Published:Updated:

கனவுகள் உங்கள் சாய்ஸ்!

கனவுகள் உங்கள் சாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவுகள் உங்கள் சாய்ஸ்!

லூசிட் டிரீம் அறிவோம்

கனவுகள் உங்கள் சாய்ஸ்!

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன், தன்னுடைய இளம் வயதில் கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில், அவர் ஒரு மலையில் இருந்து மிக வேகமாக இறங்குகிறார். சாதாரண வேகம் அல்ல... ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார். அந்த நேரத்தில், நட்சத்திரங்களின் தன்மை மாறுவதை அவர் காண்கிறார். விழிப்புக்கு வந்த பிறகு இதைப் பற்றி சிந்தித்து, ஓர் கோட்பாட்டை வகுக்கிறார். அதுதான், அறிவியல் உலகம் இன்றும் கொண்டாடும் ‘சார்பியல் கோட்பாடு (principle of relativity).’

‘கண்ணைத் திறந்துவைச்சுட்டு கனவு காணுறான்’ என்று சொல்வார்கள். எல்லோருமே இப்படிக் கனவு காண்பது உண்டு. ஆனால், ஒரு சில விநாடிகளில், அது கனவு என்று நினைவுக்குத் திரும்பிவிடுவோம். ஆனால், நினைவுக்குத் திரும்பாமல், அந்தக் கனவுலகத்தில் சிறிது நேரம் உலா வந்தால், எப்படி இருக்கும்?

கனவுகள் மகிழ்ச்சி தருவதாகவும், கோபப்படுத்துவதாகவும், பயமுறுத்துவதாகவும், என்ன உணர்வு எனக் கணிக்க முடியாததாகவும் இருக்கலாம். கனவுகளில், அச்சுறுத்தும் கனவு (Night-mare), மீண்டும் மீண்டும் வரும் கனவு (Recurring), லூசிட் (Lucid) என மூன்று வகை உள்ளன. முதல் இரண்டு, நாம் பெரும்பாலும் அறிந்ததும் அனுபவிப்பதுமே... இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது... பங்கேற்க மட்டுமே முடியும். ஆனால், லூசிட் கனவை நாம் கட்டுப்படுத்தலாம்.

கனவுகள் உங்கள் சாய்ஸ்!

லூசிட் என்றால் ‘தெளிவு’ என்று பொருள். கனவு காணும்போது, அது கனவுதான் என்ற தெளிவோடும் விழிப்போடும் கனவு காண்பதே லூசிட்  டிரீமிங். லூசிட் டிரீமிங் மூலம், நாம் கனவில் பறக்கலாம், நமக்கு வேண்டிய கதாபாத்திரங்களை வரவைக்கலாம். எதிரே சிங்கமே வந்தாலும், அதில் ஏறி சவாரி செய்யலாம்.  எளிமையாகச் சொன்னால், நம் மனம் விரும்புவதை, அதன் இஷ்டம் போல் நாம் செய்யலாம். இங்கு எந்த சட்டதிட்டமோ, உலக விதி முறைகளோ பொருந்தாது.

இப்படி கனவு காண்பதால் என்ன நன்மை இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். இதிலும், நமக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக, நம் பயத்தைப் போக்கலாம். நம்மை அச்சுறுத்தும் கனவுகளில் இருந்து விடுபடலாம்.

யார் வேண்டுமானாலும் லூசிட் டிரீமிங் செய்யலாம். முறையான பயிற்சி இருந்தால், இதைத் துல்லியமாக நிறைவேற்ற முடியும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும் நமக்குப் பிடித்த செயலை, பிடித்த சூழலில் முழு சுதந்திரத்தோடு செய்யவும் லூசிட் டிரீமிங் வழி வகுக்கும். பெரும்பாலும் யோகிகள், புத்த மத லாமாக்கள், தென் அமெரிக்க ஷமன்கள் இதுபோன்ற கனவு உலகில் இருப்பர். இதனால், லூசிட் டிரீமிங் பற்றி அறிந்த பலரும், இவர்களைத் தேடிச்சென்று கற்றுக்கொள்கின்றனர்.

லூசிட் டிரீமிங் எந்தெந்த வகையில் நமக்கு உதவுகிறது?

