Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 7

மனமே நீ மாறிவிடு - 7
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 7

குடும்பம்

மனமே நீ மாறிவிடு - 7

ம் கவலைகள் பலவற்றுக்கு யாரையாவது காரணம் சொல்வோம். `அந்த ஒருவரால், அல்லது சிலரால்தான் எல்லா பிரச்னையும்’ என்போம். `அவர்கள் மாறினால் எல்லாம் சரியாகும்’ என்று சத்தியம் செய்வோம். பிறர் மாற எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். என் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பலர் தவறாமல் கேட்கும் கேள்வி, `இதை எல்லாம் முதலில் எங்க பாஸுக்குச் சொல்லித்தர முடியுமா’, `இதைவைத்து என் மனைவியின் குணத்தை மாற்ற முடியுமா?’, `என் குழந்தைகள் இதை எல்லாம் புரிஞ்சுப்பாங்களா?

அவங்களுக்கு எப்படி புரியவைப்பது?’ நாம் எல்லாருமே பிறரை மாற்ற வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். கடவுள் முதல் கடைக்காரர் வரை எல்லோரிடமும் இதைத்தான் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். எல்லா உறவுப் பிரச்னைகளுக்கும் காரணம் நம் எதிர்பார்ப்புகள்தான்.

சென்ற வருடம் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபோது, தெரிந்தவர் ஒருவர் தொலைபேசியில் அவசரமாக அழைத்தார். `பொண்ணுக்கு மார்க் குறைஞ்சுபோய் வீட்டில் ஒரே ரகளை. கையை வெட்டிக்கிட்டு, ஆஸ்பத்திரியில சேர்த்து, இப்பத்தான் டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்குப் போயிட்டிருக்கோம். உங்களை உடனே பார்க்கணும்’ என்று மூச்சிரைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் குடும்பமே வந்தது. ப்ளஸ் டூ எழுதிய பெண் துள்ளிக்கொண்டு வந்தாள். பின் வந்த அம்மா கையில் கட்டு. மகள் மதிப்பெண் குறைவாக வாங்கியதில் மானம் போய்விட்டதாம். கையை அறுத்துக்கொண்டது மகள் அல்ல தாய்.

இதையும் மிஞ்சிவிட்டார் இன்னொரு தந்தை. `அவளுக்கு நீங்க டீம் ஒர்க், மோட்டிவேஷன், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் எல்லாம் சொல்லித்தரணும். அக்காடமிக்ஸ் தவிர, நாலு கிளாஸ் போறா. ஆனா, இன்னமும் அவளை காம்ப்பிடேட்டிவாக நான் எதிர்பார்க்கிறேன்...’ என்று அடுக்கியவரிடம், `பெண்ணுக்கு என்ன வயது?’ என்று கேட்டேன். `எட்டு’ என்றார்.

மனமே நீ மாறிவிடு - 7

தற்கொலைகள் முதல்  ஆணவக் கொலைகள் வரை அனைத்துக்கும் எதிர்பார்ப்புகள்தான் காரணம். துருப்பிடித்த எதிர்்பார்ப்புகளை வைத்துக்கொண்டுதான் இத்தனை  சேதாரங்கள் செய்துகொண்டிருக்கிறோம்,

இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஏன் இவ்வளவு தங்க நகைகள் போட்டு, சக்திக்கு மீறிய ஆடம்பரத் திருமணங்கள் செய்கிறோம்? `இவை ஊராரின் எதிர்பார்ப்புகள்’ எனச் சொல்வோம். ஆனால், இவை நம் எதிர்பார்ப்புகளே. படிப்பு, வேலை, கல்யாணம், குடும்பம் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளும் நம்முடையவை. பிறர் பாதிப்புகள் இருந்தாலும் இறுதி முடிவு நம்முடையவைதான். எது நியாயமான எதிர்பார்ப்பு, எது அதீதமான அல்லது தவறான எதிர்பார்ப்பு என்பதை நிர்ணயம் செய்வதில்தான் சிக்கல் உள்ளது. அதனால்தான், பிறர் எதிர்பார்ப்புகள் மிகையாகவும் நம் எதிர்பார்ப்புகள் இயல்பாகவும் தெரிகின்றன. எவ்வளவு அன்பு இருந்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக அதிகமாக அவை நிச்சயம் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.

பரஸ்பர எதிர்பார்ப்புகள் கணக்குப் பார்த்து, பேரங்களைப் பேசச்செய்யும். `நான் இவ்வளவு செய்தேன்; நீ என்ன செய்தாய்?’ என்று கேட்க வைக்கும். எல்லா ஏமாற்றங்களுக்கும் எதிராளியைக் குற்றவாளியாக்கும். `எவ்வளவு செஞ்சு என்ன ஆச்சு? எல்லாம் என் தலை எழுத்து’ எனத் தன்னைத் தியாகியாக நினைத்து, தத்துவம் பேசவைக்கும். மற்றவர்களிடம் இருந்து பெறுவதைக் குறைத்து மதிப்பிடுவதும், அவர்கள் செய்யாததைப் பூதாகரமாகப் பார்ப்பதும்தான் பிரச்னைகள்.  இப்படித்தான் நம் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு செய்திகளைத் தேடித் தேடிச் சேகரித்து, `நம் நம்பிக்கைகள்தான் உலகளாவிய உண்மைகள்’ என வாதாடுவோம்.

ஒவ்வொரு சிக்கலான உறவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும், அதை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் எப்படி உணர்கிறீர்கள் என்பதையும், அதேபோல அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுகிறீர்களா என்பதையும் எழுதுங்கள்.

பிறகு, உங்கள் எதிர்பார்ப்புகளில் எத்தனை விஷயங்களைக் குறைத்துக்கொள்ளலாம் எனப் பட்டியலிடுங்கள். அதேபோல, அவர்கள் நிறைவேற்றாமல் போகும்போது, அதை எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியும் என்று பாருங்கள்.

எதிர்பார்ப்புகளே இல்லாமல் அன்பு செலுத்த முடியுமா? என்று யோசியுங்கள். பிறந்த குழந்தையின் மேல் தாய்கொள்ளும் அன்பு அது. `நீ எப்படி இருந்தாலும் நான் தரும் அன்பு இதுதான். நான் உனக்குச் செய்வது இதைத்தான்’ என்ற நிலை அது. உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது, எதிராளியின் எதிர்பார்ப்பும் குறைந்துபோயிருக்கும். எதிராளியின் மனதை மாற்றும் சூட்சுமம் உங்கள் மனம் மாறுவதில்தான் உள்ளது!

- மாறுவோம்!