
ஈஸி 2 குக்

புரோகோலி - வால்நட் சூப்
தேவையானவை
சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு - தலா 1
சோள மாவு - 2 டீஸ்பூன்
பால் - 1 கப்
தண்ணீர் - 2-3 கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத் தூள் - தேவையான அளவு
வால்நட் - சிறிதளவு

செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயத்தை வதக்க வேண்டும். புரோகோலியை சுத்தமாக்கிய பின் சிறிதாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும்.
மிக்ஸியில் புரோகோலி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீர் விட்டு அரைக்க வேண்டும். ஒரு கப்பில் பாலுடன் சோள மாவைக் கலந்து, கரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். சூடாக இருக்கும் கடாயில், அரைத்த புரோகோலி விழுது மற்றும் பாலில் கரைத்த சோள மாவைக் கலந்துவைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, ஒரு கொதி வந்த பிறகு இறக்க வேண்டும். இந்த சூப்பின் மேல் வால்நட் தூவி சாப்பிடலாம்.
பலன்கள்
புரோகோலி, வால்நட்டில் புற்றுநோய்க்கு எதிரான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால், மார்பகம், வயிறு தொடர்பான புற்றுநோய்களுக்கான வாய்ப்புக் குறைகிறது.
வைட்டமின் சியும், இரும்புச்சத்தும் உள்ளதால், சருமம் பளிச்சிடும். இதயம் மற்றும் மூளையைப் பலப்படுத்தும். மறதி நோய் வராமல் தடுக்கும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்துவந்தால், நினைவுத்திறன், கவனத்திறன் அதிகரிக்கும். புரோகோலியைச் சாப்பிட மறுப்போரும் இந்த முறையில் செய்து சாப்பிட, சுவையுடன் சத்துக்களும் உடலில் சேரும்.
ஹெல்த்தி மிக்ஸர்
தேவையானவை
அவல் பொரி, அரிசிப் பொரி, கம்புப் பொரி போன்ற ஏதேனும் மூன்று பொரி வகைகள், கார்ன் ஃபிளேக்ஸ் - தலா 1/2 கப்
வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
பொட்டுக் கடலை - 50 கிராம்
பெருங்காயம், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன்
பொடி சர்க்கரை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
அவல், பொரியைத் தனித்தனியாக வாணலியில் கொட்டி இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தி வதக்க வேண்டும். அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிவிட வேண்டும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பொட்டுக் கடலை, வேர்க்கடலை சேர்த்து வதக்க வேண்டும். பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இந்தத் தாளிப்புடன் பொரி வகைகள், கார்ன் ஃபிளேக்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.
பலன்கள்
உணவுப் பொருட்கள் எண்ணெயில் பொரிக்காமல், வறுக்கப்படுகின்றன. ஆகையினால், ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக இவற்றைச் சாப்பிடலாம்.
பசியுடன் வரும் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த மிக்ஸரைத் தரலாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.
- ப்ரீத்தி
படங்கள்: எம்.உசேன்