லூசிட் டிரீம் என்பதைக் கிட்டத்தட்ட ஓர் ஒத்திகை போல பயன்படுத்த முடியும். நாளை தேர்வு உள்ளது என்றால், லூசிட் டிரீமிங் மேற்கொள்பவர்கள், முந்தைய இரவுத் தூக்கத்தில் வரும் கனவிலேயே அந்தத் தேர்வுக்கான ஒரு மாதிரியை ஒத்திகைபார்த்துக்கொள்ள முடியும். அலுவலக பிரசென்டேஷன், மேடையில் பாடுவது, பேசுவது, நடனம் ஆடுவது போன்றவற்றை லூசிட் டிரீமில் ஒத்திகை பார்த்து மேடை பயத்தைப் போக்கலாம்.

எப்படி லூசிட் டிரீமிங் செய்வது?

நன்கு சௌகரியமாகப் படுத்துக்கொள்ள வேண்டும். நாம் மிகவும் அசதியாக இருக்கும் நேரம் இது நன்றாகச் செயல்படும். கைகளை பக்கவாட்டில் வைத்து, கண்களை மூடி அசையாமல் படுத்திருக்க வேண்டும். கண்கள் மூடியிருந்தாலும், தூங்காமல் விழித்திருக்க வேண்டும்.

நம் மூளை தூங்கத் தயாராக இருக்கிறாயா? என்று நம் உடலுக்கு சிக்னல்கள் அனுப்பும். இந்த சிக்னல்கள், கை கால்களில் ஓர் அரிப்பாகவோ, திரும்பிப் படுக்கத் தூண்டுவதாகவோ, கண்களை சிமிட்டச் செய்வதாகவோ இருக்கலாம். இவை அனைத்தையும் புறக்கணித்துவிட வேண்டும். கேட்பதற்கு இவ்வளவு ஸ்டெப்ஸ் இருக்கிறதே என்று தோன்றினாலும், செயல்படுத்துவது மிகவும் சுலபம் 20-30 நிமிடங்களுக்குப் பின், நம் மார்புப் பகுதியில் மூச்சுவிடும் அசைவுகளைக்கூட நாம் உணர முடியும். உடலில், வயிற்றில் ஏற்படும் ஜீரண சப்தங்கள்கூட கேட்கும்.

கனவுகள் உங்கள் சாய்ஸ்!

நாம் இப்போது உடல் ஆற்றல் இழந்த நிலையில் இருக்கிறோம். நம் கண்களைத் திறந்தால், நாம் தூங்கும் முன்பு அதிகம் சிந்தித்தவை நம் கண் முன் எண்ணங்களாக ஓடும். ஆனால், நம் உடலை அப்போது அசைக்க முடியாது. சிலர் கண்களைத் திறந்துகொண்டே கனவு காண்பதைப் பார்த்திருப்போம், கிட்டத்தட்ட அதுபோலத்தான் இதுவும். அப்படியே கண்களை மூடிக்கொண்டால், நம் கனவு துவங்கிவிடும். நாம் கனவுதான் காண்கிறோம் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நாம் கனவினை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்.

எப்போது அதிகக் கனவுகள் வருகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும். ரெம் (REM-Rapid Eye Movement) எனும் வேளையில்தான் அதிகபட்சக் கனவுகள் வரும். அது நாம் காலையில் விழிப்பதற்கு சில மணி நேரம் முன்போ அல்லது மதிய உறக்க வேலையிலோதான் அதிகம் நிகழும். அந்த வேளையைக் குறிவையுங்கள். ரெம் தூக்கம் பெரும்பாலானோருக்கு காலை ஐந்து முதல் ஏழு மணி அளவில்தான் நிகழும். அப்போது, எழுந்து கொஞ்சம் வீட்டுக்கு உள்ளேயே நடந்துவிட்டு, கொஞ்சம் ஏதேனும் படித்துவிட்டு மீண்டும் தூங்கிவிடலாம். தூங்கும் முன், ‘நான் லூசிட் டிரீமிங் செய்யப்போகிறேன் என்பது எனக்குத் தெரியும்’ எனச் சொல்லிவிட்டுத் தூங்க வேண்டும்.

லூசிட் டிரீமிங்கின் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

நாம் பயப்பட, உலகில் ஒன்றுமே கிடையாது. எந்தத் துன்பமும் நம்மை வந்து சேரப்போவது இல்லை. எந்த உயரத்தில் இருந்தும் குதிக்கலாம். ஒன்றும் ஆகாது.

உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகம் ஆர்ப்பரித்தால், விழித்துக்கொள்வோம். அமைதியாகக் கனவைக் கையாள வேண்டும்.  கனவில் வரும் இந்த இடத்துக்கு நாம் ஏற்கெனவே வந்துள்ளோம் என்பதுபோல பாவிக்க வேண்டும்.       

