Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 6

அலர்ஜியை அறிவோம் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 6

தும்மல் தரும் துன்பம்ஹெல்த்

அலர்ஜியை அறிவோம் - 6

ழை, பனி, குளிர், கோடை என பருவநிலை மாறும்போதுஎல்லாம் சில நோய்கள் நமக்குத் தொல்லை கொடுப்பது உண்டு. அவற்றுள் தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், ஆஸ்துமா இளைப்பு போன்றவை ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலானவை.  இவற்றுள் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர எந்த ஓர் அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதை வெளியேற்றும் நடவடிக்கைதான், தும்மல்.

அலர்ஜியை அறிவோம் - 6

தும்மல் ஏற்படுவது எப்படி?

நாசித் துவாரத்தில் சிறிய முடி இழைகள் உள்ளன. உள் இழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால், அவற்றை வடிகட்டி அனுப்புவது இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்துவிட்டால், இந்தச் சவ்வுப்படலம் தூண்டப்படுகிறது. உடனே, அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப்படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், தொண்டை, வாய், நெஞ்சு, நுரையீரல் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து, மூக்குப்பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் வெளியே தள்ளுகின்றன. இதுதான் தும்மல். இப்படித்  தும்மும்போது, அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.

ஒவ்வாமைத் தும்மல்

சாதாரணத் தும்மல் சில நிமிடங்களில் நின்றுவிடும். சிலர், தொடர்ச்சியாக நூறு முறைகூட தும்முவார்கள். ஒரு கைத்துண்டு நனைகிற அளவுக்கு மூக்கிலிருந்து நீர் கொட்டும்; மூக்கு அரிக்கும்; மூக்கின் வழி சளி கொட்டும். இதற்கு ‘ஒவ்வாமைத் தும்மல்’ (Allergic Rhinitis) என்று பெயர். உலகில் 40 கோடி பேருக்கு இந்த இன்னல் இருக்கிறது.  இந்தியாவில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100-ல் 30 பேருக்கும், 100 குழந்தைகளில் 40 பேருக்கும் இது பெருந்தொல்லை தருகிறது.

அலர்ஜியை அறிவோம் - 6

என்ன காரணம்?

ஏதேனும் ஓர் அலர்ஜி பொருள் நாசி வழியாக நுழையுமானால், மூக்கின் உட்புற சவ்வில் ’உடனடி அலர்ஜி’ (Immediate Hypersensitivity) உண்டாகிறது. இதனால், அந்தப் பகுதி விரிந்து, சிவந்து, வீங்குகிறது. இதன் தூண்டுதலால் அடுக்குத் தும்மல் ஏற்படுகிறது. மூக்கு ஒழுக ஆரம்பிக்கிறது. குறிப்பாக, புல், பூண்டு, மரம், செடிகளின் பூக்களிலிருந்து வரும் மகரந்தங்கள், பார்த்தீனியச் செடியின் முள் இழைகள், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டால் தும்மல் தொடர்ந்து வரும்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

இது பெரும்பாலும் 20 வயதுக்குள் வந்துவிடுகிறது. பரம்பரைக்கும் இந்த நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அப்பா, அம்மாவுக்கு இருந்தால் வாரிசுகளுக்கும் இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிலும் அம்மாவுக்கு இருந்தால், குழந்தைகளுக்கும் வரக்கூடும்.

ஜலதோஷமா? அலர்ஜியா?

சாதாரண ஜலதோஷம் ஒரு வாரத்துக்கு நீடிக்கும். ஆனால், அடுக்குத் தும்மல் அப்படி இல்லை. காலையில் எழுந்ததும் தும்மல் ஆரம்பிக்கும். தொடர்ச்சியாகத் தும்முவார்கள். மூக்கு அரிக்கும் என்பதால், அடிக்கடி மூக்கை உறிஞ்சுவார்கள்; கசக்குவார்கள். இதைத் தொடர்ந்து மூக்கு அடைக்கும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். கண்கள் சிவந்து கண்ணீர் வரும். இவை எல்லாமே காலை 10 மணி வரைக்கும்தான். வெயில் ஏறியதும் இந்தத் தொல்லைகள் மறைந்துவிடும். பிறகு வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். மறுநாள் காலையில் மறுபடியும் தும்மல் வரும். இது ஒரு தொடர்கதை.

பூ பூக்கும் காலம் பனி, குளிர் எனக் குறிப்பிட்ட பருவம் முடிந்ததும் நிறையப் பேருக்கு இந்தத் தொல்லைகள் மறைந்துவிடும். சிலருக்கு அவர்களுக்கு உண்டான அலர்ஜிப் பொருள் மறைந்ததும் தும்மல் அகன்றுவிடும். வெகு சிலருக்கு மட்டுமே இது வருடம் முழுவதும் தொடரும்.

பாதிப்புகள் என்னென்ன?

இந்த நோயை அலட்சியப்படுத்தினால் அல்லது அரைகுறையாக சிகிச்சை எடுத்தால் சைனஸ், ஆஸ்துமா, காதுகளில் பிரச்னை, மூக்கில் நீர்ச்சதை (Nasal polyps) வளர்வது, அடிக்கடி நெஞ்சில் சளிப் பிடிப்பது, கண் சிவப்பது, வாய் வழியாக மூச்சுவிடுவது, தூக்கம் கெடுவது, உடல் சோர்வு, மனச்சோர்வு எனப் பல தொல்லைகளைத் துணைக்கு அழைக்கும்.

