்சங்கள்தான் வலிக்குப் பிரதான காரணம். வலியின் செய்தி என்ன? `என்னைக் கவனி’ என்பதுதானே? கேட்பாரற்றுக்கிடப்பதுபோல நினைக்கையில்தான் வலிகள் பெருகும். `பெண்களில் வேலைக்குச் செல்பவர்களைக் காட்டிலும், வேலைக்குச் செல்லாதவர்களுக்கே வலிகள் அதிகம்’ என உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோலத்தான் பகலைவிட, இரவில் வலிகள் தீவிரமாகத் தோன்றும்!
சொற்களால் பேச முடியாத சந்தர்ப்பங்களில் நாம் வலிகளால் பேசிக்கொள்கிறோம். அலெக்சிதைமியா (Alexithymia) என்ற ஒரு நோயில் வலியால் அவதிப்படும் மனிதர்களால் தங்கள் வாழ்க்கையின் எந்தப் பிரச்னையைப் பற்றியும் வெளியே பேச சிரமப்படுவார்கள். ‘எனக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என்று சொல்வார்கள். மனசு சரியில்லை என்றால், `தலைவலி’. வேலை செய்ய மனம் இல்லை என்றால், `உடல் வலி’. இப்படித்தான் சொல்ல ஆரம்பிப்போம். வலிகள் மூலம் தொடர்புகொள்வோம். முதலில் பிரச்னைகளுக்குப் பிந்தி வரும் வலி, நாள் செல்லச் செல்ல பிரச்னைகளுக்கு முந்தி வரும்.
அன்பும் கவனமும் சலுகைகளும் போகும் அபாயத்தால், வலியை ஆழ்மனதில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பலர். `நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைத்துவிடாதே. எனக்கு தீராத வலி உள்ளது’ என்பது உறவுகளுக்குச் சொல்லும் ஒரு முக்கிய செய்தி.
நன்றாக இருந்தால் முகத்தைக்கூட சரியாகப் பார்க்காத கணவன், மனைவி வலியில் துடிப்பதைக் கண்டால் பூரண கவனத்துடனும் கரிசனத்துடனும் உரையாடுவான். கரிசனத்தையும் அன்பையும் நேரத்தையும் அள்ளி வழங்குவான். வலிக்குத் தரும் மதிப்பை, வலியில்லாத நேரத்தில் அந்த மனிதருக்கு அளியுங்கள். `அன்பும் கவனமும் பெற இந்த வலிகள் அவசியம் இல்லை’ எனப் புரியவையுங்கள். சொல்லாத பிரச்னைகளையும் வாய்விட்டுப் பேசக் கேளுங்கள். `எதையும் பேசித் தீர்க்கலாம’் என்பதை நம்புங்கள்; நம்பவையுங்கள். மனம் சுகப்படும்போது உடலும் சுகப்படும்.
மாறுவது மனம். மனம் மாறும். உடல் மாறும். வலி தீரும். நம்புங்கள்... வலி தீருவதற்கு மனமாற்றம்தான் மாமருந்து!
- மாறுவோம்!