நம் கற்பனை எவ்வளவு தூரம் போகுமோ, அவ்வளவு தூரம் நம் கனவுகளும் நீளும்.

- மு.சித்தார்த் , படம்: மா.பி.சித்தார்த்

லூசிட் கனவு காண வகுப்பு!

கனவுகள் உங்கள் சாய்ஸ்!
கனவுகள் உங்கள் சாய்ஸ்!

மேற்கத்திய நாடுகளில் லூசிட் டிரீமிங் வகுப்புகள் உள்ளன. சரியான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு, நம் பயங்களையும் தடைகளும் தாண்டி வர லூசிட் டிரீமிங்கை ஒரு கருவியாகப் பயன் படுத்திக்கொண்டால், தியானத்தைப் போல, இதுவும் ஒரு சிறந்த பயிற்சியே. நிக்கோலா டெஸ்லா, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சல்வேடார் டாலி, ஜேம்ஸ் கேமரூன் போன்ற சாதனையாளர்கள் லூசிட் டிரீமர்களே!

நன்மை தீமைகள்!

நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் லூசிட் டிரீமிங்கும் நன்மை தீமைகளைக் கொண்டுள்ளது.

நன்மைகள் 


வீரதீரச் செயல்களுக்கும் ஆரவாரத்துக்கும் பஞ்சம் இருக்காது.

நடைமுறை வாழ்க்கையில் நாம் புதிதாகச் செய்யப்போகும் செயலை லூசிட் டிரீமிங்கில் செய்து ஒத்திகை பார்த்துக்கொள்ளலாம். (ஒருவரிடம் நம் காதலைக் கூற வேண்டும் என்றால்கூட, அதை நாம் ஒத்திகை பார்த்துக்கொள்ளலாம். இது நம் தைரியத்தையும் நம்பிக்கையையும் கூட்டும்)

நாம் கனவுதான் காண்கிறோம் எனும் உணர்வுநிலைக்கு முன்னேறி, நம் பயங்கள் எல்லாம் மறைந்துவிடும்.

பிரச்னைகளை நேரடியாக அணுகாமல், லூசிட் டிரீமிங் செய்து, அதிலேயே ஒரு தீர்வுக்கு வந்துவிட்டு, நிதர்சனத்தில் அந்தப் பிரச்னையை நம்பிக்கையோடு கையாளலாம்.

தீமைகள்

அதிகமாக லூசிட் டிரீமிங் மேற்கொள்ளுதல், நம்மை அதற்கு அடிமைப்படுத்தி, நம் தூக்க நேர அமைப்புகளைப் பாதிக்கும். இதனால், உடல் நல மாற்றங்கள் ஏற்படும்.

லூசிட் டிரீமிங் என்பது நம் ஊரில் அதிகம் அறியப்படாத விஷயம். நம் லூசிட் டிரீமைப் பகிர்ந்துகொள்ள, ஒரு நண்பன் இல்லை என்றால், தனிமைப்படுத்தப்படும் உணர்வு வந்துவிடும்.

தூக்கத்தில் ஆற்றல் இழந்த நிலை ஒரு முக்கியப் பிரச்னை. நாம் விழித்திருந்தாலும், உடல் உறக்கத்திலேயே இருக்கும். லூசிட் டிரீமிங் செய்யும்போது, நாம் தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் பயணிப்போம்.

கனவில் கண்ட கணித மேதை!

கனவுகள் உங்கள் சாய்ஸ்!

ஐன்ஸ்டீன் மட்டும் அல்ல... நம் நாட்டின் பெருமிதம், கணித மேதை ராமானுஜமும்கூட இப்படிக் கனவு கண்டவர்தான். “தூங்கும்போது எனக்குள் இயல்புக்கு மாறான அனுபவம் ஏற்படுகிறது. பாயும் ரத்தத்தில் இருந்து ஒரு திரை தோன்றுகிறது. திடீரென ஒரு கை பல்வேறு கணக்குகள், தீர்வுகளை அந்தத் திரையில் எழுதுகிறது. அவற்றை அப்படியே என் மூளையில் பதியவைக்கிறேன். விழித்ததும் அது பற்றி ஆய்வுசெய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அவர் வாழ்ந்த அந்த குறுகிய காலத்தில் 3000-க்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்களை வகுத்துள்ளார்.