Published:Updated:

என் கதை...

என் கதை...
பிரீமியம் ஸ்டோரி
News
என் கதை...

- கீதா பென்னெட்

என் கதை...

“கடவுள் இருக்கிறாரா? இருந்தால், 22 ஆண்டுகளாக ஏன் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்? ‘என்னை அழைத்துக்கொள்’ என்று பலமுறை மன்றாடியும், என்னை ஏன் இந்தப் பூவுலகில் வாழவைத்திருக்கிறார்? அவருக்கு இரக்கம் என்பதே இல்லையா?” என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நிறையக் கேள்விகளை எனக்குள்ளாகவே கேட்டு வந்திருக்கிறேன்.

என்னை ஏன் உயிரோடுவிட்டு வைத்திருக்கிறார் என்பதற்கான பதில், சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியவந்தது.

22 ஆண்டுகளுக்கு முன், நான் ஒரு ராணி மாதிரி இருந்தேன். மிக அன்பான கணவர். என்னிடம் உயிரையேவைத்திருக்கும் ஒரே பிள்ளை ஆனந்த் ராமசந்திரன். உலகமெங்கும் சென்று வீணைக் கச்சேரிகள் செய்தேன். ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஃப்யூஷன் குழு ஒன்று என்னைப் பாடவும் வீணை வாசிக்கவும் அழைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.

நியூயார்க்கில் கடைசி கச்சேரி முடிந்து வீட்டுக்கு வந்தது ஒரு செப்டம்பரில்! விதி, மார்பகக் கட்டியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. டாக்டர் ரோஸ் என்னைப் பரிசோதித்துவிட்டு, உடனடியாக ஒரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பிவைத்தார். அவர் ‘பயாப்சி’ செய்த இரண்டாவது நிமிடமே சோகமாகத் தலையை ஆட்டினார்.

மூன்றாவது ஸ்டேஜில் இருக்கும் மார்பகப் புற்றுநோய்!

முதலில் அறுவைசிகிச்சை, பின் கீமோ, ரேடியேஷன் என வரிசையாக நடந்தன. கீமோ முழுவதுமாக என் முடியை, இளமையைப் பறித்துக்கொண்டது. உடல் பலத்தை முழுவதுமாக இழந்தேன். அதனால், எனக்குள் கடவுளிடத்தில் ஒரு மனஸ்தாபம். ‘உனக்கு நான் செல்லக் குழந்தை என நினைத்திருந்தேனே! எப்போதும் அழகாக இருக்க விரும்பும் பெண்ணை ஏன் இப்படி அலங்கோலம் ஆக்கிவைத்திருக்கிறாய்?’ என்று கோபப்பட்டேன்.

புற்றுநோய்க்கு சிகிச்சைகள் நடந்தன. அதன் பிறகு, 10 வருட காலத்துக்கு மாத்திரைகள் கொடுத்து, அதை அடக்கி வைத்திருந்தார்கள். ஆண்டுக்கொரு முறை புற்றுநோய் நிபுணரைப் பார்த்து, ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். என்னுடைய துரதிர்ஷ்டம், ஓவரியில் புற்றுநோய் இருக்கிறதா என்று மட்டுமே டாக்டர் பரிசோதித்திருக்கிறார். அதில் எந்தப் பிரச்னையும் இல்லாததால், ‘நோ ப்ராப்ளம்’ என்று சொல்லிவந்தார். புற்றுநோய் வந்து 13 ஆண்டுகள் கழித்து, என் இடது காலில் சுளுக்கு மாதிரி இருந்தது. மறுநாள், இடது காலை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு, உடனடியாக எலும்பை ஸ்கேன் (Bone scan) செய்யச் சொன்னார் டாக்டர். ரிசல்ட்..? என் எலும்புகளில் புற்றுநோய் பரவியிருப்பது தெரிந்தது. ஆரம்பித்தது ஓரல் கீமோ சிகிச்சை.

இதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே, சென்னையில் என் ஃபிளாட்டில், இரவு தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தவள், சட்டென்று கீழே விழுந்தேன்.தோள்பட்டையில் முறிவு. சாதாரணமாக விழுந்ததற்கு, எலும்பு ஏன் உடைய வேண்டும்? என் புத்திக்கு அப்போது அது உறைக்கவே இல்லை. சீஸனில் கிடைத்த கச்சேரி வாய்ப்புகளை விட்டுவிட்டோமே என்ற கவலை மட்டும்தான் இருந்தது.

எலும்பில் பரவியிருக்கும் புற்றுநோய்க்காக தினமும் உட்கொண்ட கீமோ மாத்திரைகள், என்னைக் களைப்பில் தள்ளின. இரண்டடி எடுத்துவைத்தாலே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும். வீணைக் கச்சேரிகளுக்கு முன் பல மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி ஆனது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஜூலை மாதத்தில் ஒரு திங்கள் கிழமை காலை. எழுந்து காபி குடித்துவிட்டுப் புத்தகமும் கையுமாக உட்கார்ந்தவள், அரை மணி நேரம் கழித்து எழுந்தேன். தடாலெனக் கீழே விழுந்தேன். இடது காலை நகர்த்த முடியவில்லை. என்னுடைய கதறல் கேட்டு, மாடிக்கு ஓடி வந்த என் கணவர் பென்னெட், நான் இருந்த இருப்பைப் பார்த்து நிலைகுலைந்துவிட்டார்.

உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டார். அவர்கள் வந்து, என்னைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தபோது, நான் அழுத அழுகை அந்தப் பகுதி முழுதும் கேட்டிருக்கும். அப்படி ஒரு வலி!

வீட்டருகே இருந்த மருத்துவமனை எமர்ஜென்சியில் படுக்கவைத்தார்கள்; எக்ஸ்ரே எடுத்தார்கள்.  டாக்டர் ஹேன்ஸ் வந்து என்னைப் பரிசோதித்துவிட்டு, `இடது தொடையில் எலும்பு முறிந்துள்ளது; தகடுவைக்க வேண்டும்’ என்றார். இரண்டு நாட்களில் டைட்டானியம் தகடு, ஸ்க்ரூக்கள் வைக்கப்பட்டு, வீட்டுக்கு வந்தேன்.

இரண்டு வாரங்கள் போயின. ஒரு சனிக்கிழமை, என் தொடையில் சொல்லொணா வலி. ஸ்க்ரூ லூஸ் என்பார்களே... அது மாதிரி இருந்தது. மீண்டும் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். ‘டைட்டேனியம் என்பது விமானங்கள் தயாரிப்பதற்கு உபயோகமாகிற உலோகம். அதில்தான் தகடு செய்து, உன் காலில் வைக்கப்பட்டிருக்கிறது. அது இப்படி உடையும் என்பது என் இத்தனை வருட அனுபவத்தில் தெரியாத ஒன்று’ என்று சொல்லி, வேறொரு தகடு பொருத்தினார் டாக்டர்.

மறுபடி இரண்டு வாரங்கள் போயின. சோஃபாவில் அமர்ந்து என் குடும்பத்தினரோடு டி.வி பார்த்துக்கொண்டிருந்தவள், டின்னர் செய்வதற்காக எழுந்தேன். இரண்டடிகூட எடுத்துவைக்கவில்லை. சட்டென்று கீழே விழுந்தேன். மறுபடி ஆம்புலன்ஸ்; ஆஸ்பத்திரி. இந்த முறை தகடு, ஸ்க்ரூக்கள் இவற்றோடு எலும்பும் முழுவதுமாக நொறுங்கிப்போயுள்ளது என்றார் டாக்டர் ஹேன்ஸ். அதீத வலியுடன் இருந்த என்னைப் படுக்கவைத்து, இடது காலை அசைக்கவே கூடாது என்று கட்டளையிட்டார். நான் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்தேன்.

ஆஸ்துமா என்று சொல்லி, அதற்கும் வைத்தியம் நடந்தது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நர்ஸ் வந்து, அவள் கடமைக்கு ஏதாவது செய்துவிட்டுப் போவாள். எனக்கோ தாங்க முடியாத கால் வலி. இதற்கு என்னதான் முடிவு?

12 நாட்களுக்குப் பிறகு, டாக்டர் ஹேன்ஸ் இன்னும் பல ஸ்பெஷலிஸ்ட்டுகளுடன் பேசி, ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி, என் இடுப்பிலிருந்து கொஞ்சம் எலும்பு, ஃப்ரீஸரில் பாதுகாப்பாகவைக்கப்பட்டிருக்கும் இறந்த ஒரு நபரின் எலும்பு... இந்த இரண்டையும் வைத்து டைட்டானியம் ப்ளேட் மற்றும் ஸ்க்ரூக்கள் மூலம் உடைந்த என் எலும்புடன் கட்டினார்.

என் கதை...

வீட்டுக்கு வந்ததும், கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கொண்டபோது எலும்புக்கூடு மாதிரி இருந்தேன். சக்கர நாற்காலியில்தான் அங்கே, இங்கே நகர முடிந்தது. ‘சிட்டி ஆஃப் ஹோப்’ என்ற புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனையில், மார்ட்டிமர் என்ற டாக்டரைப் பார்த்தேன். கீமோ நிறுத்தி ஆறு மாத காலம் ஆகியிருந்ததால் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றார்கள். அதன் ரிசல்ட் வந்தபோது, இன்னொரு பெரிய இடி!

எலும்புகள் மட்டும் அல்லாமல், உணவுக் குழாய் மற்றும் நுரையீரல் அருகே இருக்கும் லிம்ப் நோடுகளுக்கும் புற்றுநோய் பரவியிருந்தது. முதலில், உணவுக்குழாயில் இருக்கும் புற்றுநோய் சுரண்டி எடுக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்கு தினசரி ரேடியேஷன். ஆக்சிஜன் டாங்க் மூலமே சுவாசித்தேன். அடுத்து, கீமோ தெரப்பி. ஐவி-யில் ஏற்றி மூன்று மாதங்கள் தொடர்ந்து கொடுத்துவிட்டு, மறுபடி ஸ்கேன் செய்தார்கள். இப்போது இன்னும் ஓர் இடி!

