Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 10

மனமே நீ மாறிவிடு - 10
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 10

மனமே நீ மாறிவிடு - 10

மனமே நீ மாறிவிடு - 10

ன்முறை பெருகிவிட்டது. டி.வியில், பத்திரிகைகளில், அக்கம் பக்கத்தில் எங்கும் வன்முறை பற்றிய செய்திகள்தான் நிரம்பி வழிகின்றன. கொலை, தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என எல்லா செய்திகளிலும் வன்முறை தான் ஓங்கி நிற்கின்றன. அரசியல் செய்திகளில்கூட சொற்களால் கருத்துக்களால் மோதல்கள்தான் வியாபித்து இருக்கின்றன.

வெளி உலகத்தை விட்டுத்தள்ளுங்கள். நம் பணியிடம், நம் குடும்பம், நம் சுற்றம் என்று எடுத்துக்கொண்டாலே இங்கு எத்தனை ஆக்கிரமிப்பு, வன்முறை, வலி, சேதாரம். உடல் சார்ந்த வன்முறையைவிட மனம் சார்ந்த வன்முறை ஏராளம். குடும்ப உறவுகளில்தான் எத்தனை வன்முறை? உடலில் ஒரு கீறல் இல்லாமல் எத்தனை வலிகள் தருகிறோம்? பெறுகிறோம்? எண்ணங்களும் சொற்களும் போதுமே! வன்முறைக்குக் கத்தியும் துப்பாக்கியும் வேண்டுமா என்ன? சொற்களே போதும்.

“இத்தனை செஞ்சிருக்கேன்... என்ன செஞ்சீங்க எனக்குன்னு கேக்கறான்?”, “அவன் உறவுக்காரங்களை முன்னாடி நிற்கவெச்சிட்டு மரியாதைக்குக்கூட நம்ம ஆட்களை முன்னாடி வாங்கன்னு கூப்பிடலை!”, “ வீட்டுக்குப் போனப்ப முகம் கொடுத்துக்கூட பேசலை” - இப்படி நிராகரிப்புகள், ஓரவஞ்சனைகள், அவமானங்கள், அத்துமீறல்கள் என அனைத்தையும் ஆராய்ந்தால், யாரோ சிலரின் வன்முறை தெரியும். வன்முறைக்குப் பதில் என்ன? வன்முறைதான். “அதுக்கப்புறம் அவன்கூட பேசறதையே நிறுத்திட்டேன்”, “நானும் நல்லா திருப்பிக் கொடுத்திட்டேன்”, “ அவளைப் பத்தி புட்டுப்புட்டு வெச்சிட்டேன்!”, “என்ன ஆனாலும் இனி கிட்டக்கூட போக மாட்டேன்.”

‘பழிக்குப் பழி’ சினிமாவில்தான் உள்ளதா என்ன? நம் வீடுகளில் காணாத பழி உண்டா? ஆனால், அத்தனை மென்மையாக நாசூக்காகச் செய்கிறோம். எப்படிச் செய்தாலும் வன்முறை அருவருப்பானது... ஆபத்தானது. அது உடல் சார்ந்து இருந்தாலும் உள்ளம் சார்ந்து இருந்தாலும். வன்முறை கொண்ட மனம் தனக்குத் தெரிந்த ஆயுதத்தை எடுத்துக்கொள்கிறது. சிந்தனைக் கூர்மையும் சொல்திறனும் இல்லாதவன் ஓங்கி அறைகிறான். அவனுக்கு உடல் பலம்தான் ஆயுதம். புத்திசாலி அறிவால் செயல்படுகிறான்.

மொட்டைக்கடுதாசி, உள்குத்து அரசியல், போட்டுக்கொடுத்தல் எல்லாமே வன்முறைதான். நளினமான ஆங்கிலத்தில் வரும் அழகான மின்னஞ்சல்களில் இவற்றை நாம் அலுவல்களில் பார்த்ததது இல்லையா என்ன? ஒரு சொல்கூட சொல்லாமல் தீவிர வன்முறையை நிகழ்த்த முடியும். இன்றைய தகவல் சார்ந்த உலகில் ஒரு செய்தியைத் திரித்தும், மறைத்தும், காலம் தப்பியும் வெளியிடுவதிலும் வன்முறையை நிகழ்த்த முடியும்.

