Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 6

மனமே நீ மாறிவிடு - 6
News
மனமே நீ மாறிவிடு - 6

மனமே நீ மாறிவிடு - 6

மனமே நீ மாறிவிடு - 6

ரு பெரும் விருட்சத்தின் மூலம், சிறு விதை. நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்துக்கும் ஏதோ ஓர் எண்ணம்தான் காரணமாக இருக்கும். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் ஆராய்ந்தால், சில அடிப்படை எண்ணங்கள்தான் அனைத்தையும் தீர்மானித்திருக்கும். நம் எண்ணங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமான உண்மைகளாக இருக்காது. பல விஷயங்கள், அபிப்பிராயங்களாகத்தான் இருக்கும். ஆனால், அவை நம் வாழ்க்கையையே புரட்டிப்போடுபவையாக இருக்கும்.

“15 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஃப்ளாட்டை யாராவது 20 லட்ச ரூபா கொடுத்து வாங்குவாங்களானு கோட்டூர்புரம் ஃப்ளாட்டை வேண்டாம்னு சொன்னேன், இப்போ, கேளம்பாக்கத்துக்கு போய் 70 லட்ச ரூபாய் கொடுத்து வாங்குற மாதிரி ஆகிருச்சு.”

“டெல்லிப் பொண்ணுதான் முதல்ல வந்த வரன். மாடர்ன் டிரஸ் போட்டோவைப் பாத்தவுடனேயே நம்ம குடும்பத்துக்கு சரிப்படாதுன்னு நிராகரிச்சேன். கல்லிடைக்குறிச்சி பொண்ணு, தெரிஞ்ச இடம்னு நம்பிக்கையா முடிச்சோம். டைவர்ஸ்ல முடியும்னு யாரு கண்டா?”

வாழ்க்கை நம் விருப்பத்துக்கு எதிராகச் செல்வதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அதற்குக் காரணம் காலாவதியாகிவிட்ட நம் அபிப்பிராயங்களும் எண்ணங்களும்தான். 50 ஆண்டுகளாக 500 பேருக்கு மேல் வேலை செய்தும், 100 கோடி ரூபாயைத் தொடாத நிறுவனங்களுக்கு மத்தியில், ஐந்து வருடத்துக்குள் 50 பேருக்கும் குறைவான பணியாளர்களுடன் 5,000 கோடி ரூபாயை ஈட்டும் நிறுவனங்கள் உருவாகும் என யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? இரும்பை உருக்கிச் சம்பாதிக்க முடியாததை, இன்று பேருந்துக் கட்டணப் பதிவுசெய்யும் நிறுவனமும் வாடகை கார் பதிவு நிறுவனமும் சம்பாதிக்கின்றன.

மனமே நீ மாறிவிடு - 6

முன்பு மேனேஜராக 40 வயதைக் கடந்திருக்க வேண்டும். இன்று, பலர் 40-ல் ஓய்வுபெறுவதை லட்சியமாகச் சொல்கிறார்கள். 30 வயதில் எம்.டி, சி.ஈ.ஓ என ஆகிறார்கள். இப்படிப் பல நம்பிக்கைகள் நாம் வாழும் காலத்திலேயே நீர்த்துப்போவதைப் பார்க்கிறோம். இருந்தும் பல அபிப்பிராயங்களைவிடாமல் பிடித்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். இப்படி இறுகிப்போன எண்ணங்கள்தான் பல ஏமாற்றங்களுக்குக் காரணம். அபிப்பிராயங்கள் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? இருக்கலாம். ஆனால், அவற்றை அடிக்கடி சோதனைசெய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.

நாம் பார்க்கும் வேலையும் நம் சூழலும் பல எண்ணங்களை உறுதிப்படுத்தும். அது இயல்புதான். போலீஸ்காரர்கள் எதையும் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். எங்களைப் போன்ற சைக்காலஜிஸ்ட்டுகள் `இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்றால்..?’ என்று ஆரம்பிப்பார்கள். விஞ்ஞானிகளும் நீதிபதிகளும் எல்லாவற்றுக்கும் சாட்சிகள் கேட்பார்கள். குவாலிட்டி ஆசாமிகள் சுலபமாகத் தவறுகள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், இவை நம் எண்ணங்களை முழுவதுமாக மாற்றிவிடாது. அடிப்படை எண்ணங்கள் நம்முடையவைதான். அதனால்தான் ஒரே தொழிலில் உள்ள இருவர் இரு வேறு சிந்தனைகளுடன் செயல்பட முடிகிறது.

