Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 5

மனமே நீ மாறிவிடு - 5
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 5

குடும்பம்

மனமே நீ மாறிவிடு - 5

நாம் வாழும் உலகம் ஒன்றுதான். ஆனால், நாம் காணும் உலகங்கள் வேறு வேறு. ஒரு குடும்பம், தி.நகரின் அங்காடித் தெருவில் நடந்து செல்கிறது என  வைத்துக்கொள்வோம். குடும்பத்தின் 70 வயதைக் கடந்த மூத்தவர் யோசிப்பார், ‘எப்படி மாறிப்போச்சு எல்லாம்... ஒரு காலத்தில் மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் நிற்பது இங்க இருந்து பார்த்தால் தெரியும். அந்த தி.நகரா இது?’

40-களில் உள்ள அவர் மகன் இப்படி யோசிப்பார், ‘நகைக்கடைகளில் என்ன கூட்டம்? தங்கம் விலை திரும்பவும் ஏறுது. மார்க்கெட் டவுண் ஆகுதுன்னா, தங்கம் ஏறும். கச்சா எண்ணெய் விலையும் குறையுது. அமெரிக்காவிலும் ரெசஷன் வரப்போறதா சொல்றாங்க... என்ன ஆகப்போகுதோ?’

‘பழைய ஃபேஷன் எல்லாம் திரும்ப வருது. வாணிஸ்ரீ போடற மாதிரி நீள ரவிக்கை, ஹம்ப் வச்ச ஹேர் ஸ்டைல், பாவாடை தாவணி... என்ன ஒண்ணு, புடவை எல்லாம் இப்ப பண்டிகைக்குக் கட்டற மாதிரி ஆகிடுச்சு. சொன்னாலும் சல்வார்தான் செளகரியம்!’ அவர் மனைவியின் எண்ணம் இப்படி ஓடும்.

வேண்டாவெறுப்பாக வந்திருக்கும் மகளின் மனக்குரல் இது, ‘ஐயோ! இப்படிக் கூட்டத்துல நடக்கவிட்டுட்டாங்களே. எல்லாத்தையும் ஆன்லைன்லயே வாங்கலாம். சொன்னா, கேட்க மாட்டாங்க.’

தி.நகர் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பார்க்கிறார்கள். நாம் கண்ணில்படுவதைப் பார்ப்பது இல்லை. பார்க்க நினைப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான், மற்றவர்கள் பார்ப்பதை நம்மால் பார்க்க முடிவது இல்லை. இதைத்தான் ‘சப்ஜெக்ட்டிவ் ரியாலிட்டி’ என்று சொல்கிறோம். ‘அவரவர் எதார்த்தம்’ என்று இதைச் சொல்லலாம். `ஹிந்து’ பேப்பர் படிக்கும் பல மேல்தட்டு நகரவாசிகளுக்கு சாய்நாத்தைத் தெரியாது. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலைகள் பற்றி தொடர்ந்து விரிவான கட்டுரைகளை நடுப்பக்கத்தில் எழுதியவரை ஏன் தெரியவில்லை? காரணம், அவர்கள் பார்க்க மறுக்கும் நிஜங்களைச் சொல்பவராயிற்றே!

மனமே நீ மாறிவிடு - 5

அப்படி என்றால் நாம் உலகத்தையே வடிகட்டித்தான் பார்க்கிறோமா? ஆமாம், அதுதான் நிஜம்! சண்டை போடுகையில், நாம் அனைவரும் இதைத்தானே செய்கிறோம்? சில சம்பவங்களை ஞாபகமாகக் குறிப்பிடுவோம். பல சம்பவங்களை அனிச்சையாக மறந்திருப்போம். எதிராளி எடுத்துரைக்கும்போதும் அதை  மழுப்புவோம். இந்த ஞாபகங்கள் நம் சார்பு நிலைகளைப் பொறுத்தவை.

ஆழ்ந்து யோசித்தால், நம் எண்ணங்களும் உணர்வுகளும்தான் நம் பார்வைகளைத் தீர்மானிக்கின்றன. நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நாம் பார்ப்பவை எல்லாம் குதூகலமாகத் தென்படும். நாம் துவண்டு இருக்கும்போது, நாம் பார்ப்பதில் எல்லாம் இருள் மண்டிக்கிடக்கும்.

ஒரு சின்ன ஜோக்கைப் படித்துவிட்டு, விழுந்து விழுந்து சிரிக்கும் பிள்ளையைப் பார்த்துக் கேட்கிறார் அவன் அப்பா, “எதுக்கு இப்படிப் பைத்தியம் மாதிரி சிரிக்கிறே?” அவருக்குத் தெரியாத நகைச்சுவை அவனுக்குத் தெரியக் காரணம், நகைச்சுவை என்பதே வெளியே இல்லை; அவரவர் மனங்களில் உள்ளது. இதை கண்ணதாசன் ‘அவன்தான் மனிதன்’ படப் பாடல் மூலமாக, அழகாகச் சொல்கிறார்.

‘உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா - இதை உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!’

எல்லாமே நம் மனதில் தோன்றுபவை என்றால், சுற்றுப்புறம் நம்மை பாதிக்கவே செய்யாதா? செய்யும். ஆனால், எவ்வளவு பாதிக்கும், எப்படிப் பாதிக்கும் என்பதை உள்மனம்தான் முடிவு செய்யும். மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்து, பிறர் உதவி இன்றி வாழ்க்கையில் போராடி வென்ற இருவர் இருவிதமான கற்பிதங்களைக்கொள்ளலாம்.

“பிறர் உதவி இன்றி நான் கஷ்டப்பட்டது போல யாரும் படக் கூடாது. அதனால், எல்லோருக்கும் உதவ வேண்டும்!”

“எதுக்கு உதவி? நான் எப்படி சொந்த முயற்சியில் மேலே வந்தேனோ அதுபோல போராடி வரட்டும்!”

ஒரே சூழ்நிலை, வேறு வேறான கற்பிதங்களை உருவாக்கும். இதனால்தான் ஒரே கல்வி எல்லோரிடமும் ஒரேவிதமான கற்பிதங்களை ஏற்படுத்த முடிவது இல்லை.

‘புகைபிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு’ எனும் செய்தி தெரிந்தும் புகைப்பவர்கள் புகைப்பது எதனால்? புகைப்பவரிடம் கேளுங்கள். அழகாகக் காரணம் சொல்வார்கள்.

“எங்க அத்தை 45 வயசுல புற்றுநோயால் இறந்துட்டாங்க. அவங்க என்ன சிகரெட்டா பிடிச்சாங்க? எங்க தாத்தா 90 வயசு வரைக்கும் இருந்தார். அவருக்கு இல்லாத பழக்கம் இல்லை. நோய் வரும்னா எப்படி வேண்டும் என்றாலும் வரும். டாக்டருங்க சொல்றாங்களே... அவங்களே ஸ்மோக் பண்றதில்லையா?”

இப்படி எவ்வளவு கேட்டிருக்கிறோம். எண்ணமும் செயலும் தீவிரமாகிவிட்டால், அதற்கு ஏதுவான காரணங்களை மனம் தயாரித்துக்கொள்ளும். காரணங்களை வெளியில் தேடாமல் உள்ளே தேடுவோம். மனதின் சூட்சும செயல்பாடுகள் அறிவோம்.

நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்பவை நம் எண்ணங்கள். ஆரோக்கியம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி, நிறைவு எல்லாம் மனம் செய்யும் விளைவுகள். மனம் மாறினால், நம் வாழ்வு மாறிடும்!

- மாறுவோம்