Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 11

மனமே நீ மாறிவிடு - 11
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 11

மனமே நீ மாறிவிடு - 11

மனமே நீ மாறிவிடு - 11

ச்சமும் கோபமும் நம் ஆதாரக் குணங்கள். அதனால்தான் யாரையும் எளிதில் அச்சப்படவோ, கோபப்படவோ வைத்துவிட முடியும். திடுக்கிடும் செய்திகளால் நிச்சயம் அச்சம் அல்லது கோபம் வரும்.  உங்கள் கவனம் அதில் திரும்பும். இந்த சூட்சமத்தை வைத்துக்கொண்டுதான் செய்தி ஊடகங்கள் அனைத்தும் பகீர் பகீர் என்று “ஆ” என்று உங்களைச் சொல்லவைக்கும் செய்திகளாகப் பார்க்கவைத்து, படிக்கவைத்து அவர்கள் வணிக நோக்கில் வெற்றி கொள்கிறார்கள்.

‘உங்கள் குழந்தை தன் சிறுநீரில் விளையாடினால், கிருமிகள் தொற்றும்’ என்றால், உடனே அவர்கள் சொல்லும் பொருளை வாங்கத் தயாராகிறோம். ‘உங்கள் பிள்ளை சரியாகச் சாப்பிடுவதில்லையா?... அது ஆரோக்கியத்தை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?’ என்று ஒரு விளம்பரதாரர் அலறினால், அவர்கள் சொல்லும் பொருள் நிச்சயம் விற்கும். எந்த தாய் தன் குழந்தை சரியாகச் சாப்பிடுவதாக ஒப்புக்கொள்வார்? ‘உங்கள் உணவில் உள்ள சத்துக்கள் போதவே போதாது’ என்று சொல்லும்போது, ஒவ்வொரு தாயும் தாழ்வுமனப்பான்மையுடன் பயத்துடன் அந்த செய்தியை நம்பத் துவங்குகிறாள். இது ஓர் உளவியல் உத்தி. இவற்றில் உண்மை இருப்பதைவிட அச்சப்படும் பொழுது இவை ‘அந்த நேரத்து நிஜங்களாக’ மாறிவிடுகின்றன.

‘உங்களின் நிறம் கறுப்பா? சிவப்பழகு வேண்டாமா?’, ‘உங்கள் பிள்ளை ஆங்கிலம் பேசத் தயங்கு கிறானா?’, ‘உங்கள் எடை உங்களுக்குப் பிரச்னையா?’, ‘உங்கள் உணவில் எல்லா சத்துக்களும் சரிவிகிதம் உள்ளனவா?’, ‘உங்கள் முடி உதிர்கிறதா?’ இப்படி எதைக் கேட்டாலும் முதலில் உங்களைத் தாக்குவது அச்சம்தான். தர்க்கரீதியாக யோசித்து உண்மை அறிதல் சாத்தியமே இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.

கறுப்புத் தோல்தான் ஆரோக்கியத்தின் அறிகுறி. தவிர எந்த பசை தடவியும் இது வரை யாரும் நிறம் மாறியது இல்லை.

ஆங்கிலம், அறிவு அல்ல. ஒரு மொழி. உலகில் பல நாடுகளில் ஆங்கிலமே கிடையாது. தவிர, முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் கற்கலாம்.

மனமே நீ மாறிவிடு - 11

எடைக்குறைப்பு அவசியம்தான். ஆனால், இந்த விளம்பரங்கள் சொல்லும் திடீர் குறைப்பு வழிமுறை இல்லாமல் நிரந்தரமாக, படிப்படியாகக் குறைக்கும் வழி உள்ளதா?

நம் பாரம்பரிய வீட்டு உணவில் அனைத்துச் சத்துக்களும் சம அளவில் உள்ளன. அதைச் சரிவர சமைத்து உண்டால் போதும். இந்த டப்பாக்கள் ஒருபோதும் வீட்டு உணவுக்கு மாற்றாகாது. முடி உதிர் வதற்குப் பல காரணங்கள். எல்லா காரணங்களுக்கும் உங்கள் எண்ணெய் மட்டுமே தீர்வாகுமா?
உங்களால் இப்படி எல்லாம் தர்க்கரீதியாக யோசிக்க முடியும். ஆனால், அச்சம் விடாது. அந்தப் பொருளை வாங்க வைக்கும். இதுதான் மனதின் செயல்பாடு.

கோபமும் இதே போலத்தான். அந்த அமைச்சர் 1,000 கோடி ஊழல் என்று படித்தால், பற்றிக்கொண்டு வருகிறது. இளம் பெண் பாலியல் வன்முறை என்று செய்தி படித்தாலே, நெஞ்சு கொதிக்கிறது. காற்றில் உள்ள மாசு அதிக்கப்பட்டதாய் படித்தால், இதைக் கவனிக்காத அரசாங்கம் மேல் கோபம் வருகிறது. ஆனால், கோபம் இல்லாமல் யோசித்தால் இன்னமும் சரியாகச் சிந்திக்க முடியும்.

ஊழலைத் தடுக்க முதலில் நாம் செய்யும் சின்னச்சின்னத் தவறுகளைத் தவிர்க்கலாமே. வேலை நடக்க நாம் எவ்வளவு சமரசம் செய்கிறோம். அதை நிறுத்தலாமே.

பெருகி வரும் பாலியல் வன்முறைக்கு நாமும் ஒரு காரணமே. பெண்கள் பற்றிய சரியான மதிப்பீடுகளை நாம் வீட்டில் சொல்லி வளர்க்கிறோமா? பெண்களை பொருட்களாக விற்கும் சினிமா, விளம்பரங்கள் மற்றும் இதர ஊடகங்களை என்றாவது கண்டிக்கிறோமா?

காற்று மாசுபடுவதைத் தடுக்க வாகன ஓட்டத்தைக் குறைக்க நாம் என்ன செய்தோம்? ஆளாளுக்கு வண்டிகள் வாங்குவதுதான் மாசு ஏற்படக் காரணம் என்று உணர்ந்தால், அரசு மீது மட்டும் கோபம் வருமா?

குற்றங்கள் அனைத்துக்கும் காரணம் அச்சத்தில், கோபத்தில் நொடிப்பொழுதில் செயல்பட்டதே. சம்பவங்களுக்கு எதிர்வினை செய்யும் முன், ஒரு முழு நிமிடம் யோசியுங்கள். உடனடி உணர்வுக்குத் தீனியாகாமல், உங்கள் வாழ்க்கையைப் பகுத்தறிவுக்குத் திருப்புங்கள். இது ஒரு முயற்சி. இது ஒரு பரிணாம வளர்ச்சி. செய்துபாருங்களேன். அச்சமும் கோபமும் விலக விலக, மனம் மலரும். வாழ்க்கை வசப்படும்!

- மாறுவோம்!