
உணவு

வைட்டமின் பி குடும்பத்தில் மிகவும் முக்கியமானது `பி12’ என சொல்லப்படும் சயனோகோபாலாமின். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தினசரி உணவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தவறான உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை காரணமாக இந்த வைட்டமின் குறைபாடு பிரச்னை உலகம் முழுவதும் காணப்படுகிறது.
உடல்பருமனாக இருப்பவர்கள், வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்காக பல்வேறு தவறான டயட் முறைகளைப் பின்பற்றுவதால் இவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது. முற்றிலும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும் இந்தக் குறைபாடு வருகிறது.
வைட்டமின் பி12 அசைவ உணவுகளிலும், பால் பொருட்களிலும் மட்டுமே இருக்கிறது. இந்த இரண்டையும் அறவே தவிர்ப்பதால்தான் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது. நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாதான் இந்த வைட்டமினை உடல் பயன்படுத்த உதவுகிறது.

ஏன் வைட்டமின் பி12 நமக்கு தேவை?
புரதச்சத்தை உடலுக்கு ஏற்ற வகையில் மாற்றும் நடைமுறைக்கு அவசியம்.
ரத்தம், ஆக்சிஜனைக் கொண்டுசெல்லும் பணியைச் சிறப்பாகச் செய்யத் தேவை.
உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவதில் இந்த வைட்டமின் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நரம்பு மண்டலங்களின் இயக்கத்துக்கும் பயன்படுகிறது. நல்ல நினைவுத்திறன் இருக்க இந்த வைட்டமின் தேவை.
மரபணு தொகுப்புகள் ஆரோக்கியத்துக்கு (DNA Synthesis) சயனோகோபாலமின் பயன்படுகிறது.

வைட்டமின் பி12 குறைபாடு
உடல்நலக் குறைவு ஏற்படும் சமயங்களில் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக இரைப்பை மற்றும் குடல் பகுதியில் எதாவது தொந்தரவுகள் ஏற்பட்டால், எளிதில் இந்த வைட்டமின் குறைபாடு வரும். நுண்ணூட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உட்கொள்வது, புற்றுநோய், ஹெச்.ஐ.வி பாதிப்பு மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கும் இந்தக் குறைபாடு பொதுவாகக் காணப்படுகிறது.
ஆல்கஹால் அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகிய செயல்கள் இந்த வைட்டமின் கிரகிக்கப்படும் செயல்பாட்டை பாதிக்கின்றன.

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் என்ன நிகழும்?
தலைமுடி வலுவிழக்கும்.
எக்சீமா என சொல்லப்படும் தோல் தடித்து அரிப்பு மற்றும் ரத்தம் கசிதல் பிரச்னை ஏற்படும்.
சூடான அல்லது குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் வாயில் கூச்சஉணர்வு (Sensitivity) ஏற்படும்.
எரிச்சலான உணர்வு அதிகமாக இருக்கும்.
மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்.

உடல் வழுவிழந்து, ஆற்றல் இல்லாத உணர்வு இருக்கும்.
மலச்சிக்கல் ஏற்படும்.
தசைகளில் வலி ஏற்படும்.
நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
மிகவும் மோசமான அளவில் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சிவப்பணுக்கள் குறைந்து ரத்த சோகை ஏற்படும்.
- பு.விவேக் ஆனந்த்

ஊசி மூலமாக சயனோ கோபாலமினை எடுத்துக்கொண்டால் உடலில் அலர்ஜி, மூச்சுத்திணறல் ஏற்படலாம். மேலும், முகம் சிவந்துபோதல், கை, பாதம், காலில் வீக்கம் ஏற்படலாம்.