
ஓவியம்: ஸ்யாம்

தாம்பத்யம் தொடர்பாக ப்ரியா மனதில் மரம் போல வளர்ந்திருந்த தவறான எண்ணங்கள்தான் பிரச்னைக்குக் காரணம் என்பதை இருவரிடமும் மருத்துவர் விளக்கினார். “உங்க ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. பிரச்னை இருப்பதை உணர்ந்ததுமே சரியான மருத்துவரிடம் நீங்கள் சென்றிருக்க வேண்டும். பாலியல் பிரச்னைகளைப் பற்றி விரிவாகப் படித்த, அதில் ஸ்பெஷலிஸ்ட்டான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தால், ப்ரியாவுக்கு மைனர் சர்ஜரிகூட செய்ய வேண்டி இருந்திருக்காது. ப்ரியாவுக்கு இருப்பது வெறும் பயம்தான். இதைப் போக்க சில மனநல தெரப்பி கொடுக்க வேண்டும். இந்த பயத்தை ஒரே நாளில் போக்கிவிட முடியாது. இதுக்கு மாத்திரை, மருந்து எல்லாம் தேவை இல்லை. சிகிச்சை முடியும் வரை ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல், சப்போர்ட்டிவா இருக்க வேண்டும்” என்று சொல்லி அனுப்பினார்.
அடுத்த சில நாட்களில் ப்ரியாவுக்கான சிகிச்சை தொடங்கியது. ப்ரியாவுக்கு அவரது பயத்தைப் போக்கும் வகையில் ஆலோசனைகள் சொல்லிவிட்டு, சைக்கோதெரப்பி, பிஹேவியர் மாடிஃபிகேஷன் தெரப்பி, சப்போர்ட்டிவ் தெரப்பி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பயத்தை நீக்கும் சில செயல்முறைப் பயிற்சிகளை மருத்துவமனையில் வைத்தே செய்யும்படி ப்ரீத்தமுக்கும் சொல்லித்தரப்பட்டது. இதை வீட்டில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லி அனுப்பினர். இப்படி, ஒன்றரை மாதத்தில் நான்கு ஐந்து முறை மட்டுமே மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற்றுச் சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாக ப்ரியாவுக்கு இருந்த பயம் விலகியது.
ஒருசில மாதங்கள் சென்றன. இப்போது, இருவருக்கும் இருந்த ஈகோ நீங்கியது. இதனால் சண்டை மறைந்தது. மகிழ்ச்சியாக இல்லறத்தில் ஈடுபட்டனர். திருமணத்துக்கு முன்பு, ‘ஒரு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்’ என்று அவர்கள் செய்திருந்த பிளானிங் எல்லாவற்றையும் மறந்தனர். இப்போது ப்ரியா கர்ப்பமாக இருக்கிறார்.

ஏன்? எதற்கு? எப்படி?
செக்ஸ் பிரச்னையை உடல்ரீதியானது, மனரீதியானது என இரண்டாகப் பிரிக்கலாம். இதில், ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில், பொதுவான பாலியல் பிரச்னைகளைப் பற்றி பார்க்கலாம்.
இதர பிரச்னைகள்
பொதுவாக, தாம்பத்திய உறவு என்பது எதிர் பாலினத்தை அணுகுவதாக இருக்கும். சிலருக்கு, எந்தப் பாலினத்துடன் தாம்பத்திய உறவுகொள்வது என்பதில் பிரச்னை ஏற்படலாம். இவர்களுக்கு, இதில் குழப்பம் ஏற்படும். ஒரே பாலினத்துக்குள் உறவுகொள்வது என்று இதைச் சொல்கிறோம். ஹோமோசெக்ஸ்வாலிட்டி, லெஸ்பியனிசம், பைசெக்ஸ்சுவாலிட்டி என்று இதைப் பிரிக்கலாம். சிலருக்குத் தங்கள் பாலினத்தன்மை மீதே சந்தேகம் வரும். மூன்றாவது பாலினம் என்று இப்போது சொல்கிறோம் அல்லவா? ஆணாகப் பிறந்து, தன்னை ஒரு பெண்ணாக பாவித்து, பின்னர் பெண்ணாக மாறுவது. உடலில் ஏற்படக்கூடிய பாலியல் சார்ந்த மாறுபாடுகள் (ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி போன்றவை) செக்ஸ் டெக்னிக்கைத் தவறாகப் பயன்படுத்துதல் (இதனால் குழந்தையின்மை) மற்றும் இயல்புக்கு மாறான செக்ஸ் நடத்தை எனப் பிரச்னைகளை வகைப்படுத்துகிறோம்.
