
ஓவியம்: ஸ்யாம்

கர்ப்பம் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி இரு இதழ்களாகச் சொல்லிவந்தேன். இது தொடர்பாக ஏராளமான சந்தேகங்களை வாசகர்கள் எழுப்பவே, இந்த இதழ் முழுக்க வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க உள்ளேன். பொதுவாக, பலரும் எழுப்பிய சந்தேகம், கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்வது பற்றித்தான் இருந்தது.
“எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன புதிதில் குழந்தை வேண்டாம் என மாத்திரை எடுத்துக்கொண்டேன். ஆனாலும், எனக்கு முதல் குழந்தை நின்றது. இது எப்படிச் சாத்தியமானது?”
பி.சிவரஞ்சனி, மதுரை.
“மாத்திரை எடுத்துக்கொள்பவர் செய்யும் தவறுகள்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. நீங்கள் மாத்திரையைத் தவறாமல் எடுத்துக்கொண்டீர்களா என்ற தகவல் தெரியவில்லை. மாத்திரையைத் தவறவிடுவதுதான் மாத்திரை தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்கிறது. மாத்திரை காலியாகிவிடுவது, மாத்திரை எடுப்பதால் ஏற்படும் தீவிர வாந்தி போன்ற காரணங்களால் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில பெண்கள் தவிர்க்கின்றனர். அல்லது தற்காலிகமாக நிறுத்திவிடுகின்றனர். இதன் காரணமாக கரு உருவாகிவிடுகிறது. இந்த மாதிரியான மாத்திரை எடுக்கத் தவறிய நேரத்தில் இருந்து, 12 மணி நேரத்துக்குள் மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அடுத்த ஏழு நாட்களுக்கு ஆணுறை போன்ற வேறு வகையான கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும்படி ஃபேமிலி பிளானிங் அசோசியேஷன் (எஃப்.பி.ஏ) அறிவுறுத்துகிறது. மாத்திரையைக் காட்டிலும் இன்னும் சில நம்பகமான கருத்தடை முறைகள் உள்ளன. எனவே, மாத்திரையைத் தவறவிடும் பெண்கள் இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.”
“கருத்தடுப்பு மாத்திரை எடுக்க மறந்துவிடுகிறேன். இந்த மாதிரியான நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?”
கோ.காஞ்சனா, செங்கல்பட்டு.
“மாத்திரை எடுக்க மறந்துவிட்டீர்கள், 5 - 10 மணி நேரம் கழித்து, அன்றைய தினமே நினைவுக்கு வருகிறது என்றால், உடனே மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் எடுக்க மறந்து, அடுத்த நாள் நினைவுக்கு வந்தால், அன்றைக்கு இரண்டு மாத்திரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, முந்தைய நாளுக்கான ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வதுடன், வழக்கமாக அன்றைய தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கவேண்டிய மாத்திரை ஒன்று என இரண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அவர்கள் ‘பாதுகாப்பு இல்லாத நிலை’ என்று அர்த்தம். வேறு வகையான கருத்தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன் பிறகு, அந்தப் பெண் அந்த மாதம் முடியும் வரை மாத்திரை எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை. அடுத்த மாதம் மாதவிலக்கு வந்த நாளில் இருந்து மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும்.”

“மாத்திரை எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுவது இல்லை என்று எழுதியிருந்தீர்கள். எந்த மாதிரியான சூழலில், வாய்வழி கருத்தடை மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது டாக்டர்?”
எஸ்.பரணி, சென்னை.
“பெண்ணுக்கு கல்லீரல் நோய்கள், இயல்புக்கு மாறான கல்லீரல் செயல்பாடு, இயல்புக்கு மாறான சிறுநீர்க் குழாய் அல்லது வெஜைனல் ரத்தப்போக்கு, சுவாசப் பிரச்னை, ரத்தம் உறைதல் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு வாய்வழி கருத்தரிப்பு மாத்திரை பரிந்துரைக்கப்படுவது இல்லை. தவிர, சர்க்கரை நோய், பாலூட்டும் பெண்கள் (குறைந்தது முதல் ஆறு மாதங்களுக்கு), வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவது இல்லை. எனவே, வாய்வழிக் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், உங்கள் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைப்படி நடப்பது அவசியம்.”
“எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. ஒரு வருடத்துக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, லூப் (ஐ.யு.டி) பொருத்தினேன். ஆனாலும், நான் கர்ப்பமாகிவிட்டேன். இப்போது, மூன்று மாதம். இது எப்படி நடந்தது?”
பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.
“ஐ.யு.டி வெற்றிவிகிதம் 97 சதவிகிதத்துக்கும் மேல். இதன் பொருள், மூன்று சதவிகிதம் பேருக்குத் தோல்வியிலும் முடியலாம். எதிர்பாராதவிதமாக அந்த மூன்று சதவிகிதம் பேரில் நீங்களும் ஒருவராகிவிட்டீர்கள். மாதவிலக்கு ரத்தப்போக்கின்போது, உங்களுக்குப் பொருத்தியிருந்த லூப் விலகியிருக்கலாம். 100 பேருக்கு லூப் பொருத்துவதில், 5 முதல் 20 பேருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுவும், குழந்தை பிறக்காத, இளம் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் இப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். பொருத்தி ஓர் ஆண்டுக்குப் பிறகு இப்படி நகர்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைந்துவிடுகிறது.”
