
ஹெல்த்

நினைவாற்றலும் உணர்வுகளும் நெருங்கிய தொடர்புகொண்டவை. இதை, நம்முடைய அனுபவத்தில் இருந்தே நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஒரு விருந்துக்குச் செல்கிறோம். அங்கே பலரையும் புதிதாகச் சந்திக்கிறோம். புதிதாக அறிமுகமான ஒருவர் நம்மைச் சிரிக்கவைத்து, அன்றைய தினத்தை மிகவும் சந்தோஷமான நாளாக மாற்றுகிறார் அல்லது ஒருவர் தேவை இல்லாமல் பிரச்னைசெய்து, அன்றைய தினத்தை மிக மோசமானதாக மாற்றுகிறார். இவர்களையும் அந்த நாளையும் நம்மால் மறக்க முடியாது அல்லவா?

இந்த நிகழ்வுகள் நம்முடைய நினைவைவிட்டு நீங்காமல் இருப்பது ஏன்? இதற்குக் காரணம், நம் மூளையில் உள்ள உணர்வுபூர்வமான மூளையான லிம்பிக் சிஸ்டம்தான். இங்கேதான் உணர்வுகள் தோன்றுகின்றன, தகவல்கள் மூளையில் பதியப்படுகின்றன.
தகவல் பதிய உதவும் ஹிப்போகாம்பஸ் பற்றி கடந்த இதழில் சொல்லத் தொடங்கியிருந்தேன். ‘50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்’ படம் பற்றியும் சொல்லியிருந்தேன். தலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக, மூளையின் ஹிப்போகாம்பஸ் பாதிக்கப்பட்டதால், கதாநாயகிக்கு எந்த ஒரு புதிய தகவலும் மூளையில் பதியாமல் அவதியுறுவார். புதிய தகவல் பதியவும், பதிந்திருக்கும் தகவலை வெளிக்கொண்டுவரவும் ஹிப்போகாம்பஸ் மிகவும் அவசியம். இது ‘நினைவாற்றலின் நுழைவாயில்’ .

டெம்போரல் லோப் மையப் பகுதியில் ஹிப்போகாம்பஸ் அமைந்திருக்கிறது. லத்தீன் மொழியில் ‘ஹிப்போகாம்பஸ்’ என்றால் கடற் குதிரை என்று பொருள். இதன் தோற்றம் கடல் குதிரைபோல இருந்ததால், இதற்கு இந்தப் பெயர் வந்தது. மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் பல நூற்றாண்டுகளாக நடந்துவருகின்றன. ஆனால், ஹிப்போகாம்பஸ் பற்றி சில நூற்றாண்டுகளாகத்தான் ஆய்வுகள் நடக்கின்றன. தொடக்கத்தில், ஹிப்போகாம்பஸை வாசனை நுகர்தலுடன் தொடர்பு உள்ள பகுதியாகக் கருதிவந்தனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ., பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்தக் கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நினைவாற்றலுக்கு துணைசெய்யும் பகுதி என்பதால், மறைமுகமாக வாசனை நுகர்வுக்கும் ஹிப்போகாம்பஸுக்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
அன்றாடத் தகவல்களை நினைவாற்றல் பகுதியில் பதியவைக்கும் திறன் இழந்தாலும், சில அன்றாடப் பழக்கவழக்கங்கள், ஓவியம் வரைதல், இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல் போன்ற திறன் சார்ந்த சில தகவல்கள் ஹிப்போகாம்பஸ் துணையின்றியும் மூளையில் பதிவாகலாம் என கண்டறிந்துள்ளனர். மேலும், ஹிப்போகாம்பஸ் பாதிப்படையும்போது எந்த மாதிரியான தகவல்கள் பதியக்கூடும் என்பது பற்றி இன்றும் ஆய்வுகள் தொடர்கின்றன. இதன் மூலம், ஹிப்போகாம்பஸ் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நினைவாற்றல் மட்டும் இன்றி நம்முடைய இயக்கத்துக்கும் ஹிப்போகாம்பஸ் உதவுகிறது. நேவிகேஷன் என்று சொல்லப்படும், நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் என்று இடம் அல்லது வழி காட்டும் செயல்பாட்டுக்கும் ஹிப்போகாம்பஸ் துணைசெய்கிறது. ஹிப்போகாம்பஸ் பகுதியில் பிளேஸ் ஃபீல்ட் (Place field) செல்கள் உள்ளன. எலிகளுக்கு இந்த பிளேஸ் ஃபீல்ட் செல்கள் பற்றி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு இதைக் கண்டறிந்தனர். இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால், நம்முடைய வீடு எங்கே இருக்கிறது என்றுகூட நம்மால் நினைவில்வைக்க முடியாமல் போய்விடும்.
ஹிப்போகாம்பஸ், ஆக்சிஜன் பயன்பாடு அதிகம்கொண்ட பகுதி. உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், ஹிப்போகாம்பஸ் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். மாரடைப்பு, நுரையீரல் செயல்இழப்பு, தூக்கம் தொடர்பான பிரச்னையால் ஆக்சிஜன் குறையும் ஸ்லீப் ஆப்னியா (Sleep apnea), கார்பன் மோனாக்சைடு விஷவாயுப் பாதிப்பு, நீரில் மூழ்குதல் போன்றவற்றின்போது ஹிப்போகாம்பஸ் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
- அலசுவோம்!
குட்டித்தூக்கமும் நினைவாற்றலும்!

2010ம் ஆண்டு ‘மேத்யு வாக்கர்’ எனும் ஆராய்ச்சி யாளர், குட்டித்தூக்கத்துக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், குறுகியகால நினைவாற்றல் ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதிவாகவும், அதுவே நீண்ட கால நினை வாற்றலாக, கார்ட்டெக்ஸ் பகுதியில் பதிவாகவும் குட்டித் தூக்கம் உதவுவதாகக் கண்டறிந்தார். எனவே, “புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள தூக்கமும் அவசியமாகிறது” என்கிறார் அவர்.
இதேபோல, ‘கிரிக் எரிக்சன்’ தலைமையிலான ஆய்வுக் குழு, 55 முதல் 80 வயதானவர்களை வாரத்துக்கு மூன்று நாட்கள் தலா 40 நிமிடங்கள் என, ஓர் ஆண்டுக்கு நடைப்பயிற்சிசெய்யவைத்து ஆய்வுசெய்தனர். ஓர் ஆண்டு கழிந்தபோது, இவர்களது ஹிப்போகாம்பஸ் பகுதி பெரிதாகி இருந்ததைக் கண்டறிந்தனர். இதன் மூலம், வயதாகும்போது ஏற்படக்கூடிய ஹிப்போகாம்பஸ் பாதிப்பு குறைந்து, மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.