Published:Updated:

உயிர் காப்போம்!

உயிர் காப்போம்!
News
உயிர் காப்போம்!

உலக ரத்த கொடையாளிகள் தினம் - ஜூன் 14

உயிர் காப்போம்!

சாலையில் ஓரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது... சில நாட்களுக்கு முன்பு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ரத்ததானம் செய்தது நீங்கள்தான் என்றால், எப்படி உணர்வீர்கள்... நினைக்கும்போதே பெருமிதமாக இருக்கும்தானே. உயிரைக் காப்பாற்றும் ரத்ததானம் என்று நாம் பேசுகிறோம்... உண்மையில் அது நம்மை மற்றவர்களுடன் இணைக்கிறது. இந்த இணைப்பைப் புரிந்துகொண்டாலே போதும் அதிக அளவில் ரத்ததானம் செய்ய மக்கள் முன் வருவார்கள். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ரத்ததானம் செய்தாலே போதும்... அந்த நாட்டின் ரத்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

மக்கள் ரத்ததானம் செய்ய முன்வராததற்குக் காரணம், போதிய விழிப்புஉணர்வு இன்மையும், தானம் பற்றிய தெளிவின்மையும்தான். ரத்ததானம் செய்வது குறித்துத் தேவையற்ற பயமும் குழப்பமும் இருக்கின்றன. ரத்ததானம் பற்றி உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பதை அறிவதற்கான சிறிய பரிசோதனை இங்கே...

1. எவ்வளவு கால இடைவெளியில் ஒருவர் ரத்ததானம் செய்யலாம்?

அ) ஆண்டுக்கு ஒரு முறை
ஆ) மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை
இ) ஆறு வாரங்களுக்கு ஒரு முறை
ஈ) மூன்று - நான்கு மாதங்களுக்கு ஒரு முறை

2.  ஒரு முறை ரத்ததானம் செய்தால், எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும்?


அ) 200 - 250  மி.லி
ஆ) 1 - 1.5 லிட்டர்
இ) 600 - 750 மி.லி
ஈ) 400 - 450  மி.லி

3. எந்த வயதிலும் ஒருவர் ரத்த தானம் செய்யலாமா?

அ) செய்யலாம்
ஆ) கூடாது

உயிர் காப்போம்!

4. ரத்ததானம் செய்வதற்கு முந்தைய உணவு வேளையில்  என்ன சாப்பிட வேண்டும்?

அ) வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்
ஆ) அளவாக, வழக்கமான உணவைச் சாப்பிடலாம்
இ) திரவ வகையிலான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
ஈ) எதையுமே சாப்பிடக் கூடாது

5. ரத்ததானம் செய்யும்போது குத்தப்படும் ஊசியால் வலி அதிகமாக இருக்குமா?

அ) ஆம்
ஆ) இல்லை

6. யார் அதிக அளவில்  ரத்ததானம் செய்கிறார்கள்?

அ) தன்னார்வலர்கள்
ஆ) பணம் பெற்றுக்கொண்டு ரத்த தானம் செய்பவர்கள்

7. ரத்ததானம் செய்த பின், மீண்டும் அதே அளவுக்கு ரத்தம் உடலுக்குள் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும்?


அ) 6 மணி நேரம்
ஆ) 36 மணி நேரம் 
இ) மூன்று நாட்கள்
ஈ) இரண்டு மாதங்கள்

8) ரத்ததானம் செய்வதால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அ) ஆம்
ஆ) இல்லை

சரியான விடை

8. ஆ
7. ஆ
6. அ
5. ஆ
4. ஆ, இ
3. ஆ
2. ஈ
1. ஈ

ரத்ததானம்... சில குறிப்புகள்!

உயிர் காப்போம்!

பொதுவாக, 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம் பெறப்படுகிறது. இருப்பினும், சில நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதி உண்டு.

ரத்ததானம் செய்பவரின் நலனும் மிக முக்கியம் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. ரத்ததானம் பெறும் பை (கவர்) மற்றும் ஊசி தொற்று நீக்கப்பட்டடு (Sterilized) மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. எனவே, தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. பயப்படத் தேவை இல்லை.

பதின் வயதைத் தாண்டிய அனைவருக்கும் சராசரியாக 4-5 லிட்டர் ரத்தம் உடலில் இருக்கிறது. இதில், சராசரியாக 10 சதவிகிதம் அளவில்தான் ரத்தம் எடுக்கப்படுகிறது. பொதுவாக, உலகம் முழுவதும் ஒரு யூனிட் ரத்தம் (450 மி.லி) எடுக்கப்படும்.

ஆரோக்கியமான ஒருவர், ஒவ்வொரு மூன்று - நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்தம் மற்றும் அதில் இருந்து எடுக்கப்படும் உப பொருட்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பாதுக்காப்பாக வைத்திருக்க முடியும். எனவே, ரத்தத்தின் தேவை எப்போதுமே அதிகம்.

ரத்ததானம் செய்பவர்கள் அதற்கு முந்தைய ஆறு மணி நேரத்தில் மிகவும் அதிகமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. மிதமான அளவுகளில் சாப்பிடுவதே சிறந்தது. நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உணவுக்குப் பதிலாக ஜூஸும் குடிக்கலாம்.

ரத்ததானம் செய்யும்போது செலுத்தப்படும் ஊசியால் வலி அதிகம் இருக்காது. முள் குத்திய உணர்வுதான் இருக்கும். அரை மணி நேரத்தில் அந்த வலியும் சரியாகிவிடும்.

ஒரு முறை ரத்ததானம் செய்வதால், உங்களால் நான்கு உயிர்கள் வரை காப்பாற்றப்படுகிறது. மேலும், இது உங்கள் உடலுக்கும் நல்லது. புது ரத்தம் உடலுக்குள் உருவாவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

- பு.விவேக் ஆனந்த்