அலர்ஜியை அறிவோம் - 6

என்ன பரிசோதனை?

அடுக்குத் தும்மல் உள்ளவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் இயோசினோபில் அணுக்களின் அளவு அதிகமாக இருக்கும்.  ‘எலிசா ஐஜிஇ’ (ELISA IgE) பரிசோதனையில் ஐஜிஇ அளவு அதிகமாக இருக்கும். ஒவ்வாமைத் தோல் ஊசிப் பரிசோதனையில் (Skin Prick Test)  எந்தப் பொருளுக்கு அலர்ஜி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மூக்கு எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம், தும்மலுக்கு வேறு காரணம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். முகத்தை சி.டி ஸ்கேன் எடுப்பதன் மூலம், மற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.   

தும்மலை நிறுத்தும் வழிகள்

ஒரு தேக்கரண்டி சமையல் உப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை 200 மி.லி இளம் சூடான தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். சுத்தமான துணியை அந்தத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொண்டு, திரிபோல சுற்றிக்கொண்டு, நாசித்துளையில் விட்டு மூக்கைச் சுத்தப்படுத்துங்கள். தும்மல் நிற்கும். அடுத்த வழி இது: வெந்நீரில் ‘டிங்சர் பென்சாயின்’ மருந்தை 15 சொட்டுகள் விட்டு ஆவி பிடித்தாலும் தும்மல் கட்டுப்படும்.

‘ஸ்டீராய்டு’ கலந்த ஸ்பிரே மருந்தை மூக்கில் உறிஞ்சிக்கொண்டால், தும்மல் உடனே நின்றுவிடும். ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகள் உதவும்.  இவற்றில் உறக்கம் தரும் மாத்திரைகள், உறக்கம் குறைந்த மாத்திரைகள் எனப் பலவிதம் உண்டு. மருத்துவர் பரிந்துரைப்படி சாப்பிட வேண்டும். மான்டிலூகாஸ்ட் மாத்திரைகளைச் சாப்பிடலாம். இது தும்மலின் தாக்கத்தைக் குறைக்கும். மூக்கடைப்புக்குச் சொட்டு மருந்தை உபயோகிக்கலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு மேல் இதைப் பயன்படுத்தக் கூடாது. ஸ்டீராய்டு மாத்திரையைச் சாப்பிட்டால், உடனே தும்மல் குறையும். ஆனால், இதையும் சில நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டால், ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும்.

அலர்ஜியை அறிவோம் - 6

தடுப்பது எப்படி?

ஒருவருக்கு எந்தப் பொருள் அலர்ஜி ஆகிறது எனத் தெரிந்துகொண்டு அதைத் தவிர்ப்பதுதான் இந்த நோயைத் தடுப்பதற்கான முக்கிய வழி. உதாரணத்துக்கு, பூக்களின் மகரந்தம் அலர்ஜி என்றால், இளங்காலை நேரத்திலும் அந்திப்பொழுதிலும் வீட்டைவிட்டு வெளியில் செல்வதை, நடைப்பயிற்சி செய்வதை, பூங்காக்களுக்குச் செல்வதை, தோட்ட வேலை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பனிக் காலத்திலும், பூ பூக்கும் காலத்திலும் அறை ஜன்னல்களை காலை பத்து மணி வரைக்கும் பூட்டிவைக்க வேண்டும். தூசுதான் காரணம் என்றால், வீட்டையும் பணி இடத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். முக்கியமாக, தலையணைகளும் படுக்கை விரிப்பும் சுத்தமாக இருக்க வேண்டும். 

எந்தப் பொருளுக்கு அலர்ஜி ஆகிறதோ, அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், அடுக்குத் தும்மல் குறையும். இதற்கு ‘இமுனோதெரப்பி’ (Immunotherapy) என்று பெயர். இதனுடன் ஒவ்வாமைத் தடுப்பு மாத்திரைகளையும் பயன்படுத்தலாம். பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவையும் இந்த நோயைத் தடுக்க உதவுகின்றன.

- எதிர்வினை தொடரும்

ஹே ஃபீவர்

அடுக்குத் தும்மல் நோய்க்கு ’ஹே ஃபீவர்’(Hay fever) என்று ஒரு பட்டப்பெயரும் உண்டு. கராணம், வைக்கோல் தூசு அலர்ஜியாகி தும்மல், சளி, காய்ச்சல் வருவதாக ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், காலப்போக்கில் வைக்கோல் தூசு மட்டும் அல்ல, வேறு பல காரணங்களாலும் இந்த நோய் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டதும், இந்தப் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டனர்.

அலர்ஜி டேட்டா!

ஒரு சாதாரணத் தும்மலின் வேகம் மணிக்கு 20 மீட்டர்கள்.

ஒரு முறை தும்மும்போது, மூக்கில் இருந்து ஒரு லட்சம் கிருமிகள் காற்றில் கலக்கின்றன. ஐந்து அடி தூரத்துக்குக் கிருமிகள் பரவும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘டோனா கிரிஃபித்’ 978 நாட்களுக்குத் தொடர்ந்து தும்மி சாதனை செய்திருக்கிறார்.

உறக்கத்தில் தும்மல் வராது. தும்மலை உருவாக்கும் நரம்புகளும் உறக்கத்தில் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

தும்மும்போது இதயத்துடிப்பு நின்றுவிடும் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. இது தவறு. தும்மலின்போது இதயத் துடிப்பின் வேகம் மட்டும் சிறிது குறையலாம்.