Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 8

மனமே  நீ மாறிவிடு - 8
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 8

மனமே நீ மாறிவிடு - 8

மனமே  நீ மாறிவிடு - 8

நாம் உபயோகிக்கும் மொழி, பிறரின் மனநிலையை, உறவுகளை எப்படி எல்லாம் பாதிக்கிறது தெரியுமா? சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் எத்தனை தவறான அர்த்தங்களை உற்பத்தி செய்கின்றன என நீங்கள் அறிவீர்களா?

`உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது!’, `உங்கிட்ட மனுஷன் பேசுவானா?’, `இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு எங்கேயாவது போய், பிச்சை எடுக்கலாம்!’, `என்னை மாதிரி வேதனைப்பட்ட தகப்பனை நீ உலகத்திலேயே பார்த்திருக்க மாட்டே!’, `ஒரு பைசாவுக்கு மரியாதை கிடையாது!’, `நான் எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டேன்; எதுவும் நடக்கலை!’

இவை அனைத்தும் அதீத வாக்கியங்கள். ஒரு விஷயத்தை அழுத்திச் சொல்ல, அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தியோ குறைத்தோ சொல்கிறோம். இது, எதிராளியின் புரிதலைச் சிக்கலாக்குகிறது. எதிராளியையும் இப்படி ஓர் அதீத வாக்கியத்தைச் சொல்லவைக்கிறது. பின், ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு இருவரையும் தள்ளி, இடைவெளியைப் பெரிதாக்குகிறது. அது பேச்சுவார்த்தையைக்கூட நிறுத்தவைக்கும்.

உணர்ச்சிவசப்பட வைப்பதுதான் மூளையின் எளிதான வேலை. அதுவும் பயம், கோபம் இரண்டையும் வரவழைப்பது அதற்கு மிகச் சுலபம். முதுகுத்தண்டின் மேல் பாகத்துடன் இணைந்துள்ள பகுதி, புராதன மிருக மூளை. மிருகத்தின் வேலை உயிர் காத்தல், உணவு சேகரித்தல் இரண்டும்தான். அதனால், போட்டியும் சண்டையும் ஓட்டமும் அன்றாடத் தேவைகள். அதற்கு ஏற்ற அமைப்புதான் பின் மூளை
யான மிருக மூளை. பரிணாம வளர்ச்சியில் மூளையின் மடிப்புகள் வளர்ந்து, முன்னுக்குத் தள்ளி மிகச் சமீப காலமாக (சில பல்லாயிரம் ஆண்டுகளாக) ஏற்பட்டதுதான் மனித மூளை. பகுத்தறிவு, தர்க்கம், பேசும் திறன், நகைச்சுவை, நிர்வாகம் என அனைத்தும் இந்த முன் மூளையில்தான் இயக்கப்படுகின்றன.

மனமே  நீ மாறிவிடு - 8

பிரச்னை என்னவென்றால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உள்ள மிருக மூளையின் செயல்பாடுதான் முதலில் அனிச்சையாக வேலை செய்யும். அதனால்தான், உணர்ச்சிவசப்படுதல் முதலில் ஏற்
படும். அது முற்றிலும் தணிந்த பிறகுதான், அறிவார்ந்த சிந்தனை சீராகச் செயல்பட ஆரம்பிக்கும்.

எத்தனை முறை நாமே ஒரு வாக்குவாதத்தில் தவறாகச் சொன்ன ஒரு வார்த்தைக்காகப் பின்னர் வருந்தியிருக்கிறோம்? உணர்ச்சிகள் அதிகரிக்கும்போது, தீவிரச் சொற்களை அதிகம் உபயோகிப்போம். ஒவ்வோர் அதீத வாக்கியத்தையும் அது சொல்ல நினைக்கிற செய்தியுடன் இணைத்துப் பார்த்தால், இந்தத் திரிபு நிலை புரியும்.

`உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது.’ (உன் கருத்து வேறு; என் கருத்து வேறு.)

`உங்கிட்ட மனுஷன் பேசுவானா?’ (உன்னுடன் பேசி, உனக்குப் புரியவைப்பது சிரமமாக உள்ளது.)

`இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதுக்கு எங்கேயாவது போய் பிச்சை எடுக்கலாம்.’ (நான் என் வாழ்க்கையை வாழும் விதம் திருப்தியாக இல்லை.)

`என்னை மாதிரி வேதனைப்பட்ட தகப்பனை நீ உலகத்திலேயே பாத்திருக்க மாட்டே.’ (ஒரு தகப்பனாக நான் வேதனைகொள்கிறேன்.)

`ஒரு பைசாவுக்கு மரியாதை கிடையாது.’ (எனக்குத் தேவையான மரியாதையை நீ சில நேரங்களில் அளிக்கத் தவறுகிறாய்.)

`நான் எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டேன்; எதுவும் நடக்கலை.’ (என் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.)

ஓர் அலுவல் மொழியில் சிந்திக்கவோ, பேசவோ முடியாதுதான். யோசித்துப்பாருங்கள். ஒருவர் உங்கள் காலை, கனத்த காலணிகொண்ட கடோத்கஜக் காலால் தவறி மிதித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். என்ன வார்த்தைகள் வாயில் இருந்து வரும்?  `யோவ் அறிவில்லை? இப்படி ஷூ காலை வெச்சு மிதிக்கிறியே. கண்ணு தெரியலை?’ என்று கேட்காவிட்டாலும் குறைந்தபட்சம் மனதுக்குள் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்ப்போம்தானே. சிக்கலில் உள்ளபோது அதீத வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பதுதான் நிஜமான அறிவு. இதனால், பல உணர்ச்சிகள் தவிர்க்கப்படும்; பல உறவுகள் பாதுகாக்கப்படும்.

சுலபமாகச் சொன்னால், உணர்ச்சி வசப்படுகையில் பேச்சைக் குறைப்பது நல்லது. ஒன்றைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ள மாதிரி சொல்லப்பாருங்கள்.

`நான் எல்லாத்தையும் செஞ்சு பாத்துட்டேன். அவன் ஒரு இன்ச்கூட நகரலை!’ என்ற வாக்கியத்தில் உள்ள மிகைகளைப் பாருங்கள். ஆரோன் பெக் என்ற உளவியலாளர் இதை `மிகையாக்கம் மற்றும் குறைவாக்கம் (Maximizations and minimizations) என்பார்.

குறிப்பாக, குடும்பப் பிரச்னைகளில் இந்த மிகைகள், உறவுகளைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். `வார்த்தையில் என்ன இருக்கிறது?’ என நினைக்காதீர்கள். தகாத சொல், சேதாரம் விளைவிக்கும். சரியான சொல், சண்டையை முடிக்கும்.அமங்கலச் சொற்களுக்கும் பலன் உண்டு. மந்திரச் சொற்களுக்கும் பலன் உண்டு. மனம் தரும் சொற்கள் உங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல; உங்கள் உறவுகளின் வாழ்க்கையைக்கூட மாற்றக்கூடியவை!

- மாறுவோம்!