மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8

ஹெல்த்

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8

சாலையில் செல்கிறோம்... சிக்னலை மதிக்காமல் ஒருவர் வேகமாகக் கடந்து செல்கிறார். அதைப் பார்த்தால் நமக்குக் கோபம் வரும் அல்லவா? அலுவலகத்தில் உயர் அதிகாரி பாராட்டினால், உள்ளுக்குள் சந்தோஷம் கரைபுரண்டு ஓடுகிறது அல்லவா? இதுபோல கோபம், சோகம், மகிழ்ச்சி, துக்கம், வெறுப்பு, பயம் என ஒவ்வொரு நேரமும் நம் மனநிலை ஒவ்வொன்றாக இருக்கிறது. இவை எல்லாம் நம்முடைய மனதின் பல்வேறு வெளிப்பாடுகள். இவற்றை `உணர்ச்சிகள்’ எனச் சொல்கிறோம்.

கோபம், சோகம், மகிழ்ச்சி, பயம் என நம்முடைய ஒவ்வோர் உணர்ச்சிக்கும் மூளையின் ஒவ்வொரு பகுதி காரணமாக இருந்தாலும், அனைத்தையும் கட்டுப்படுத்துவது `லிம்பிக் சிஸ்டம்’ மற்றும் `அட்டானமிக் நெர்வஸ் சிஸ்டம்’ என்ற பகுதிகள்தான். இதில், முக்கியமானது லிம்பிக் சிஸ்டம். பல அமைப்புகள் ஒன்று சேர்ந்த பகுதி இது. இதை, `உணர்ச்சிப்பூர்வமான மூளை’ என்றும் சொல்லலாம். பெருமூளையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் லிம்பிக் சிஸ்டம் உணர்ச்சிகள், நினைவாற்றல் மற்றும் ஸ்டிமுலேஷன் என மூன்று செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இங்குதான், தாலமஸ், ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பிகளும் இருக்கின்றன.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8

இந்த லிம்பிக் சிஸ்டத்தின் முக்கியப் பகுதிகளைப் பற்றி இனி பார்ப்போம். இதில், முக்கியமானது தாலமஸ். நம்முடைய புலன்களில் இருந்து தகவலைப் பெறுகிறோம். அதற்குப் பொறுப்பு இந்த தாலமஸ்தான். வீட்டில் குழம்பு தாளிக்கிறார்கள். நல்ல வாசனை வருகிறது. அதை நாம் நுகர்கிறோம். ஒரு பொருளைப் பார்க்கிறோம் என்றால், அதற்கு இந்த தாலமஸ்தான் காரணம். அடுத்தது, ஹைபோதாலமஸ். இது தாலமஸுக்கு சற்றுக் கீழே அமைந்திருக்கிறது. இது பல ரசாயன சமிக்ஞைகளை வெளியிட்டு, உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெறத் தூண்டுகிறது. இந்த ரசாயன சமிக்ஞைகளுக்குப் பெயர்தான் ஹார்மோன்கள். ஹைப்போதாலமஸ் இரண்டு வழிகளில் உடலை வழிநடத்துகிறது. முதலாவது ஹார்மோன். இரண்டாவது, அட்டானமிக் நெர்வ்ஸ் சிஸ்டம். இதுதான் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசம், செரிமானம், வியர்வை போன்றவற்றை நிகழ்த்துகிறது.

நம்முடைய அறையில் ஏ.சி போடுகிறோம். கொஞ்ச நேரத்தில் குளிர் அதிகமாகிறது. உடனே, ஏ.சி-யை ஆஃப் செய்வோம். இது எப்படி நிகழ்கிறது எனக் கேட்டால், `சில்னஸ் அதிகமாகிடுச்சு’ என்று சொல்வோம். ஏ.சி காற்றில் நம்முடைய உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதை உணர்வது இந்த ஹைபோதாலமஸ்தான். இது தவிர, தூக்க சுழற்சி, உடலின் தட்பவெப்பநிலை, உணவு உட்கொள்வது, நீரின் அளவு என முக்கியமான விஷயங்களை ஹைபோதாலமஸ் கட்டுப்படுத்துகிறது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8

பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, ஹார்மோன் சுரக்கச் செய்வதன் மூலம் இது உடலை வழிநடத்துகிறது. மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்துதான் வளர்ச்சிக்கான ஹார்மோன், தைராய்டைத் தூண்டும் டி.எஸ்.ஹெச், இனப்பெருக்க மண்டலத்தை வளர்ச்சியடையச் செய்யவும், இயக்கத்துக்கும் காரணமான எஃப்.எஸ்.ஹெச் ஹார்மோன் என பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதை ஹைபோதாலமஸ் தூண்டுவதன் மூலம் உடலை வழிநடத்துகிறது.

- அலசுவோம்!

50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8

‘50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்’ என்று ஒரு ஹாலிவுட் படம் வந்தது. இதில், கதாநாயகிக்கு, பிறந்த நாள் அன்று ஓர் விபத்து நடக்கும். அதில் தலையில் காயம் ஏற்பட்டு நினைவாற்றல் பாதிப்பு ஏற்படும். பொதுவாக, தலையில் காயம்பட்டால் கடந்தகாலம் மறந்து போய்விடும் என்று பார்த்திருப்போம். இவருக்கோ நிகழ்காலத்தை மூளையில் பதிவுசெய்ய முடியாத நிலை ஏற்படும். விபத்துக்கு முன்பு நடந்த விஷயங்கள் மட்டும்தான் அவருக்கு நினைவில் இருக்கும். விபத்துக்குப் பிறகு அவர் பார்க்கும் விஷயங்கள், நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் அவரது மூளையால் பதிவு செய்ய முடியாமல் போய்விடுவதால், தினமும் கண் விழிக்கும்போது, அன்றைக்கு அவரது பிறந்தநாள் என்று நினைப்பார். பிறந்த நாளன்று வழக்கமாக என்ன செய்வாரோ, அதையே திரும்பத் திரும்பச் செய்வார். கதாநாயகன் தினமும் கதாநாயகியைச் சந்தித்து தன்னுடைய காதலைச் சொல்வார். ஆனாலும், கதாநாயகியால் அடுத்த நாள் எதையும் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. `ஹிப்போகாம்பஸ்’ பகுதி நம்முடைய நினைவாற்றலுக்குக் காரணமான பகுதி. குறுகியகால நினைவாற்றல் அனைத்தும் இந்தப் பகுதியில்தான் நடக்கிறது. இந்தப் பகுதியில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு எந்த ஒரு புதிய விஷயத்தையும் மூளையில் பதிவேற்றம் செய்ய முடியாமல் போய்விடும்.