மனமே நீ மாறிவிடு - 10

அடிப்படையில் வன்முறையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அமைதிகொள்ள இயலாத மனம்தான் வன்முறையை நம்புகிறது. அமைதி இல்லாதது மட்டும் இன்றி அன்பும் குறையும்போது, அங்கு ஒரு பற்றாக்குறை உருவாகிறது. அலைபாயும் மனம் எதையாவது செய்து அமைதிகொள்ள நினைக்கிறது. கிளர்ச்சி அடைந்த மனம் வெளி உலகக் கிளர்ச்சியையும் கலகத்தையும் பெரிதுபடுத்திப் பார்க்கும். “என்கிட்டயே அப்படி நடந்தா நான் யார்னு காட்ட வேண்டாம்?” என்று அகந்தைகொள்ளும். பழிஉணர்ச்சி மூலம் கணக்கைச் சரிசெய்ய உளவியல் ஆட்டங்களில் ஈடுபடும். எண்ணத்தில் உள்ள குரோதமும் ஆக்கிரமிப்பு உணர்வும், சொல்லில் மற்றும் செயலில் வெளிப்படத்துவங்கும்.

பின், இது சங்கிலித்தொடராய் மனிதர்கள் இடையில், மக்கள்கூட்டங்கள் இடையில், தேசங்கள் இடையில் தொடரும். பின், இவை இறுகிப்போன எண்ணங்களாய் மாறும். இப்படி, குடும்பப் பகையால், சாதிச் சண்டையால், தேசங்களுக்கிடையே நடந்த போரால் பாதிக்கப்பட்டு வன்முறைக்கு இரையானவர்கள் எத்தனை எத்தனை பேர்?

வன்முறையின் விலை மிகமிக அதிகம். நம் வாழ்க்கையையே விழுங்கும் அளவு் கொடுமையானது. தூக்கத்தின் மதிப்பு உணர்ந்தவர்கள் தூக்கம் வராது தவிப்பவர்கள்தான். அதேபோல அமைதியின் மதிப்பை உணர்ந்தவர்கள் அமைதியை இழந்தவர்கள்தான். ஒரு முறை நீதிமன்றம், சிறைச்சாலை, மனநலக் காப்பகம், அநாதை ஆசிரமம், மருத்துவமனையால் பாதிக்கப்பட்டோரிடம் பேசிப்பாருங்கள். வன்முறையின் சேதாரங்கள் புரியும். வன்முறையைத் தவிர்க்க என்ன செய்யலாம்? முதலில், வன்முறை என்பது வெளியில் இல்லை. அது நம் மனங்களில் உள்ளது என்று புரிந்துகொள்ளுங்கள். வெளி உலகு உங்களை என்றும் வன்முறைக்குத் தள்ளாது. நீங்கள்தான் அதை வடிகட்டிப் பெற்றுக்கொள்கிறீர்கள் எனப் புரிந்துகொள்ளுங்கள். வன்முறை நிறைந்த படத்தையும், கதையையும், செய்திகளையும், சீரியல்களையும் விரும்பிப் பார்க்கக் கட்டாயப்படுத்துவது யார்?

பின்னால் வந்து இடித்த கார் டிரைவர் மீது பேய் கோபம் வருகிறது. அந்த காரை ஓட்டியது உங்கள் மகன் என்று தெரிந்தால், அந்தக் கோபம் மாயமாய் மறைகிறதே, எப்படி அது? மன்னித்தலும் மறத்தலும்தான் வன்முறையான மனதுக்கு சிகிச்சைகள். உங்களையும் மன்னியுங்கள். பிறரையும் மன்னியுங்கள். எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள். திருந்தக்கூடியவர்களும்கூட. உங்களைப் போலவே. அமைதிகொண்ட மனதில் அன்பு சுரக்கும். அன்பு தவறுகளைப் பார்க்காது. உறவுகளைப் பார்க்கும். தன்னையும் பிறரையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பிறரையும் அன்பு வழிக்கு மாற்ற முயற்சிக்கும்.

ஒரு புன்னகையும், அணைப்பும் சாதிக்காததை உங்கள் கடும் வார்த்தைகளும் செயல்களும் சாதிக்காது. மன்னித்தலும் மறத்தலும்தான் மனதை மாற்றும் மாமருந்துகள்!

- மாறுவோம்!