“எல்லா பெண்களுக்கும் லூப் பயன்படுமா... லூப் சரியாகப் பொருந்தியுள்ளதா, விலகியிருக்கிறதா எனக் கண்டறிய ஏதேனும் வழிமுறை உள்ளதா?”
வி.ஆனந்தி, சென்னை.
“அதிகப்படியான ரத்தப்போக்கு உள்ள பெண்களுக்கு, அதிகப்படியான சிறுநீர்க்குழாய் குழிவு உள்ளவர்களுக்கு, சிறுநீர்ப்பாதை, இடுப்புப் பகுதி நோய்த்தொற்று காரணமாக ரத்தப்போக்கு ஏற்படுபவர்களுக்கு, இதனால் பலன் கிடைக்காது. அனைத்து லூப்பிலும், நைலான் நூல் ஒன்று வால்போல இருக்கும். இது சிறுநீர்க்குழாய் வாய்ப் பகுதியில் இருக்கும். விரலை உள்ளே செலுத்தி இதைத் தொட்டுப்பார்க்கலாம். விரலை உள்ளே நுழைக்கும்போது, நூல் தட்டுப்பட்டால் அது சரியான இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். தட்டுப்படவில்லை எனில், அது அந்த இடத்தில் இருந்து விலகியிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம். அப்படி விலகியிருந்தால், உடனடியாக மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.”
“எனக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. நான் ஆணுறை அணிந்து உடலுறவுகொள்ளும்போது எல்லாம் விரைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது?”
கார்த்திகேயன், ஓசூர்.
“நீண்ட விரைப்புத்தன்மைக்கு, தொடர், நீண்ட தூண்டுதல் அவசியம். ஃபோர்ப்ளே எனப்படும் நீண்ட தூண்டலுக்குப் பிறகு, ஆணுறை அணியும்போது தூண்டுதல் தடைபடுகிறது. இது தற்காலிகமானதுதான். இது தவிர, ஆணுறை அணியும் தருணத்தில் ஆணின் கவனம் சிதறலாம். இதனால், விறைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க, ஃபோர்ப்ளே தொடங்குவதற்கு முன்பே, ஆணுறை அணிந்துகொள்வது நல்லது. இதை மனைவியைச் செய்யச் சொல்லலாம். இதுவே, ஆணுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும். எந்தத் தடையுமின்றி மகிழ்ச்சியான முறையில் தாம்பத்திய உறவுகொள்ளத் துணைசெய்யும். இல்லை எனில், ஆணுறை அணிந்த பிறகு விறைப்புத்தன்மைக்காக மீண்டும் மிகத் தீவிரமாக ஃபோர்ப்ளே செய்யவேண்டிய நிலைக்குச் செல்லவேண்டியிருக்கும். அதேபோல நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம், ஆணுறை அணிந்தால் உடலுறவு மகிழ்ச்சி குறைந்துவிடுமா என்பதுதான். அப்படி ஏதும் இல்லை. நவீன ஆணுறைகள் மிகவும் மெல்லியவை, வழுவழுப்புத்தன்மை கொண்டவை, அலைபோன்ற அமைப்புடன், புள்ளிகள் கொண்டதாக இருக்கின்றன. இது தம்பதிகளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கிறது.”
“பெண்கள் காண்டம் அணிவது பற்றி சொல்லியிருந்தீர்கள். அது பற்றிய தகவல் வேண்டும். ஆண்களுக்கான காண்டத்தைப் பெண்கள் பயன்படுத்தலாமா?”
காயத்ரி, ஹைதராபாத்.
“ஆணுறையைப் பெண்கள் பயன்படுத்த முடியாது. தற்போது, பெண்களுக்கான பிரத்தியேக காண்டம் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இந்த காண்டமும் ஆணுறைப்போன்ற வடிவமைப்பு, வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது. இது பாலியுரித்தனால் (Polyurethane) ஆனது. 15 செ.மீ நீளம், 5 செ.மீ சுற்றுவட்டம் கொண்டது. இதன் இருபுறத்திலும் வளையம்போன்ற அமைப்பு இருக்கிறது. இதில், சிறிய வளையமானது பெண்ணுறுப்பினுள் வைக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டது. இது செர்விஸ் பகுதியில் ஃபிட் ஆகும். மற்றொரு வளையம் வெளியே இருக்கும். இது இந்த காண்டம் விலகிவிடாமல் இருக்க உதவுகிறது. இந்த முறையில் 2 முதல் 30 சதவிகிதம் தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. இதன் செயல்திறன் என்பது தம்பதிகளின் நடத்தை செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது. சீரற்ற மாதவிலக்கு உள்ள பெண்கள் மத்தியிலேயே இதன் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களில் வெறும் எட்டு சதவிகிதம் பேருக்குத்தான் சீரான மாதவிலக்கு வருகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டியது முக்கியம். அதேபோல, பாலூட்டும் காலத்தில் மாதசுழற்சியைக் கணக்கிடுவதும் கடினமானது.”
எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரை, ஆண்களுக்கான கருத்தடை பற்றி நிறையக் கேள்விகள் வந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கு அடுத்த இதழில் பதில் சொல்கிறேன்.
- ரகசியம் பகிர்வோம்