இந்தத் தொடரைப் படித்துவருவதன் மூலம், செக்ஸ் செயல்பாடு என்பது வெறும் உடல் சார்ந்தது இல்லை என்பதைப் புரிந்திருப்பீர்கள். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்வுக்கு மனமும் மிக முக்கியப் பங்காற்றுவதை ப்ரியா - ப்ரீத்தம் சம்பவத்தைப் படிக்கும்போது புரிந்திருக்கும். எந்த அளவுக்கு உடல் செயல்பாடு முக்கியமோ, அந்த அளவுக்கு மனமும் இணைய வேண்டும். தாம்பத்தியம், உடலுறவு என்பது யாரோ சொல்லிக்கொடுத்துத் தெரிவது இல்லை. நாம் கற்பதில் இருந்து மட்டுமே அனுபவத்தைப் பெற முடியும். மொத்தத்தில், செக்ஸ் என்பது வெறும் உடல் உறுப்பு சார்ந்தது இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூகம், கலாசாரம் என்று பல காரணிகள் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
டவுட் கார்னர்
“ஒவ்வொரு முறை தாம்பத்திய உறவின்போதும், பெண்கள் உச்சத்தை அடைய வேண்டும் என்பது கட்டாயமா?”
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், கோயம்புத்தூர்.
“அப்படி கட்டாயம் ஏதும் இல்லை. உண்மையில், பல பெண்கள், ஒவ்வொரு முறை தாம்பத்திய உறவின்போதும் உச்சத்தை அடைவதே இல்லை. இருப்பினும், அந்த தாம்பத்திய உறவிலேயே அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். சில பெண்களுக்கு, ஃபோர்பிளே எனப்படும் தாம்பத்திய உறவுக்கு முன்பு மேற்கொள்ளும் கிளர்ச்சி நடவடிக்கைகளின்போதோ அல்லது ஆண் உச்சம் அடைவதற்கு முன்போகூட, உச்சம் வந்துவிடுவதும் உண்டு. பெண்ணின் திருப்தியான மற்றும் முழுமையான தாம்பத்திய உணர்வுக்கு உச்சம் என்பது ஒரு பொருட்டு அல்ல.”

“எனக்கு எளிதில் விந்தணு வெளிப்படும் பிரச்னை இருக்கிறது. விந்தணு சீக்கிரம் வெளிப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏதோ டெக்னிக் உள்ளது என்று இணையத்தில் படித்திருக்கிறேன். ஆனால், அது எனக்குச் சரியாகப் புரியவில்லை. அந்த டெக்னிக் பலன் தருமா? அது பற்றி சொல்ல முடியுமா?”
பி.செந்தில், கரூர்.
“முன்கூட்டியே விந்தணு வெளிப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல், டெக்னிக் என்று கண்மூடித்தனமாக இருப்பது தவறு. இருப்பினும், நீங்கள் கேட்டதால் அந்த நுட்பத்தைப் பற்றி சொல்கிறேன். இதற்கு ஸ்க்வீஸ் நுட்பம் (Squeeze Technique) என்று பெயர். இதை ஸ்டார்ட், ஸ்டாப் நுட்பம் என்றும் சொல்லலாம்.
இந்த செயல்முறையில், மனைவி தன் கணவனின் ஆண் உறுப்பைக் கைகளால் தொட்டுத் தூண்ட வேண்டும் அல்லது மாஸ்டர்பேஷன் எனப்படும் சுயஇன்பம் செய்வதைப் போல செய்ய வேண்டும். கிட்டத்தட்ட உச்சத்தை அடைந்து, விந்தணு வெளிப்படும் நேரத்தில் அது கணவனுக்குத் தெரியவரும். அடுத்த விநாடியே தூண்டுதலை நிறுத்தும்படி மனைவியிடம் சொல்லி, மிகத் துல்லியமாகத் தூண்டலை நிறுத்திவிட்டு, விரைப்பாக உள்ள ஆண் உறுப்பின் நுனியில் தோல்சேரும் பகுதியில் (Frenulum) விரல்களால் ஒரு சில விநாடிகள் அழுத்தி, வேகத்தைக் குறைக்க வேண்டும். இப்படிச் செய்வது, விந்தணு வெளிப்படுவதை நிறுத்தும். விந்தணு வெளிவருவது நின்ற உடன் இதை மீண்டும் செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவரும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, விந்தணு முன்கூட்டியே வெளிவருவது பழக்கத்தினால் கட்டுப்படும். உங்கள் பிரச்னைக்கு இந்த ஸ்க்வீஸ் நுட்பம் மட்டும் முழுமையான தீர்வாக நினைத்து இருந்துவிட வேண்டாம். மருத்துவர் அளிக்கும் சிகிச்சையில் இது ஒரு பகுதி மட்டுமே என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.”
“எனக்கு பாலியல் குறைபாடு உள்ளது. ஆனால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற தயக்கமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. சுய உதவி புத்தகங்கள் பல சந்தையில் இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் இணையத்தில் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பின்பற்றிக்கொள்கிறேன் என்கிறேன். ஆனால், என் மனைவி மருத்துவமனைக்கு வரும்படி வற்புறுத்துகிறார். என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் தகிக்கிறேன். நான் என்ன செய்யட்டும் டாக்டர்?”
