மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11

கொடைக்கானல் காட்டுப் பகுதியில் டிரக்கிங் செல்கிறீர்கள். இயற்கை அழைப்பாய் வயிறுமுட்ட, சிறுநீர் கழிக்க ஒதுங்குகிறீர்கள். அப்போது, திடீரென ஒரு யானை அல்லது காட்டுப்பன்றி எதிரே வருகிறது... ஒரு விநாடிக்கும் குறைவான நேரம்... முகத்துக்கு நேராக இருக்கிறது. அது என்னவென யோசிக்க முடியாத அந்த ஒரு சில விநாடியிலும்கூட அதை எதிர்கொள்ள உங்கள் உடல் தயாராகிவிடுகிறது. உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையான அதிகப்படியான ஆக்சிஜனை அது அளிக்கிறது. தானாகவே, அதை எதிர்த்துப் போராட அல்லது தப்பி ஓடத் தயாராகிறோம். அதற்கு முன்பு, ஏன் அந்தக் காட்டுப் பகுதியின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு வந்தோம் என்பதையே முற்றிலுமாக மறந்து ஓட்டம் பிடிப்போம். இவை அனைத்தும் எப்படி மிக விரைவாக, தன்னிச்சையாக நடக்கிறது? இவை அனைத்துக்கும் காரணம் நம் மூளையில் உள்ள தன்னிச்சை நரம்பு மண்டலம் (Autonomic nervous system (ANS))தான். இது மூளைத் தண்டில் உள்ள மெடுல்லா ஆப்ளங்கட்டா எனும் முகுளத்தில் அமைந்திருக்கிறது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11

எல்லோரும் காளிஃபிளவரைப் பார்த்திருப்போம். அதன் தண்டு போன்ற பகுதிதான் மூளைத்தண்டு எனப்படும் ப்ரெயின் ஸ்டெம். இதுவே, ஒரு கட்டை விரல் அளவுதான் இருக்கும். இதில் அமைந்திருப்பதுதான் நடுமூளை, பான்ஸ் மற்றும் மெடுல்லா ஆப்ளங்கட்டா. மிகச்சிறியது என்றாலும் உடலின் பல முக்கியச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. கிட்டத்தட்ட உடலில் நடக்கும் எந்த ஒரு செயல்பாடும் இதன் வழியாகப் பயணப்பட்டுத்தான் ஆக வேண்டும். மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்கு வராது. அதனால், மெடுல்லா இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மொத்தத்தில் நாம் விழித்திருக்கக் காரணமே மெடுல்லாதான். இதில் அடிபடும்போது, பாதிப்பு ஏற்படும்போது கோமா (விழிப்பு அற்ற நிலை) ஏற்படும்.

நம் இதயம் ஒரு கைப்பிடி அளவு இருக்கும் என்பது ஓரளவு பலருக்கும் தெரிந்திருக்கும். அதைவிட நம் நுரையீரல் பெரிதாக இருக்கும் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவை இடைவெளி இல்லாமல் இயங்குவதால்தான் நாம் வாழ்ந்துவருகிறோம். இவ்வளவு வேகத்தில் துடிக்கும், மிகத் துரிதமாகச் சுவாசிக்கும் இவ்வளவு பெரிய உறுப்புகளைக் கட்டுப்படுத்தும் மையம் எங்கே இருக்கிறது தெரியுமா? இவ்வளவு பெரிய உறுப்பையும் கட்டைவிரலைவிடவும் சிறிய உறுப்பு கட்டுப்படுத்துகிறது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11

நம் ஒவ்வொருவருக்கும் 12 ஜோடி கிரேனியல் நரம்புகள் (Cranial Nerves) உள்ளன. இமைகளைத் திறக்கவும், அதிகப்படியான வெளிச்சம் காரணமாகக் கண் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான நேரத்தில் இமைகள் மூடவும், வாசனையை உணரவும், நாக்கை அசைக்கவும் இந்த நரம்புகளின் செயல்பாடு மிகவும் அவசியம். இதில், முதல் மற்றும் இரண்டாவது ஜோடி நரம்பைத் தவிர்த்து, மற்ற அனைத்து நரம்புகளையும் கட்டுப்படுத்தும் மையம் மூளைத் தண்டுவடத்தில்தான் உள்ளது. பேசுகிறோம், சிரிக்கிறோம்... இவை எல்லாம் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், முகத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள் அனைத்தும் தன்னிச்சையாக நடைபெறக்கூடியவை. இதைக் கட்டுப்படுத்தும் மையம் மெடுல்லா. முக்கிய நரம்புகளை மூளைக்குக் கொண்டு செல்வது மட்டும் அல்ல, இதயத்துடிப்பு, சுவாசம் என நம் உடலில் நடக்கும் பல செயல்பாடுகளுக்கும் பொறுப்பு இந்த முகுளம்தான். உடலில் இருந்து வரும் தகவலை மூளைக்குக் கொண்டு செல்வதும், மூளை வெளியிடும் கட்டளையை முதுகுத்தண்டுவடத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும் இதன் முக்கியப் பணி.

- அலசுவோம்!

நம்மை அறியாமல்!

விமானங்களில் ஆட்டோ பைலட் என்று சொல்வார்கள். அதுவாக சுய முடிவு எடுத்து செயல்படும். அதுபோலத்தான் இதுவும், நம் உத்தரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்காது. அதற்குத் தேவையும் இல்லை. சுயமாக முடிவெடுத்து செயல்படக் கூடியதைத்தான் தன்னிச்சை நரம்பு மண்டலம் (ஏ.என்.எஸ்) என்கிறோம். இதயத்தின் செயல்பாடு, உடலின் ஆக்சிஜன் தேவையைப் பொருத்து நம் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன அல்லது குறுகுகின்றன, மூக்கில் ஏதேனும் தூசு நுழையும்போது தானாக தும்மல் வந்து அதை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்களைத் தெரிந்தோ, தெரியாமலோ உட்கொள்ளும்போது வாந்தி வருகிறது. இவை எல்லாம் எப்படி நிகழ்கின்றன என்று யோசித்திருக்கிறோமா? இவை எல்லாம் சரியான நேரத்தில், சரியான வேகத்தில் உடலுக்குத் தேவையான நேரத்தில் நடைபெற ஏ.என்.எஸ்தான் காரணம்.