Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 9

மனமே  நீ மாறிவிடு - 9
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 9

ஓவியம்: ஹாசிப்கான்

மனமே  நீ மாறிவிடு - 9

ம் எண்ணங்கள் என்பவை உள்மன விவாதங்களே. ஒவ்வொரு செயலுக்கு முன்னும் பின்னும் இந்த விவாதங்கள் பலமாக நடக்கும். இவையே நம் செயல்களுக்குக் காரணங்களையும் புதிய அர்த்தங்களையும் கொடுக்கவல்லவை. நடக்கும் காரியத்தை எதிர்பார்ப்பதும், நடந்தவற்றில் இருந்து பாடம் கற்பதும் இந்த எண்ணங்களை வைத்துத்தான்.

`நான் காத்திருக்கும்போது மட்டும் எனக்கு பஸ் வராது’, `நான் சொன்னா யார் கேட்பா?’, `நம்ம ராசி, எல்லாமே ஏறுமாறாத்தான் அமையும்’... இப்படி, நமக்குள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

பெண்ணுக்குக் கல்யாணம் எனப் பத்திரிகை கொடுக்க வருகிறார் ஒருவர். `பையன் அமெரிக்காவில் கிரீன் கார்டு ஹோல்டர்’ என்று சொல்கிறார். உடனே, நம் மனம் விவாதத்தைத் தொடங்கிவிடும். `நான் வேலைக்குச் சேர்ந்தப்ப, இவன் ஜஸ்ட் டெம்பரரி கிளார்க். ஐஸ்ஹவுஸ் அருகே ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தான். இனி இவனும் அமெரிக்கா போய் செட்டில் ஆயிடுவான். நாம மட்டும் இப்படியே இருக்கோம். எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும். ஹூம்!’

மனமே  நீ மாறிவிடு - 9

இப்படி, ஒவ்வொரு நிகழ்வுக்கும் நமக்குள் ஒரு டயலாக் ஓடும். அந்த எண்ணஓட்டம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வின் சகல முடிவுகளும் இருக்கும். குறிப்பாக, நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதும் இல்லாததும் இந்த எண்ணங்களினால்தான். இந்த எண்ணங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், உங்கள் மனநலத்தை உங்களுக்கு எடுத்துரைக்கும்.

வாழ்க்கையின் சந்தோஷத்துக்கு இரு காரணங்கள்தான் உள்ளன. உங்கள் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பது ஒன்று. அவற்றை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பது இரண்டு. இதில், மகிழ்ச்சியை நிர்ணயிப்பதற்கு முதல் காரணம் 10 சதவிகிதம். இரண்டாவது 90 சதவிகிதம்.

இல்லாததை நினைத்து மருகுவதைவிட கிடைத்ததை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதுதான் ஒரு முதிர்ந்த மனதின் வெளிப்பாடு. நமக்கு நம் வாழ்வில் இல்லாதது அனைத்தும் தெளிவாக, வரிசையாகத் தெரியும். ‘நான் குள்ளம்’, ‘என் நிறம் சற்று கறுப்பு’, ‘எனக்கு ஆங்கிலம் வராது’, ‘என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை’, ‘என் வாழ்க்கைத்துணையால் நிம்மதி இல்லை’, ‘என் வேலையில் உயர்வு இல்லை’, ‘என் பிள்ளைகள் மதிப்பது இல்லை’, ‘உடல் உபாதைகள் என்னைப் படுத்துகின்றன’, ‘என் வாழ்க்கை முழுத் தோல்வி’...

இப்படியெல்லாம் அடிக்கடி புலம்புகிறோம். ஆனால், கிடைத்தவற்றுக்கு நன்றி சொன்னோமா... அதனால் மகிழ்கிறோமா... இன்றும் உயிரோடு வாழ்தலே மிகப்பெரிய கொடை என்று உணர்ந்து நன்றி சொன்னோமா? கிடைத்ததை நினைக்காத மனம், இல்லாததை நேரம் தவறாமல் நினைக்கும்.

உடலில் ஒரு பாகம் பழுதடையும்போது, அது சீராக இயங்கினாலே போதும் என ஒவ்வொரு விநாடியும் துடிக்கிறோம், இல்லையா? அது சரியான மறுநாளே, அதை மறந்துவிடுகிறோம். சரியாக இயங்கும் அங்கங்களுக்கு நன்றி செலுத்த மாட்டோம். ஆனால், அவை பழுதுபட்டால் அதன் மீது முழுக் கவனம் செலுத்துவோம். இதுதான் மனதின் செயல்பாடு.

மனமே  நீ மாறிவிடு - 9

மகன் படிக்கவில்லை என்றால், புலம்புவோம், வேண்டுவோம், பிரார்த்திப்போம், சண்டை போடுவோம். ஆனால், அவன் முதல் இடம் பிடித்தால், அந்தச் சந்தோஷம் சிறிது நேரம்தான். பின் மனம் அடுத்த கவலையை நோக்கி நகர்ந்துவிடும். `இவ்வளவு மார்க் வாங்கியிருந்தாலும் ஸீட் கிடைக்கணுமே?’, `வெளியூர் காலேஜ்னா சாப்பாடு கஷ்டம்!’... இப்போது புரிகிறதா, நம் நிஜமான எதிரி எது என்று?  புறக் காரணங்களைத் தேடித்தேடிக் குற்றம் சொல்வோர் ஒன்றை மறந்துவிடுகின்றனர். புறக் காரணங்களை பரிசீலனை செய்யும் எண்ணங்களும் அது எடுக்கும் முடிவுகளும்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.

`எனக்கு ஓவியம் கற்றுக்கொடுக்க யாரும் இல்லை. இருந்திருந்தால் நானும் ஓவியராகியிருப்பேன்’ என்று சொல்பவர்கள் உண்டு. கைகள் இல்லாமல் காலால் ஓவியம் வரைபவர்கள் உண்டு. எது உந்து சக்தி என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

உங்கள் மனம் உள்ளே போடும் இரைச்சலால் நீங்கள் வெளியில் உள்ள அமைதியை அனுபவிக்கத் தவறுகிறீர்கள். உங்களுக்குள் ஒலிக்கும் குரல், உங்களை அன்பாக நடத்தினால் நீங்கள் பிறரை அன்பாக நடத்துவீர்கள். உங்கள் உள் மன எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் வாழ்க்கை நம்பிக்கையோடு நகரும்.

உங்களால் உங்கள் புற உலகை மாற்றுவது சாத்தியம் இல்லை; உங்கள் அக உலகை மாற்றுவது சாத்தியம்; அவசியம். உங்கள் அக உலகம் மாறினால், உங்கள் புற உலகம் தானாக மாறும்.

- மாறுவோம்!