கீமோ வேலை செய்யவில்லை. எனவே, மிகவும் வீரியமான இன்னொரு கீமோவைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்கள். அதன்பின், உடல் கலகலத்துப் போக, ஒரு வாரம் விட்டுவிடுவார்கள். மறுபடி மூன்று வார கீமோ சிகிச்சை. இது மாதிரி, எட்டு மாதங்களில் 35 கீமோ அளிக்கப்பட்டது.

நைந்துபோன துணி மாதிரி ஆகிவிடும் உடல். கொஞ்சம்கூடத் திராணி இருக்காது. சாப்பிட அறவே பிடிக்காது. நாக்கில் ஒரு கசப்பு எப்போதும் இருக்கும். அத்தோடு துக்கம்... அழுகை. நாளாக நாளாக, இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. வெறுப்புடனும் விரக்தியு டனும்தான் வாழ்க்கையை நகர்த்தினேன்.

என் மகன் ஆனந்த் பென்னெட்தான் என்னைத் தேற்றி, ஆறுதல்படுத்தினான். ‘அம்மா, கடவுளை நம்பு. அவர் உன்னைக் காப்பாற்றுவார். நான் உனக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறேன்’ என்பான். தினமும் மதியம் எனக்கு சூப் தயாரித்துக் கொடுத்துக் குடிக்கவைப்பான். தனக்கு வந்த கச்சேரிகளைக்கூடத் தவிர்த்துவிட்டு, 24 மணி நேரமும் என்னுடனே இருந்து, எனக்கு ஆதரவு தந்தவன் என் மகன் ஆனந்த்.

எட்டு மாதங்கள் ஓடின. கால் எலும்பு சரியானது; மாடிப்படி ஏறி இறங்கக்கூட என்னால் முடிந்தது. வீணை வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். பாட்டு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். இந்த ஆண்டு, மார்ச் மாதம் ஸ்கேன் எடுத்தார்கள். ஹூர்ரே! கடவுள் கண் திறந்துவிட்டார். என் மகனின் பிரார்த்தனைகளைக் காதுகொடுத்துக் கேட்டுவிட்டார். புற்றுநோய் பூதம் ஒழிந்துவிட்டது. இனி, கீமோ தேவை இல்லை என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.

நான் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமல் இருந்த அத்தனை மாதங்களிலும், என்னுடைய மாணவ-மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் தினந்தோறும் எனக்காகச் சாப்பாடு செய்து எடுத்து வருவார்கள். என் மகன், கணவர், என் மாணவர்கள், சென்னையில் இருக்கும் என் குடும்பத்தினர் மற்றும் உலகமெங்கும் இருக்கும் என்னுடைய சினேகிதக் குடும்பங்கள் விடாமல் செய்த பிரார்த்தனைகளால் மட்டுமே இந்த அதிசயம் நடந்திருக்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன். எனக்குப் பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரும் இறந்துவிட்டார்கள் என்று கேள்விப்படும்போதெல்லாம் திடுக் திடுக்கென மனசு அதிரும். ‘என்னை மட்டும் ஆண்டவன் ஏன் விட்டுவைத்திருக்கிறான்?’ என்ற கேள்வி பிறக்கும். அதற்கும் சமீபத்தில் பதில் கிடைத்தது.

என் மாணவி இந்து னிவாஸனும், மாணவர் மதுகர் சிதம்பராவும் திடீரென ஒரு நாள், ‘உங்கள் அப்பாவிடம் கற்ற அத்தனை பாட்டுக்களையும் எல்லோருக்கும் சொல்லிக்கொடுத்து விட்டுத்தான் நீங்கள் இந்த உலகத்தைவிட்டுப் போக முடியும்’ என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். ஆனால், அது எனக்கு வேத வாக்காகப்பட்டது.

2016, ஏப்ரல் 8-ம் தேதி என் தந்தை, குரு டாக்டர் எஸ்.ராமனாதன் அவர்களின் 100-வது பிறந்த நாள். அப்பா எனக்குச் சொல்லிக்கொடுத்த அத்தனைப் பாடல்களையும் வீடியோ மூலம் உலகமெங்கும் விருப்பப்படுபவர்களுக்கு வீணை மற்றும் பாட்டாகச் சொல்லிக்கொடுக்கத் தீர்மானித்தேன். அவருடைய 99-ம் ஆண்டில், யூ-டியூபில் வீடியோ அப்லோட் செய்யத் தொடங்கினேன். பாட்டு, வீணை வாசிப்பவர்கள் கற்கும் விதத்தில் வீணையில் முழுதுமாக வாசித்து ஒரு வீடியோ; பின்பு அதையே சாஹித்யம், ஸ்வரத்தை பாட்டாகப் பாடி ஒரு வீடியோ.

என் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த இசையை வருகிற தலைமுறைகளுக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் ஆண்டவன் என்னை இந்தப் பூவுலகில் விட்டுவைத்திருக்கிறான் போலும்!

ஆண்டவன் உத்தரவைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.