மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10

ஹெல்த்

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10

“என்னாச்சு... கிரிக்கெட் விளையாடப் போனோம்... நீ பால் போட்ட... இவன் அடிச்சான். பால் மேல போச்சா...  கேட்ச் பிடிக்கப் பின்னாடியே போனேன். கால் சிலிப் ஆகி, கீழே விழுந்துட்டேனா... ஓகே... ஓகே! (பின்னந்தலையில் கை வைத்தபடி) இங்கே அடிபட்டிருக்கும். இங்கதான் மெடுல்லா ஆப்ளங்கட்டா (Medulla oblongata) இருக்கு. அங்க அடிபட்டா ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஆகிடும்”... ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில், ஹீரோ மீண்டும் மீண்டும் சொல்லும் டயலாக். மெடுல்லா ஆப்ளங்கட்டாவை “அது என்ன முட்டை பொடிமாஸ்” என்று சலூன் கடையில் முடிதிருத்துபவர் கேட்பார். இந்த இதழிலும் அடுத்த இதழிலும் மெடுல்லா ஆப்ளங்கட்டாவைப் பற்றியும் அது இருக்கும் மூளைத்தண்டு என்று அழைக்கப்படும் பிரெயின்ஸ்டெம் பற்றியும்தான் சொல்லப்போகிறேன்.

அதற்கு முன்பு, மூச்சை நன்கு இழுங்கள். ஒரு சில விநாடிகள் அப்படியே மூச்சை அடக்கிவையுங்கள். மூச்சை வெளியே விடுங்கள்... இப்படிச் செய்வதற்கு உடலின் எந்தப் பகுதி துணைசெய்கிறது எனத் தெரியுமா? `நுரையீரல்’ என்று சொன்னால் அது பாதிதான் உண்மை. நாம், இந்த இதழில் பேச இருக்கிற `மூளைத்தண்டு’ என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு 100 மதிப்பெண்கள். வெறும் எட்டு செ.மீ அளவில், குழாய்போன்ற தோற்றத்தைக்கொண்ட இது, பெருமூளைக்குக் கீழும், தண்டுவடத்துக்கு மேலும் அமைந்திருக்கிறது. உள்ளேயும் வெளியேயும் மிகவும் சிக்கலான அமைப்பைக்கொண்டது மூளைத்தண்டு. இதை மூன்றாகப் பிரிக்கலாம். முதலாவது `மிட் பிரெய்ன்’ எனப்படும் நடுமூளை, இரண்டாவது பான்ஸ், மூன்றாவது `முகுளம்’ எனப்படும் மெடுல்லா ஆப்ளங்கட்டா.

உயிர்வாழ, மிக முக்கிய உறுப்புக்களில் ஒன்று மூளைத்தண்டு. மூளைத்தண்டு முக்கியமாக மூன்று பணிகளைச் செய்கிறது. முதலாவது, முதுகுத்தண்டுடன் இணைப்பது. இதுதான், `மைய நரம்பு மண்டலம்’ எனச் சொல்லப்படும் பெருமூளை, சிறுமூளையை முதுகுத் தண்டுவடத்துடன் இணைக்கிறது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10

இரண்டாவது, நாம் உயிர்வாழ மிக அவசியமான சில பணிகளைச் செய்கிறது. திருமண விருந்துக்குச் செல்கிறோம், அல்லது அலுவலகத்தில் நடக்கும் ட்ரீட்டில் வயிறு புடைக்கச் சாப்பிடுகிறோம். `அது எப்படி செரிமானம் ஆகிறது?’ என யோசித்திருக்கிறோமா? வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்கிறோம். `உடல் முழுக்க ரத்த ஓட்டம் எப்படி வேகமாகப் பாய்கிறது?’ என யோசித்திருக்கிறோமா? இதைக் கட்டுப்படுத்துவது மூளைத்தண்டுதான். இதன் தூண்டுதலுக்கு ஏற்ப, இதயம், செரிமான மண்டலத்தில் அமைந்து உள்ள தசைகள் வேலை செய்கின்றன. இவை, தன்னிச்சை இயக்கம் கொண்டவை. தானாகச் செயலாற்றும்.

மூன்றாவது, கட்டுப்படுத்துதல். நீங்கள் எப்போதாவது, இரண்டு நபர்களுக்கு இடையே தகவல் பரிமாறுபவராகச் செயல்பட்டிருக்கிறீர்களா? அந்த வேலையையும் இது செய்கிறது. உதாரணத்துக்கு, உங்களுக்கு தண்ணீர் தாகமாக இருக்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும் என நினைக்கின்றீர்கள். அப்படி நினைத்த உடனேயே இதை உங்கள் மூளைத்தண்டு செயல்படுத்தி, உடலை இயக்கி, தண்ணீர் இருக்கும் இடத்துக்குச் சென்று, ஒரு கிளாஸ் தண்ணீரைப் பிடித்து அருந்தச் செய்கிறது.

மொத்தத்தில் மூளைத்தண்டுதான், இதயத் துடிப்பு, சுவாசம் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்துவது, வலிக் கட்டுப்பாட்டு மையமாகவும், நம் புலன்களின் இயக்க சிக்னல்களை பரிமாறும் ஜங்ஷனாகவும் செயல்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், நாம் சுயநினைவுடன் இருக்கக் காரணமே இந்த மூளைத்தண்டுதான்.

நடுமூளை

`தகவல் சூப்பர்ஹைவே’ என்று இதைச் சொல்லலாம். இன்றைக்கு `இன்ஃபர்மேஷன் சூப்பர்வே’ என்பது, ஏதோ டெக்னிக்கல் வார்த்தையாகத் தெரியலாம். ஆனால், இது 1970-களில் கேபிள் மூலமான தகவல் தொடர்பு சாத்தியமானபோது வந்த வார்த்தை. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு சூப்பர் ஹைவே எப்படி முக்கியமோ, அதுபோல நரம்பு மண்டலத் தகவல் பரிமாற்றத்துக்கு இந்த நடுமூளை முக்கியம். தொழில்நுட்பத்தில் எப்படி இணையமோ, உயிரியலில் நடுமூளை. இதன் முக்கியப் பணியே, பார்வை, செவிவழித் தகவலை மூளைக்குக் கொண்டு சென்று, அதன் அடிப்படையில், உடல் இயக்கத் தகவலை மூளையில் இருந்து வெளியே கொண்டுசெல்வதுதான்.

- அலசுவோம்!

மெடுல்லா ஆப்ளங்கட்டா

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10

தமிழில் இதை `முகுளம்’ என்று சொல்வோம். சுவாசம், செரிமானம், இயத்துடிப்பு, ரத்தக்குழாய் செயல்பாடுகள், தும்மல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மையம் இதுதான். முகுளத்தைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.