Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 10

அலர்ஜியை அறிவோம் - 10
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 10

தோல் அழற்சி நோய்

அலர்ஜியை அறிவோம் - 10

டலில் ஏற்படும் அலர்ஜியால் பெரிதும் பாதிக்கப்படும், மூக்கு, நுரையீரலுக்கு அடுத்தபடி, அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். தோலில் ஏற்படும் அலர்ஜியின் பாதிப்பு குழந்தை பிறந்த சில தினங்களிலோ, சில மாதங்களிலோ தெரிந்துவிடும். இந்தப் பாதிப்புகளில்  ‘எக்ஸீமா’ அல்லது கரப்பான் (Eczema / Atopic Dermatitis) எனப்படும் ‘தோல் அழற்சி நோய்’ முதன்மையானது.

அலர்ஜியை அறிவோம் - 10

அறிகுறிகள்

குழந்தையின் மென்மையான தோல், உலர்ந்து தடித்து, சொரசொரப்பாகிவிடும். அந்தப் பகுதி கறுஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பிறகு, தோலில் வட்டவடிவிலான மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகையான அரிப்பு, எரிச்சல், சூடான உணர்வுடன், சிறிய கொப்பளங்களும் வரும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். சிலருக்கு, சூரிய ஒளி பட்டதும் அந்த இடம் கறுத்துப்போகும். இன்னும் சிலருக்கு அந்தப் பகுதியின் தோல் தன் நிறத்தை இழந்து வெள்ளையாகக் காணப்படும்.

குழந்தைகளுக்கு, கன்னம், கழுத்து, உச்சந்தலை, மணிக்கட்டு, தொடை இடுக்கு, கணுக்காலில் தோல் அழற்சி கடுமையாகப் பாதிக்கும். பெரியவர்களுக்கு, கழுத்தின் பின்பகுதி, முழங்கால் மூட்டின் பின்பகுதி, முழங்கை மடியும் பகுதிகளில் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படும்.

குழந்தைப்பருவத்தில் ஆரம்பிக்கும் இந்தப் பாதிப்பு சிலருக்குப் பெரியவர்களான பிறகும் தொடரும். இன்னும் சிலருக்குக் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் இந்த அறிகுறிகள் தோன்றுவதும், அடுத்த பருவத்தில் இருந்த இடம் தெரியாமல் துப்புரவாக மறைந்துவிடுவதும் உண்டு.

அலர்ஜியை அறிவோம் - 10

காரணம் என்ன?

மரபியல்ரீதியாக வருதவற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகிய அலர்ஜி பாதிப்புகள் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பாதிப்பும் சேர்ந்துகொள்வது உண்டு. தலையில் பொடுகு அதிகமாக உள்ளவர்களுக்கு இது நிரந்தரத் தொல்லை கொடுக்கும். குளியல் சோப்பு, சலவை சோப்பு, ஷாம்பு, குளியலறையைச் சுத்தப்படுத்தும் பிளீச்சிங் பவுடர் போன்ற ரசாயனங்கள் இந்த நோயைத் தூண்டும் முக்கியக் காரணிகள்.

தோல் அழற்சி நோய்க்கு உணவால் உண்டாகும் அலர்ஜியும் முக்கியமான காரணம்தான். அலர்ஜி ஆகும் உணவுகளில் முதல் இடத்தில் இருப்பது பாலில் உள்ள புரதம்தான். பசும்பால், சந்தையில் கிடைக்கும் மற்ற பாலைக் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிக அளவில் தொல்லை கொடுப்பது இதனால்தான். இதுபோல், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், மீன், கோதுமை, கடலை, நட்ஸ், முட்டை, இறைச்சி போன்றவையும் அலர்ஜியாகும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

மாசடைந்த காற்றில் கலந்து வரும் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்கள், பூக்களின் மகரந்தங்கள், புல், பூண்டு, வளர்ப்புப் பிராணிகளின் ரோமம், இறகுகள், மலக்கழிவுகள் போன்றவையும் தோல் அழற்சி நோயை வரவேற்கும். படுக்கை விரிப்புகளில் டஸ்ட் மைட் (Dust Mite) என்னும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வாழ்கின்றன. இவற்றின் கழிவில் ‘புரேட்டியேஸ்’ எனும் புரதம் இருக்கிறது. இதுவும் தோல் அழற்சி நோய்க்குக் காரணமாகும்.

சிலருக்கு, வெயிலும் குளிரும்கூட இதே பாதிப்பை உண்டாக்குகிறது. வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் அலர்ஜியாகி தோலில் அழற்சியை உண்டாக்குகின்றன. குளிர் காலத்தில் பனிக்காற்று பட்டு தோல் வறண்டு அழற்சி ஆகிறது. பெண்களுக்குக் கர்ப்பத்தின்போதும், மாதவிலக்கு காலத்திலும் இந்தப் பாதிப்பு கடுமையாக இருக்கும்.

