
ஹைஜீன் அவசியம்!

நாம் சில விஷயங்களை நமக்குத் தெரியாமலேயே தவறாகக் கடைப்பிடிப்பது உண்டு. சுகாதாரம் என்பது வெளியில் இருந்து வருவது இல்லை. நாம் உருவாக்குவது. நாம் செய்யும் சின்னச்சின்னத் தவறுகள் மற்றும் அலட்சியங்கள் மிகப்பெரிய அளவில் சுகாதாரமற்ற சூழலுக்குக் காரணமாகின்றன. நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் எப்படி நமக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தால், இவற்றைச் செய்யத் தயங்குவோம். எந்தெந்த விஷயங்களில் நாம் தவறு செய்கிறோம்?
ஃப்ரெஷ் காய்கறி, பழங்களையும்கூட நம் பழக்கம் காரணமாகக் கிருமிகள் நிறைந்ததாக மாற்றிவிடுகிறோம். கடையில் காய்கறிகள் வாங்கும்போது, அதைப் பரிசோதனை செய்கிறேன் எனக் கையில் எடுத்து சோதனை செய்வார்கள். சிலர், டீக்கடையில் பஜ்ஜி, வடை சூடாக இருக்கிறதா என்று தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள். பலர் இப்படிக் கைகளில் எடுப்பதால், இவற்றில் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் உணவுப் பொருளின் சுகாதாரத்தைக் காக்கலாம்.

ஹோட்டலில் உணவு உட்கொண்ட பிறகு, கடைசியில் இனிப்பு சோம்பு கொண்டுவந்து வைப்பது வழக்கம். அதில்தான் அதிகக் கிருமிகள் இருக்கும். இதை, டீஸ்பூன் பயன்படுத்தி எடுக்க வேண்டும். நேராகக் கையை வைத்து எடுக்கும்போது, கிருமிகள் அந்த சோம்பில் ஒட்டிக்கொண்டுவிடும். பிறகு, மீண்டும் இன்னொரு நபர் சோம்பில் கை வைக்கும்போது கிருமி அவருக்குப் பரவும். இப்படித் தனி டீஸ்பூன் இல்லாத ரெஃப்ரெஷ்னர்களைத் தவிர்ப்பது நல்லது. ஹோட்டல்களும் சோம்பு, கல்கண்டு போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் வைக்காமல், தனித்தனியாக பாக்கெட்டில் வைத்துத்தருவது நல்லது.

குப்பைதொட்டிகளைப் பயன்படுத்துவதில் எப்போதுமே கவனம் தேவை. குப்பைத்தொட்டி நிறைந்ததும், கொண்டு சென்று கொட்டுவோமே தவிர, அதைக் கழுவுவது இல்லை. குப்பையை, சமையல் குப்பை, எலெக்ட்ரானிக்ஸ் குப்பை எனப் பிரிக்கலாம். எலெக்ட்ரானிக் கழிவில் பல்வேறு ரசாயனங்களும், சமையல் குப்பையில் கிருமிகளும் இருக்கும். எனவே, குப்பையைக் கொட்டிய பிறகு, தொட்டியைக் கிருமிநாசினி பயன்படுத்தி கழுவி, வெயில் காயவைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும். அதேபோல கையையும் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையையே செய்ய வேண்டும்.

தினமும் பலருக்கு நாம் கைகுலுக்க நேரிடும் வாய்ப்பு இருக்கிறது. நமது கைகள் சுத்தமாக இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட இரு நபர்களில் ஒருவருக்குக் கையில் கிருமிகள் இருந்தாலும், இன்னொருவருக்குப் பரவிவிடும். எனவே, ஒவ்வொரு முறை கைகொடுப்பதற்கு முன்பும் பின்பும் கைகளைச் சுத்தம் செய்துகொள்வது நல்லது. இதற்காகவே ஹேண்ட் சானிடைசர்கள் கிடைக்கின்றன. இதனால், கைகுலுக்கிவிட்டு கை கழுவுவது மற்றவர்களுக்குத் தவறாகப்படும் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அலுவலகம், ஹோட்டல்கள் ஆகியவற்றில் கழிப்பறையைப் பயன்படுத்தும் பலரும், கைகளைக் கழுவிவிட்டு, துடைக்காமல் அப்படியே கதவைத் திறப்பது உண்டு. கழிப்பறையில் ஏற்கெனவே கிருமிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதுவும், ஈரப்பதம் மிகுந்த சூழலில் கிருமிகள் வேகமாகப் பெருக்கம் அடையும். இதைத் தவிர்க்க, எங்கே கை கழுவினாலும் கைகளைச் சுத்தமாக ஒரு பிரத்யேகத் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் மூலம் சுத்தம் செய்வது, கையை உலர்வாக வைத்திருப்பது நல்லது. கைகள் உலர்ந்த பிறகுதான் கதவுகளைத் தொட வேண்டும்.
- பு.விவேக் ஆனந்த்