
ஹெல்த்தி ஷாப்பிங்
மனதுக்கு அமைதி தருவதில், செடிகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. தோட்டம் அமைத்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, பராமரிப்பது போன்றவற்றைச் செய்துவந்தால், மனஅழுத்தத்தில் இருந்து மனம் விடுபடும்; உடல் ஆரோக்கியமும் கூடும். இதற்குப் பெரிய இடம் தேவை இல்லை. சின்னச்சின்னத் தொட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட், காலி கோலா பாட்டிலில்கூட செடி வளர்க்கலாம். இதனால், நம் வீடு அழகாகவும் தூய்மையாகவும் இருப்பதுடன், ஃபிரெஷ் காற்றும் கிடைக்கும்.
வாட்டர் ஃபெர்ன்ஸ் (Water ferns) 10 செடிகள் - ரூ 30/-

தண்ணீரிலே படர்ந்து வளரும் செடிகள். இதற்கு மண் தேவை இல்லை. சூரிய ஒளி குறைவாகப் படும் பால்கனி, ஜன்னல் ஓர இடங்களில் வைக்கலாம். ஒன்று இரண்டு செடிகளை வைத்தாலே போதும், அப்படியே படர்ந்துவிடும். இதில் மீன்களையும் விடலாம்.
சிங்கோனியம் (Syngonium) - ரூ 20-50/-

சுத்தமான காற்றை நமக்குத் தரும். காற்றைச் சுத்திகரிப்பான் என்றே சொல்லலாம். சுத்தமான காற்றைச் சுவாசிப்பதால், சுவாசப் பிரச்னைகள் ஓரளவுக்குத் தடுக்கப்படும்.
சான்செவியெரியா (Sansevieria) - ரூ 100-200/-

வீட்டில் உள்ள காற்றைச் சுத்தம் செய்யும். பெட்ரூம், வரவேற்பறை என எங்கும் வளர்த்திட நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக மாறும்.
பெட்டுனியா (Petunia) - ரூ 50/-

கண்ணாடித் தொட்டி, கிண்ணத்தில் மண் கொட்டி வளர்க்கலாம். அழகுக்காகப் பயன்படுத்தப்படும் செடி இது. கணினி அருகில்வைத்து, அடிக்கடி பார்க்க, கண்களில் ஈரப்பதம் உலர்வது தடுக்கப்படும்.
லோட்டஸ் பாம்பூ (Lotus bamboo) - ரூ 150-450/-

ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம். மின்விசிறிக்குக் கீழ் வைக்கக் கூடாது. அலுவலகம், வீட்டு மேஜைகளில் அலங்காரப் பொருளாகவும் வளர்க்கலாம்.
பேபி டியர்ஸ் (Baby tears) - ரூ 50/-

வீட்டு பால்கனியில் தொங்கவிடலாம். குறைவான சூரிய ஒளிபடும் இடங்களில் வைப்பது நல்லது. பச்சை நிறப் போர்வையாக வீட்டில் பரவும். அழகும் நல்ல மனநிலையும் தரும்.
கிரிப்டான்தஸ் (Cryptanthus) - ரூ 50-100/-

இதற்கு, சூரிய வெளிச்சம் தேவை. ஜன்னல் ஓரம், பால்கனியில் வளர்க்கலாம். இதுவும் காற்று சுத்திகரிப்பான்தான். இது வளரும் இடம் ஈரப்பதமாக மாறும், அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்கும்.
டிஸ்சிடியா (Dischidia) - ரூ 150-600/-

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும். இது வளரும் இடம் குளிர்ச்சியாக இருக்கும். இதையும் சூரிய ஒளி குறைவாகப் படும் இடங்களில் வைக்க வேண்டும்.
ஃபிலொடெண்ட்ரான் பிளாக் மினி (Philodendron black mini) - ரூ 50-250/-

மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றலாம். தேங்காய் நாரிலே வளரக்கூடியது. வீடுகளில், எங்கு வேண்டுமானாலும் வளர்க்க முடியும். காற்றைச் சுத்தப்படுத்தும்.
- மினு
படங்கள்: எம்.உசேன்
உதவி: சாரல் கார்டன்ஸ், முட்டுக்காடு, சென்னை