அவள் 16
Published:Updated:

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

ஆரோக்கியம்

வெயில்... அனைவரையும் தலை கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருக்கிறது!

கத்தரி வெயிலுக்கும் நம் உடலுக்கும் உள்ள ஹாட் கெமிஸ்ட்ரி பற்றி அறிவோம், முதலில்! உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98 - 99 டிகிரி ஃபாரன்ஹீட்). வெயிலால் அது அதிகரிக்கும்போது, உடலின் தற்காப்பு மண்டலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சருமத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் வெப்பம் கடத்தப்பட்டு, வியர்வை வெளியேறும். வியர்வை ஆவியாவதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

உஷ்ணம், டீஹைட்ரேஷன் போன்ற உடற் தொந்தரவுகள், வியர்க்குரு, சின்னம்மை போன்ற சருமத் தொந்தரவுகள் போன்ற, வெயிலின் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை வழங்குகிறார்கள் சித்த மருத்துவர் மு.சத்தியவதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர் யாழினி.

கோடையிலும் குளுமை பெற... எண்ணெய்க் குளியல்! 

வாரம் ஒருமுறை, மிதமாக சூடுபடுத்திய நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை தேய்த்துக் குளித்துவர... உடற்சூடும் கண் சூடும் தணியும். எண்ணெய்க் குளியலன்று பகல் உறக்கம் கூடாது. புளிப்பு, பழையது, அசைவம் சாப்பிடக்கூடாது. இரவில் உள்ளங்காலில் பசு நெய் தேய்த்துவிட்டு தூங்குவது, உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பது, தொப்புளில் எண்ணெய் விடுவது ஆகியவை கண்களின் சூட்டைத் தணிக்கும்.

சருமத்தைப் பாதுகாக்க!

• வியர்க்குரு, துர்நாற்றம், சரும பாதிப்பு போன்றவற்றைத் தவிர்க்க, நலங்குமாவு கைகொடுக்கும். வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, கார்போக அரிசி தலா 100 கிராம் சேர்த்து, இதனுடன் பச்சைப்பயறு 500 கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். சோப்புக்கு பதிலாக இதைப் பயன்படுத்தவும். 

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

• கற்றாழை சதையை கை, கால், முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க, `சன் டேன்' பிரச்னை நீங்கும். அதுபோல, புளித்த தயிரை சருமத்தில் பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும். இழந்த நீர்த்தன்மையை ஈடுகட்டி, இயற்கையாகவே சருமம் பளபளக்கும்.

கோடைக்கு ஏற்ற உணவு!

• வெயில், ஜீரணம் வரை தொந்தரவு செய்யக்கூடியது என்பதால், கோடைக்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்வது உடலை ‘ஜில்’ ஆக்கும்.

• நூறு கிராம் நன்னாரி வேரை ஒன்றிரண்டாக இடித்து இரவில் 400 மில்லி நீரில் ஊறவைக்கவும். தண்ணீரை கொதிக்கவிட்டு 100 மில்லியாக குறுக்கவும். சுவைக்கு பனைவெல்லத்தை சேர்த்து பாகுபோல காய்ச்சி வைக்கவும். நன்னாரி மணப்பாகு ரெடி. இதை தினமும் சிறிதளவு எடுத்து நீர் கலந்து குடிக்கலாம். நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று ஆகியவற்றை இது குணமாக்கும்.
நீராகாரம், கூழ் வகைகள் நல்லது. வெயிலுக்கு உகந்த சிறுதானியங்களை பானை சோறாக வடித்துச் சாப்பிடலாம் (குக்கர் வேண்டாம்).

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

• காலையில் இஞ்சி, நடுப்பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டுவர உடலின் வெப்பம் சமநிலையாகும்.

• மண் பானை நீர், சீரகம் சேர்த்து கொதிக்கவைத்த நீர், செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் ஆகியவற்றை அருந்தலாம்.

• தாளித்த நீர் மோருடன் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தலாம்.

• ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், சிறிய அளவு சுக்கு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சுவைக்கு வெல்லம் சேர்த்து...  மண் சட்டியில் ஒருநாள் வைத்து, மறுநாள் அதைச் சிறுகச் சிறுகக் குடிக்க உடற்சூடு தணியும்.

• இரவில் பனஞ்சர்க்கரை சேர்த்த பால் குடிக்கலாம்.

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

• பருவகால காய்கனிகள் மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ள மாதுளை, தர்பூசணி, நுங்கு, கிர்ணி, முலாம் பழம், வெள்ளை பூசணி, பரங்கிகாய், பீர்க்கங்காய், வெள்ளரி, புடலங்காய் ஆகியவற்றைச்  சாப்பிடலாம்.

• எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை சேர்த்து... அசைவ உணவுகள் (குறிப்பாக உடற்சூட்டை அதிகரிக்கும் சிக்கன்), அதிக காரம், புளிப்பு, மசாலா ஆகியவை தவிர்க்கலாம்.

• இளநீர், ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்த பால், ஃபிரெஷ் காய்கறிகள், கீரை வகைகள், உணவில் தினமும் அரை ஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

• மிக முக்கியமாக, உடலின் நீர்ச்சத்து அதிகப்படியான வியர்வையாக வெளியேறுவதால் ஏற்படும் டீஹைட்ரேஷன், ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றைத் தவிர்க்க, அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தாகம் அதிகமாக இருப்பது, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு போன்றவை எல்லாம் டீஹைட்ரேஷனின் விளைவுகள், உடலின் தண்ணீர் தேவைக்கான அறிகுறிகள். இவற்றை உணர்ந்து செயல்படவேண்டும்.

குறித்துக்கொள்வோம் மருத்துவ அறிவுரை களை... இந்தக் கோடையை வெல்ல! 

-ப்ரீத்தி

வெறும் வயிற்றில் இளநீர்... கூடாது!

கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!

ளநீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, அப்போது கொஞ்சம் சூடாக இருக்கும் வயிற்றில் இளநீரில் உள்ள அமிலத்தன்மை புண்களை ஏற்படுத்தவோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டவோ செய்யலாம். மேலும், அதில் உள்ள பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, தவிர்க்கவும். காலை உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது முற்பகல் வேளைகளிலோ இளநீர் அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

சின்னம்மை... சில தகவல்கள்!

வேரிசில்லா சோஸ்டர் எனும் வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய சின்னம்மை, காற்று, நேரடித் தொடர்பு என்று எளிதில் பரவக்கூடியது. முதலில் உடலில் அரிப்பு ஏற்படும்; பின்னர் நீர்க்கட்டி தோன்றும். அரிப்பு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பும் அரிப்பு வந்த ஆறு நாட்களுக்குப் பிறகும் நோய் பரவுதல் அதிகமாக இருக்கும். பாதிப்பு உள்ளவரை தனியாக தங்க வைக்கவும். வீட்டில் ஒருவருக்கு அம்மைத்தொற்று வந்துவிட்டால், மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அம்மை தானாகவே சரியாகிவிடும். இதன் வீரியத்தைக் குறைக்க ஆன்டி வைரல் மருந்துகள் உள்ளன.