
பிணி போக்கும் வில்வம்

சிவாலயங்களில் மிக முக்கிய விருட்சம் வில்வம். இந்தியாவில் அதிக அளவில் இருந்த இந்த மரம், தற்போது குறைந்துவிட்டது. வில்வத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, வேர், பிசின் அனைத்துமே மருத்துவப் பலன் கொண்டவை. சிவத்துருமம், மாலூரம், கூவிளம், குசாபி, நின்மலி என வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிறது.
வில்வ இலை, வியர்வையைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. வெப்பமகற்றி மற்றும் காமப்பெருக்கி என வேறு சில பண்புகளும் கொண்டதாக, சித்த மருத்துவம் தெரிவிக்கிறது.
உடலில் இருந்து வியர்வை சரியாக வெளியேறவில்லை எனில், வில்வ இலையைக் கஷாயமாகக் காய்ச்சி தினமும் அருந்திவந்தால், வியர்வை நன்றாக வெளியேறும். காய்ச்சல் நீங்கும்.
வில்வ இலையை ஒரு பங்கு எடுத்துக்கொண்டு, அதனுடன் நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, நான்கில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி, அதை 50 -100 மி.லி அருந்த, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, மேகவாயு, காய்ச்சல் குணமாகும்.
வில்வ இலைச்சாறு எடுத்து சிறிது மிளகுப்பொடி சேர்த்து உட்கொள்ள, உடலில் ஏற்படும் நீர் கோத்த வீக்கம், காமாலை குணமாகும்.

இதன் இலையை மையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவுக்கு எடுத்துச் சாப்பிட்ட பின், குளிர்ந்த நீரில் குளித்துவர வேண்டும். இதை 7-10 நாட்களுக்குத் தொடர்ந்து செய்துவர மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு சரியாகும்.
நிறையப் பேர் வாய்வுப் பதார்த்தங்களை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, அதனால் குடல் பலவீனப்பட்டு வயிற்றுப்பொருமல், வயிறுஉளைச்சல், உப்புசம், மலக்கட்டால் அவதிப்படுவார்கள். இவர்கள், காலையும் மாலையும் வில்வ இலைச்சாற்றைப் புதிதாகத் தயார் செய்து, 30 - 50 மி.லி அளவுக்குக் குடித்துவர, குடல் வாத ரோக நோய்க்கு குணம் கிடைக்கும்.
நிறையப் பேர் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, உடல் துர்நாற்றம். வில்வ இலையைச் சாறு எடுத்து உடலில் பூசிக் குளித்துவந்தால், துர்நாற்றம் நீங்கும்.
வில்வ இளந்தளிரை நெருப்பில் வாட்டி, துணியில் முடித்துவைத்துக்கொள்ள வேண்டும். கண் சிவந்து காணப்படுபவர்கள், துணியில் முடித்த வில்வந்தளிரை வைத்துக் கண்களை மூடி ஒத்தடம் கொடுக்க, பிரச்னை சரியாகும்.
- பு.விவேக் ஆனந்த்
படங்கள்: தே.தீட்ஷித்
வில்வம் பழத்தை ஓடு நீக்கி, பழத்தைத் தீயில் சுட்ட பின், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வில்வத் தேநீராகப் பருகலாம்.