
ஆஸ்துமா

அலர்ஜியால் ஏற்படும் பாதிப்புகளில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடம் உண்டு. மழை, குளிர், பனி போன்ற பருவங்களில்தான் ஆஸ்துமா வரும் என்பது இல்லை. அலர்ஜி இருப்பவர்களுக்குக் கோடை உள்பட எல்லா பருவங்களிலும் இது வரலாம். வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் பாதிக்கும் நோய் இது. இந்தியாவில், சுமார் 20 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.

காரணங்கள்...
ஒவ்வாமையும் பரம்பரைத்தன்மையும்தான் ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிர், கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.
நுரையீரலில் நோய்த்தொற்றும் ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்ஸில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளெக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.
கவலை, பதற்றம், மனஅழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம்.
ஏற்படும் விதம்
மேலே சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடும். அப்போது, மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடும். அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடும். இந்தக் காரணங்களால் காற்று செல்லும் பாதை, சுருங்கிவிடும்.
வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரந்து, மூச்சுப்பாதையை அதிகமாக அடைத்துவிடும். இதனால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். அதிலும் முக்கியமாக, மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.
என்ன சிகிச்சை?
மூச்சுக்குழாயின் சுருக்க அளவைத் தெரிந்துகொள்ள ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) பரிசோதனை செய்யப்படும். மார்பு எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், ரத்தப் பரிசோதனை மற்றும் தோல் பரிசோதனை மூலம் அலர்ஜிக்குக் காரணம் அறிந்து, சிகிச்சை பெறலாம். இன்ஹேலர், நெபுலைசர், இம்யுனோதெரப்பி இம்மூன்றும் இப்போது பிரபலம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன் பின்புதான் அவை பலன் தரும். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று, மூச்சுக்குழல் தசைகளைத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனடியாகக் கட்டுப்படும்.

கட்டுப்படுத்துவது எப்படி?
ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், சுற்றுச்சூழல் அனைத்துமே சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். தூசு, குப்பை மற்றும் அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்
படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவை இல்லாமல் சாமான்களை அடுக்கிவைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்விடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். அது இவர்களுக்குப் பரம எதிரி.
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். இவற்றில் இருக்கும் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் ஆஸ்துமாவைத் தூண்டுபவை.
இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும்.
மின் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனைத்திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகமாகலாம்.
ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும்.
பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் தூண்டுபவை. இதுபோல் பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில பிராணிகளின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு தருபவை.
பஞ்சுத் தூசு, ரைஸ்மில், மாவுமில், சிமென்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால், புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்துமாவைத் தூண்டும் காரணி.
மூச்சுப்பயிற்சி முக்கியம்!
தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம், நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.
- எதிர்வினை தொடரும்
ஆஸ்துமா தெர்மோபிளாஸ்டி (Asthma Thermoplasty)

ஆஸ்துமா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை இது. ‘பிராங்கோஸ்கோப்பி’ எனும் கருவியைப் பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. சிகிச்சையின்போது இந்தக் கருவியை வாய் அல்லது மூக்கு வழியாகத் தொண்டையைத் தாண்டி நுரையீரலுக்குள் அனுப்புகிறார்கள். மூச்சுக்குழலை அடைந்ததும், கருவியின் முனையில் சுருங்கிய வடிவில் இருக்கும் பலூன் அமைப்பை விரிக்கிறார்கள். அங்கு சுருங்கி இருக்கிற மூச்சுக் குழாய் இதனால் விரியும். இதைத் தொடர்ந்து ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அலைகளை சுமார் 10 விநாடிகளுக்குச் செலுத்துகி றார்கள். இவை, 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உண்டாக்கி, அங்கு அடைத்துக்கொண்டிருக்கும் மென்தசைகளைக் கரைத்துவிடும். இதன் பலனால், மூச்சுக் குழாய் அடைப்பு முற்றிலும் நீங்கிவிடும். மூன்று வாரங்கள் இடைவெளியில் மொத்தம் மூன்று முறை இதைச் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவது இல்லை. இந்தச் சிகிச்சையை வெளிநோயாளியாகவே மேற்கொள்ள முடியும். மறுநாள் இயல்பான பணிகளைச் செய்ய முடியும்.
இதை எல்லோருக்கும் செய்ய முடியாது. சில நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.
உணவில் கவனம்!

எந்த உணவினால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது. தவிர்க்கவேண்டிய பொதுவான உணவுகள்: பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி.
வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.
இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால், நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.