Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 6

இனி எல்லாம் சுகமே - 6
பிரீமியம் ஸ்டோரி
News
இனி எல்லாம் சுகமே - 6

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 6

ணவு விழுங்குதல் பிரச்னை (Dysphagia) குறித்த அனுபவங்களை வாசகர்கள் பலர் எழுதி அனுப்பியிருந்தார்கள். இதைத்தான் நானும் எதிர்பார்த்திருந்தேன். தொண்டையில் இருந்து உணவுக் குழாய்க்கு உணவு பயணிப்பதில் பல்வேறு வகையான சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த இடத்தில் என்ன பிரச்னை எனத் தெளிவாகப் பாதிக்கப்பட்டவர்களால் சொல்ல முடியாத விஷயங்களில் ஒன்று டிஸ்பேஜியா.

“முன்பு மாதிரி சாப்பாடு இறங்குவது இல்லை டாக்டர், நல்லா மென்னாத்தான் விழுங்க முடியுது”  “உலர் உணவுகளை விழுங்கமுடியலை, இட்லியைச் சாப்பிடணும்னாக்கூட சட்னி, சாம்பார்ல நனைச்சு சாப்பிட்டா மட்டும்தான் இறங்குது”, “கழுத்தை ஒரு பக்கமா நீட்டி, அசைச்சு சாப்பிட்டாத்தான் சாப்பாடு உள்ள போகுது”, “உணவுக்குழாயில் சாப்பாடு நிக்கிற மாதிரியான உணர்வு இருக்கு”, “எதை சாப்பிட்டாலும் எதுக்களிச்சு வருது”, “சாப்பாடு மூக்கு வழியாக வெளிய வர்றதைப் பார்த்தா பயமா இருக்கு டாக்டர்”, “சாப்பாட்டை விழுங்கினா தொண்டைல இருந்து நெஞ்சு வரைக்கும் வலி பின்னி எடுக்குது”, “உணவுக்குழாயில எரிச்சலான உணர்வு ஏற்படுது”, “சாப்பிடும்போது இருமல் வருது”, “அடிக்கடி சளிப் பிடிச்சுக்குது” பொதுவாக, இப்படி 10 வகைகளில்தான் மக்கள் இந்தப் பிரச்னையை வெளிப்படுத்துகின்றனர்.

நம்மில் பலருக்கும் எப்போதாவது ஒருமுறை இந்த மாதிரியான சிரமம் ஏதேனும் நிகழ்ந்திருக்கும். அது இயல்பானது. ஆனால், தொடர்ந்து நாள் கணக்கில் இது போன்ற சிரமம் இருப்பவர்கள், குறைவாகச் சாப்பிடுவார்கள். இதன் விளைவாக, திடீரென எடை குறையும். இது பிரச்னையின் அடுத்த கட்டம். இதற்கு முன்பே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், உணவு விழுங்குவதில் ஏற்படும் பிரச்னைகளை உடனே கவனிக்காவிட்டால், மெள்ள மெள்ள தீவிரமான  டிஸ்பேஜியா ஏற்படும். ஆரம்பத்தில் திட உணவுகளை மட்டும் விழுங்குவதில் சிரமம் ஏற்படும்,  பின்னர் கஞ்சி, கூழ் போன்ற அரைத் திண்ம நிலையில் இருக்கும் உணவுகளை விழுங்குவதிலும் சிரமம் ஏற்படும். பின்னர்,  தண்ணீரை விழுங்குவதிலும்கூட பிரச்னை ஏற்படலாம்.

இனி எல்லாம் சுகமே - 6

ஒரு கட்டத்தில் எச்சிலைக்கூட விழுங்க முடியாத நிலை ஏற்படும். ஒரு நாளுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் எச்சில் சுரக்கிறது. எச்சிலைக்கூட விழுங்க முடியாத நிலையில், வாயில் இருந்து எச்சில் வெளியே வழிய ஆரம்பிக்கும். எப்போதும் வாய்க்கு அருகே ஒரு துண்டை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய மோசமான நிலை ஏற்படலாம். தீவிர டிஸ்பேஜியா பிரச்னை அரிதான விஷயம் என நினைக்க வேண்டாம், பலருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. டிஸ்போஜியா என்றதும் உணவு விழுங்கும் பாதையில் புற்றுநோயோ என அஞ்ச வேண்டாம். பெரும்பாலும், இது சாதாரணக் காரணங்களால்தான் ஏற்படுகிறது. இது சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியதுதான்.  சோகமான மன அழுத்த நிலையில் இருப்பவர்களுக்கு, நெஞ்சில் பந்து அடைத்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். இது உண்மையான டிஸ்பேஜியா அல்ல. இவர்களுக்குச் சாதாரணமாய் இருக்கும் இந்த அடைப்பு உணர்வு, சாப்பாடு, நீர் விழுங்கும்போது தடுக்காது. அதிகரிக்காது, மாறாகக் குறையும். உண்மையான டிஸ்பேஜியா தொடர்ந்து நாட்கணக்கில் இருந்தால், மருத்துவர்கள் அதற்கு உடல்ரீதியான காரணத்தை நிச்சயம் தேட வேண்டும். மனரீதியான பிரச்னை எனத் தவறாக எண்ணிவிட்டால், சிகிச்சை தாமதமாகி நோய் முற்றிவிடும். 

இனி எல்லாம் சுகமே - 6

யாருக்கு டிஸ்பேஜியா வருகிறது?

நீண்டநாட்கள் தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்கள், கோபத்தில் ஆசிட் குடித்தவர்கள், நாள்பட்ட எதுக்களித்தல் பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காய், அருகம்புல், நாட்டு மருந்து போன்றவற்றைச் சாப்பிடும்போது, உணவுக்குழாயில் அலர்ஜி வந்து அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.உணவுக்குழாயின்  தொடக்கத்தில் ஒரு வால்வு இருக்கிறது அல்லவா, ரத்தசோகை பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த வால்வு பகுதியில் ஜவ்வு வளரும். இதனாலும், உணவை விழுங்குவதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, மூலக்காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். 

ஒரு சிலருக்கு மேற்கண்ட பிரச்னைகள் இல்லை என்றாலும் உணவு விழுங்குவதில் அவஸ்தைப்படுவார்கள். உணவுக்குழாய் சரியாகச் செயல்பட வேண்டும் எனில், மண்டையில் ஆரம்பித்து தொண்டை வரையுள்ள பல நரம்புகளும் தசைகளும் ஒத்திசைந்து வேலை செய்ய வேண்டும். ஸ்ட்ரோக் அல்லது நரம்பு மண்டலத்தில் வேறு ஏதேனும் பிரச்னைகள் வந்தாலோ, தசைச்சோர்வு ஏற்பட்டாலோகூட டிஸ்பேஜியா வரலாம்.  உணவு விழுங்குவதற்குத் துணைபுரியும்  கிரேனியல் நரம்புகள் 9, 10 ஆகியவற்றில் ஏற்படும் கோளாறு, மூளைத்தண்டில் ஏற்படும் பிரச்னை ஆகியவையும்கூட டிஸ்பேஜியா பிரச்னையை ஏற்படுத்தலாம். நோய்த்தன்மையின் வரலாற்றை அறிந்து, தொண்டையில் பரிசோதனை செய்து, எண்டோஸ்கோப்பி சிகிச்சை மற்றும் சில வகை தெரப்பிகளைக் கொடுத்து டிஸ்பேஜியா பிரச்னையை சரிசெய்துவிட முடியும்.

- தொடரும்