
குடும்பம்

“எவ்வளவு வலி தெரியுமா?’ எனக் கேட்போம். ஆனால், வலியை அளக்க முடியாது என்பதுதான் உண்மை. ரத்த அழுத்தம்போல, உடல் வெப்பம்போல துல்லியமாகச் சொல்ல முடியாத விஷயம் வலி.
`உயிர் போற வலி’ என வலி தாங்காமல் கதறினால், அதிக வலி என்று நம்புகிறோம். அதே வலிகொண்ட இன்னொருவர் கண்ணை மூடித் தாங்கியவாறு பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், அதை மிதமான வலியாகக் கருதுகிறோம். இங்கு வலியின் நிஜத்தன்மையைவிட, வலிதாங்கும் மனவலிமை, அவரின் உணச்சிவசப்படும் தன்மை, மொழித்திறன், உடன் இருப்போருடன் உள்ள உறவுமுறை எனப் பல விஷயங்கள் உள்ளன. இதனால்தான், வலியை அளவிடுவதில் பல சிக்கல்கள்!

யாரும் பார்க்காமல் இருக்கும்போது கீழே விழும் குழந்தை வலியைத் தாங்கி அழுகையை அடக்கிச் செல்லும். தாயோ அல்லது தாங்குபவரோ யாராவது இருந்தால், பெரிதாக அழுது கூச்சல் போடும். சிலர் வலிக்குது என்று ஒரு வார்த்தையில் சொல்வதை, `மண்டைக்குள்ள ஒரு சுத்தியைவெச்சுத் தட்டற மாதிரி அப்படி ஒரு வலி..!’ என்று தத்ரூபமாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். படம் பார்க்கும்போது தெரியாத வலி, இடைவேளையில் அதிகமாகத் தெரியும். விரும்பாதவர் வருகையில், சாதாரண வலி பூதாகரமாக வடிவெடுக்கும். வலியை அளப்பது கடினம். ஆனால், இந்த வலிதான் நமக்கு அடிப்படை உளவியல் தத்துவத்தை உணர்த்துகிறது.
ஒருவரின் வலியை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. ஒருவர் துக்கத்தை மற்றொருவர் துக்கத்துடன் ஒப்பிட்டு `இது அதைவிட அதிகம்’ என்று கணிக்க முடியாது. வாழ்வின் துயர்களை நம்மால் அளவிடவோ, ஒப்பிடவோ, வரையறுக்கவோ முடியாது. எல்லாம் தனிநபர் அனுபவங்கள். எதையும் உண்மை, பொய் என்றோ குறைவு, அதிகம் என்றோ மதிப்பிட முடியாது.
இதனால்தான் நம்மால் மற்றவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிவது இல்லை. 50 ஆயிரம் ரூபாய் வங்கிப் பணத்தை கையாடல்செய்த வங்கி ஊழியர், அவமானம் தாங்காமல் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்துகொள்கிறார். பல லட்சம் கோடி ரூபாய் ஊழலில் சிக்கிய அரசியல்வாதி நிதானம் இழக்காமல் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். செய்த குற்றத்துக்கும் குற்ற உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா என்ன... அல்லது குற்ற உணர்வும் அவமானமும் இந்த அளவுக்கு இருந்தால்தான் தற்கொலை செய்ய வேண்டும் என்ற அளவீடு ஏதாவது உண்டா என்ன? மனிதத் துயரை மீட்டர்வைத்து அளக்க முடியாது. அதனால், பிறர் செய்யும் பல விஷயங்கள் நமக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகின்றன!
`பாலுக்குச் சர்க்கரை இல்லை’ என்பதும் `கூழுக்கு உப்பு இல்லை’ என்பதும் சமமான பிரச்னையா என்று கேட்கலாம். அது யாருக்கு நேர்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம்.
வீடற்று சாலையில் உறங்கும் எண்ணற்ற மனிதர்களுக்கு வாகனங்கள் காலருகே சென்றாலும் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. ஆனால், தூக்க மாத்திரை இல்லாவிட்டால் தூங்க முடியாத பல பெரிய மனிதர்கள் ராட்சத சொகுசுப் படுக்கையில் புரண்டு புரண்டு தவிக்கிறார்கள். யார் பிரச்னை பெரிது என்று எவ்வளவு பட்டிமன்றம்வைத்தாலும் முடிவுகட்ட முடியாது.
நாம் நம் பிரச்னை மீதும் பிறர் பிரச்னை மீதும் வைத்திருக்கும் எண்ணங்கள் யாவும் நம் அபிப்பிராயங்கள்தான். இவற்றில் உண்மை அறிய முயற்சிப்பதைவிட ‘ இவை எல்லாம் நம் மனதின் இப்போதைய செயல்பாடுகள்’ என்று புரிந்தாலே தெளிவு பிறக்கும்.

ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் மெள்ள மெள்ள நிஜங்கள் ஆகும் அபாயங்கள் உண்டு.
`என் கஷ்டம் யாருக்கும் வந்திருக்காது!’ `உன்னை மாதிரி என்னைச் சித்ரவதைசெய்ய யாரும் இல்லை’, `என் நிலை என் எதிரிக்கும் வரக் கூடாது.’ இவற்றின் உண்மை நிலையை அறிய முற்படுவதைவிட இவை அனைத்தும் உணர்ச்சிமிகுதியால் ஏற்படும் சிந்தனை மீறல்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனதின் மாய வேலை இது.
ராணுவப் பயிற்சி பற்றி உரையாற்றிய மேஜர் சியாச்சினில் நம் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வீடியோ படத்தைக் காண்பித்தார். ஓர் ஆண்டு தீவிரப் பயிற்சிக்குப் பின், அவர்கள் அங்கே அனுப்பப்படுகின்றனர். மைனஸ் 25 டிகிரி குளிரில் சிறப்பு உடைகள் அணிந்து, பனிப்பாறைகள் மேல் நடந்து, இலக்குகளை அடைய வேண்டும். துப்பாக்கிகள் முதல் அடுப்பு வரை அனைத்தையும் சுமந்து செல்ல வேண்டும். பனிக்கட்டிகளை அடுப்பில் சூடேற்றினால்தான் குடிக்கவே தண்ணீர் கிடைக்கும். கையுறை கழன்று விழுந்துவிட்டால் கை விரைத்து, ரத்தம் உறையும். கையை வெட்டி எறிந்தால்தான் உயிர் பிழைக்க முடியும். மற்ற மனிதத் தொடர்பு என்றால், அது எதிரியாகத்தான் இருக்கும். இதற்குள் மூளை வெடித்து, சிகிச்சை இல்லாமல் இறக்கும் வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் வரை பத்திரப்படுத்த வேண்டும். குடும்பத்தில் யாராவது இறந்திருந்தாலும் அந்தச் செய்தி உடனே தெரிவிக்கப்பட மாட்டாது.
வாழ்வா, சாவா, நோவா என்று தெரியாத வாழ்க்கையில் எத்தனை வலிகள்... எத்தனைத் துயர்கள்... இந்தத் தியாகங்களுக்காக அவர்களுக்கு என்று என்ன தனி மரியாதையை நாம் கொடுக்கிறோம்? இறந்தால்தான் மாலையும் மதிப்பும் மரியாதையும். ஆனால், இத்தனை இடர் நிறைந்த வாழ்விலும் சற்றும் நம்பிக்கை குறையாமல் போராடுகிறார்கள் என்றால் அந்த மனவலிமை எப்படி வந்தது?
வயிற்று வலி, தேர்வில் தோல்வி, வீட்டில் சண்டை என்று தற்கொலை வரை செல்வோருக்கு ஏன் இந்த மன வலிமை இல்லை... சின்ன விஷயத்துக்குச் சிதைந்துபோவோர்க்கும், மலைபோன்ற துயர் இருந்தும், நிலை குலையாமல் இருப்போருக்கும் என்ன வேறுபாடு? எல்லாம் மனம்தான்.
வாழ்க்கையில் வருவதற்கு ஒரு வாசல்; போவதற்கு பல வாசல்கள். வருவது நம் வசம் இல்லை. வாழ்வதும் வீழ்வதும் நம் வசமே. நம் மனம் மாறினால், வாழ்வு நம் வசமாகும்!
- மாறுவோம்!