அலர்ஜியை அறிவோம் - 10

என்ன பரிசோதனை?

தோலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே இந்த நோயை எளிதில் கணித்துவிடலாம். மேலும், முன்னோர்களுக்கு ஒவ்வாமை இருப்பது மற்றும் உணவுகளால் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றைக் கொண்டும் இந்த நோயைக் கணிக்க முடியும். என்றாலும், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனைகளை மேற்கொண்டு, உடலில் வேறு ஏதேனும் தூண்டும் பாதிப்புகள் உள்ளனவா என்று அறிய வேண்டும். இதைத் தொடர்ந்து அலர்ஜியை அறிய உதவும் தோல் பட்டைப் பரிசோதனை (Patch Test)  மற்றும் தோல் குத்தல் பரிசோதனைகள் (Skin Prick Test) செய்யப்படும். காரணம் தெரிந்ததும் அதற்கேற்ப சிகிச்சை தரப்படும்.

என்ன சிகிச்சை?

தோல் அரிப்பைக் குறைக்க ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளும் தோலின் அழற்சியைக் குறைக்க கால்சிநீயூரின் தடுப்பான் களிம்புகள் (Calcineurin Inhibitors), ஸ்டீராய்டு மருந்து மற்றும் மாத்திரைகளும் தரப்படும். லேசான பாதிப்புகளுக்கு மாய்ச்சரைசர் கிரீம் தடவிவந்தாலே, சரியாகிவிடும். தோல் பாதிப்பு தீவிரமாக இருந்தால், சில நாட்களுக்கு உள்ளுக்குச் சாப்பிடக்கூடிய அலர்ஜி மருந்துகள் தரப்படும். சிலருக்குத் தோல் அழற்சி உள்ள இடங்கள் சொறிந்து சொறிந்து புண்ணாகிவிடும். அப்போது, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சில வாரங்களுக்குத் தேவைப்படும். அலர்ஜி பாதிப்புக்கு வாய்ப்பு உள்ள குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் புரோபயாட்டிக் மருந்தைக் கொடுத்துவந்தால், தோல் அழற்சி நோய் வருவது தடுக்கப்படும் என்று சமீபத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த மாத்திரைகள் எல்லாவற்றையும் மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது மிக முக்கியம். அப்போதுதான், தோல் அழற்சி நோய் மீண்டும் வராது.

- எதிர்வினை தொடரும்

தோல் அலர்ஜியைத் தடுக்க 10 வழிகள்

1.அலர்ஜி எதனால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்து, அதை ஒதுக்க வேண்டும்.

2.குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம்.

3.தாய்ப்பால் போதவில்லை எனில், சோயா பால் தரலாம்.

4.அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு நான்கு மாதம் முடிந்ததுமே திட உணவுகளை அறிமுகப்படுத்திவிட வேண்டும்.

5.அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள் போன்ற உணவுகளையும், படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும்.

6.கடலை கலந்த சத்துமாவு பல குழந்தைகளுக்கு அலர்ஜி ஆகிறது. இதைத் தவிர்ப்பது நல்லது.

7.குளியலுக்கு தோலுக்கு இதமான சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.

8.இளஞ்சூடான நீரில் குளிக்கவைத்த பின் தோலில் நீர்ச்சத்தை நீட்டிக்க உதவும் மாய்ச்சரைசர் க்ரீமை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.

9.பருத்தித் துணிகளை மட்டும் உபயோகிக்க வேண்டும்.

10.குழந்தைகளுக்கு இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

‘தோல் தொடு அழற்சி நோய்’

அலர்ஜியை அறிவோம் - 10

தோல் அழற்சி நோய் பல வகைப்படும். அவற்றில், தோல் தொடு அழற்சி நோய் (Contact Eczema) முக்கியமானது. சில ஒவ்வாமைப் பொருட்கள் தோலில் பட்டதும் அந்த இடத்தில் உள்ள தோல் சிவந்துவிடும். அரிப்பு ஏற்படும். கொப்பளம் உண்டாகும். முக்கியமாக, குளியல் சோப், சலவை சோப், குளியலறையைச் சுத்தப்படுத்தும் பலவித ரசாயனங்கள் அலர்ஜியாகும்போது இந்த நிலை ஏற்படுகிறது. தலைமுடிச் சாயம், ரப்பர், கைக்கடிகாரப் பட்டை, தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நிக்கல் கலந்த உலோக நகைகள் மற்றும் அணிகலன்கள், அழகு சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், தோலில் பூசப்படும் மருந்துகளில் உள்ள சில ரசாயனங்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவையும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றில் எது அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதைத் தவிர்த்தால், இந்தப் பாதிப்பு மீண்டும் வராது.