எஸ்.பன்னீர்செல்வம், மதுரை.
“கடையில் ஒரு ஏ.சி, டி.வி வாங்குகிறோம். இதை எப்படிப் பொருத்த வேண்டும், எப்படி இயக்க வேண்டும் என்று விளக்கக் குறிப்பு புத்தகம் தருகிறார்கள். அதுவே, பழுதடைந்துவிட்டால், அந்த புத்தகத்தை வைத்து நம்மால் பழுது நீக்க முடியாது. என்னைப் பொருத்தவரை அந்தக் குறிப்பு புத்தகம் போன்றதுதான் இந்த சுய உதவி புத்தகங்கள், தகவல்கள் எல்லாம். இந்தப் புத்தகம் எல்லாம் பாலியல் மண்டலம் எப்படிச் செயல்படுகிறது, அதில் ஏற்படக்கூடிய பிரச்னை என்ன? பொதுவாக, ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு விளக்கம் என்று ஒரு தெளிவைத் தரலாம். இவை எல்லாம் பொதுவான பிரச்னைகள் அடிப்படையில் தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு நபருக்கும் பிரச்னை வேறுபடும். எனவே, அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கும் தகவல் ஒருவருக்கு அப்படியே பொருந்தும் என்று இல்லை. இவை எல்லாம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டவை. ஒரு பயிற்சிபெற்ற மருத்துவருக்கு மாற்றாக இவை இருக்க முடியாது. உங்களுக்கு உள்ளதுபோல பலருக்கும் பாலியல் தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் வெவ்வேறாக இருக்கலாம். எனவே, ஒரு நல்ல பாலியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது. இதில் தயக்கமோ, வெட்கமோ தேவை இல்லை.”
“எங்களுக்குத் திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகின்றன. தாம்பத்தியத்தில் எந்தக் குறைவும் இல்லை. ஆனால், என் வெஜைனாவுக்கு வெளியே அவர் விந்து திரவத்தை வெளியிடுகிறார் என்று நினைக்கிறேன். நிறைய விந்து வெளியே வந்துவிடுகிறது. இது தவறா? இதனால், எங்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?”
எஸ்.தேவி பிரியா, தஞ்சாவூர்.
“பொதுவாக, எல்லா தம்பதிகளுக்கும் நடக்கக்கூடிய நிகழ்வுதான் இது. பொதுவாக, தாம்பத்திய உறவின்போது, விந்து திரவத்தில் உள்ள விந்தணுக்கள் வெஜைனாவில் தங்கி, நீந்தி பயணித்து கர்ப்பப்பையை அடையும். விந்து திரவத்தில் இருந்து விந்தணு வெளியேறிய பிறகு, மீதம் உள்ள விந்து திரவம் தன் பணியை முடித்துவிட்டதனால், புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப வெளியேறும். இதனால், குழந்தைப்பேற்றில் பாதிப்பு வந்துவிடாது. விந்தணுவின் எண்ணிக்கை, துடிப்புடன் இருக்கும் விந்தணுக்களின் அளவு, அதன் அமைப்பு போன்றவை நல்லதாக இருந்தால் போதும்.”
“என் மனைவியுடன், வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறேன். நீண்ட நேரம் இது நீடித்தாலும், இதுவரை அவள் உச்சம் அடைந்தது இல்லை. ஏதாவது பிரச்னையா?”
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.
“இதற்கு நீங்கள் இருவரும் நடந்துகொள்ளும் விதம் அல்லது உங்கள் மனைவிக்கு உள்ள பிரச்னை என்று இரண்டு வகையான காரணங்கள் இருக்கலாம். இதில் முக்கியமானது, மிகக் குறுகிய ஃபோர்பிளே. சிலருக்கு, உடலுறவுகொள்வது என்பதே தவறானதாகத் தோன்றலாம். இதனால், அவர்களுக்குக் குற்ற உணர்ச்சி மேலோங்கி, மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். மனஅழுத்தம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க எடுத்துக்கொள்ளும் மாத்திரை போன்ற சில மருந்துகள் காரணமாகவும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். மனஅழுத்தம், பதற்றம் போன்ற மனநலம் தொடர்பான பிரச்னை, தளர்வான வெஜைனா, இருவருக்குமான உறவில் பிரச்னை, உடல் சோர்வு, கவனச்சிதறல், நீண்ட உடல் நலக் குறைபாடு, விரைப்புத்தன்மை பிரச்னை, முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் என்று பல காரணங்கள் உள்ளன. எதனால், பிரச்னை என்று பார்த்து சிகிச்சை எடுப்பது நல்லது.”
- ரகசியம் பகிர்வோம்!