நாம் தொடந்து சிந்திக்கும் எண்ணங்கள்தான் ஒரு கதைபோல ஆழ்மனதில் பதிகிறது. இதை, `டிரான்சாக்‌ஷனல் அனாலிசிஸ் ஸ்க்ரிப்ட் (Transactional analysis script)’ என்பார்கள். இந்த ஸ்க்ரிப்ட்தான் நம் வாழ்க்கையை வழி நடத்திச்செல்கிறது. இந்த உள் மனக் கதை ஓட்டத்துக்கு ஏற்றபடி நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் அனைத்தும் இயங்க ஆரம்பிக்கும்.

என் நண்பர் ஒருவருக்கு எங்கு வேலைக்குச் சென்றாலும் முதலாளியிடம் மோசமான உறவு இருக்கும். அவர் ஸ்கிரிப்ட் அப்படி. முதலாளிகளிடம் கோளாறு இல்லை. இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் புது வேலைக்குச் செல்லும்போது, `இங்கு முதலாளியுடன் எந்த பிரச்னையும் கூடாது!’ எனச் சபதம் எடுத்துக்கொண்டுதான் செல்வார். இவர் எடுக்கும் எதிர்மறை சபதமே, அவர் ஸ்க்ரிப்ட்டின் எதிரொலிதான்.எது நடக்கக் கூடாது என்று நினைத்துப்போகிறோமோ அது நிச்சயம் நடக்கும். அதுதான் கவர்ச்சி விதி. ஆசையோடு திருமணம் செய்வதற்கும், விவாகரத்து ஆகக் கூடாது என்ற நினைப்போடு செய்யும் திருமணத்துக்கும் வேறுபாடு உள்ளது அல்லவா? இதை கிரிக்கெட்டில் அடிக்கடி பார்ப்போம். ஜெயிக்க வேண்டிய மேட்சை `தோற்கக் கூடாது’ என்ற எண்ணத்துடன் மிக ஜாக்கிரதையாக விளையாடித் தோற்போம். எண்ணங்களின் வலிமை அறிய பல ஆய்வுகளை நடத்தி உள்ளனர் உளவியலாளர்கள். விளையாட்டு உளவியலில் `காக்னிடிவ் சைக்காலஜி’ எனப்படும் சிந்தனை சார்ந்த உளவியலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

மனமே நீ மாறிவிடு - 6

களம் இறங்கி பேட்ஸ்மேன் சந்திக்கும் முதல் பந்து. சென்ற பந்தில் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் அபாயகரமாக ஓடிவருகிறார். அயல்நாட்டு பார்வையாளர்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாக, ஆரவாரமாகக் கூச்சலிடுகிறார்கள். பின்னால், கெட்ட வார்த்தை சொல்லி விக்கெட் கீப்பர் ஸ்லெட்ஜிங் செய்கிறான். எதிரில் மட்டை பிடித்துள்ள தோழன் `இந்த ஓவர் மட்டும் பார்த்து ஆடு!’ என எச்சரித்து இருக்கிறான். பந்து சீறி வருகிறது முகத்துக்கு நேரே... சொல்லுங்கள் என்ன நடக்கும்?

இவை எல்லாமும் வெளிப்புற உண்மைகள். ஆட்டக்காரனின் உள் மன உரையாடல்தான் அவன் அவுட் ஆகப்போகிறானா அல்லது சிக்ஸர் அடிக்கப்போகிறானா எனத் தீர்மானிக்கும்.இப்படித்தான், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எண்ணங்கள் செயல்களைத் தீர்மானிக்கின்றன.

மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்பே,  மனம் மாறினால் வாழ்க்கை மாறும் என்பதுதான். மெய்ஞானம் முதல் விஞ்ஞானம் வரை கண்டு சொன்ன உண்மை. மனம் மாறுமா? மாற்றித்தான் பார்ப்போமே... வாருங்கள்!

- மாறுவோம்!